2003ம் ஆண்டிலிருந்து பிரபாகரனது பெற்றோரின் பெயர் எச்சரிக்கை பெயர்ப்பட்டியலில்.
கடந்த ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசின் கோரிக்கையின் பேரில் பிரபாகரனின் பெற்றோர் வேலுப்பிள்ளை மற்றும் பார்வதி அம்மாள் ஆகியோர் இந்தியாவுக்குள் நுழைய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதன் பேரில்தான் பார்வதி அம்மாளின் பெயர் எச்சரிக்கைப் பட்டியலில் சேர்க்கப்பட்டு குடியேற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால்தான் பார்வதி அம்மாளை விமானத்திலிருந்து இறங்கக் கூட அனுமதிக்காமல் குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் திருப்பி அனுப்பி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
இந்தியத் தூதரகம் விசா அளித்தும் கூட பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. பார்வதி அம்மாளின் பெயர் மத்திய அரசின் எச்சரிக்கை பட்டியலில் இடம் பெற்றுள்ளதாம். அதாவது இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளோர் இந்தியாவுக்குள் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளவர்கள் விசா கோரி விண்ணப்பித்தால் அது குறித்து சம்பந்தப்பட்ட தூதரக அதாகரிகள், உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்த பின்னரே விசா வழங்க வேண்டும்.
பார்வதி அம்மாளின் பெயர் எச்சரிக்கைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள நிலையில் அவருக்கு மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம் மருத்துவ விசாவை வழங்கியுள்ளது. அப்படியானால் விசா வழங்குவதற்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அது ஆலோசனை கேட்டிருக்க வேண்டும்.
பார்வதி அம்மாளுக்கு விசா தரப்பட்டிருப்பதால், உள்துறை அமைச்சகத்திடம், மலேசிய இந்தியத் தூதரகம் ஆலோசித்திருக்க வேண்டும் என்று கருத வேண்டியுள்ளது. அப்படி இருந்தால், ஏன் சென்னைக்கு வந்த பார்வதி அம்மாளை இறங்க அனுமதிக்காமல் குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் திருப்பி அனுப்பினார்கள் என்று புரியவில்லை.
இதுகுறித்து குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், பார்வதி அம்மாளும், வேலுப்பிள்ளையும் 2003ம் ஆண்டு வரை திருச்சியில் தங்கியிருந்தனர். பின்னர் கொழும்பு திரும்பி விட்டனர். அதைத் தொடர்ந்து இருவரையும் மீண்டும் இந்தியாவுக்குள் அனுமதிக்க வேண்டாம் என அப்போதைய தமிழக அரசு மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது.
இதையடுத்து இருவரும் இந்தியாவுக்குள் நுழைய தடை விதித்த இந்திய அரசு அவர்களின் பெயர்களை எச்சரிக்கைப் பட்டியலில் சேர்த்தது. இன்று வரை பார்வதி அம்மாளின் பெயர் எச்சரிக்கைப் பட்டியலில் நீடிக்கிறது. இதன் பேரிலேயே அவர் திருப்பி அனுப்பப்பட்டார் என்று கூறுகின்றனர்.
2003ம் ஆண்டு தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment