1990 முதல் 2009 வரை புலிகள் ஆட்சியில்……நடந்த வன்கொடுமைகள்! – கிறேசியன்! (பாகம் -32,33,34)
2002 முதல் 2006 வரை ஒரு கோமாளித்தனமான ஆட்சியை நடத்தினார்கள் வன்னியில் புலிகள். யாழ்ப்பாணம் செல்லும் மக்களிடம் வரி அறவிட்டனராம். அது வரியல்ல வழிப்பறி. அந்தக் காலத்தில் நடைப்பயணம் போவோரிடத்தில் வழிப்பறி செய்வார்கள் 2002 முதல் 2006 வரை ஒரு கோமாளித்தனமான ஆட்சியை நடத்தினார்கள் வன்னியில் புலிகள். யாழ்ப்பாணம் செல்லும் மக்களிடம் வரி அறவிட்டனராம். அது வரியல்ல வழிப்பறி. அந்தக் காலத்தில் நடைப்பயணம் போவோரிடத்தில் வழிப்பறிசெய்வார்கள் கொள்ளையர்கள். அது போன்றதோர் கொள்ளையை 21ம் நூற்றாண்டில் செய்தனர் புலிகள். இந்தக் கொள்ளையை யாழ்ப்பாணத் தமிழர்களிடத்தில் அடித்தனர். தமிழரிடம் கொள்ளை அடிக்க சிங்கள அரசிடம் அனுமதி கேட்டனர் புலிகள். 150 ரூபா அலுமினியப் பானைக்கு 250 ரூபா வழிப்பறி வரி போட்டவர்கள் புலிகள்.
இவர்கள் ஏனைய இயக்கங்களை அழிக்க இலங்கை இராணுவம் இவர்களை ஒட்டுமொத்தமாக அழித்தது. அப்படி அழிக்கப்படும் போது உலகம் முழுவதும் பார்த்துக்கொண்டிருந்தது. இவர்கள் யாருக்கும் தெரியாமல் வதை முகாம்களில் வைத்துக் கொன்றனர் தமிழர்களை. இவர்களை படம் போட்டுக்காட்டிக் கொன்றனர் எதிரிகள்! இவர்கள் ஒரு கணக்குப் போட, கடவுள் வேறு கணக்குப் போட்டு வைத்திருந்துள்ளார் என்பதுதான் உண்மை!
என்னை இருபாலை காம்புக்குக் கொண்டு வந்து 15 மாதங்கள் கடந்து விட்டன. எங்களுக்கு திகதி நாள்காட்டி கிடையாது! பத்திரிகை கிடையாது. அன்று என்ன கிழமை என்று கூடத் தெரியாதிருந்தது. புதிதாக வருபவர்களிடம்தான் கிழமை திகதியைக் கேட்டுத் தெரிந்துகொள்வோம். அதனைக் கேட்டு தெரிந்து கொண்டும் எந்தவித நன்மையும் எட்டப் போவதில்லை.
இருபாலை முகாமைப்பற்றி வெளியிலிருக்கும் மக்கள் பரவலாக கதைக்கத் தொடங்கிவிட்டனர். இங்கே இளைஞர்களைக் கொண்டு வந்து கொலை செய்கிறார்கள் என்பது அச்செய்தியாகும். இச் செய்தி புலி விலங்குகளை எட்டியது. எனவே இந்த இடத்தை மாற்ற வேண்டும் என்ற முடிவை எடுத்தனர்.
ஒரு நாள் ஞாயிறன்று பிற்பகலில் எல்லாரும் தயாராகுங்கள் என்று கூறினர். நாங்கள் தயாராக வேண்டியதற்கு எதுவும் இல்லை. அதே கிழிந்த சறம், சேட் கிடையாது, அண்டவெயர் கிடையாது, கால்களில் சங்கிலி விலங்கு இவற்றுடன் ஆதிவாசிகள் போன்று அனைவரும் எழுந்து நின்றோம். நாங்கள் எழுந்து நின்றது மட்டும்தான் எங்களது தயாரிப்பு! இரவு ஏழு மணி வரை நின்று கொண்டே இருக்கிறோம், எதற்காக தயாராகுங்கள் என்று கூறினார்கள் என்பது தெரியாது. இறச்சிக்கடைக்கோ, அல்லது துணுக்காய்க்கோ அல்லது விடுதலைக்கோ என்பது எங்களுக்குத் தெரியாது.
இரவு எட்டுமணியளவில் 20க்கும் மேற்பட்ட விலங்குகள் வந்தனர். கறுப்புத் துணிகளால் கண்களைக் கட்டினர். பத்துப்பேர் ஏற்றக்கூடிய வாகனம் ஒன்றில் ஏற்றினர். வான் புறப்பட்டது. அரை மணி நேர ஓட்டத்திற்குப் பின்னர் ஓர் இடத்தில் நிறுத்தி இறங்கும்படி கூறினர், இறங்கினேன், கண்களின் கட்டுக்களை அகற்றினர், நடவுங்கள் என்றனர், நீளமாகக் கட்டப்பட்ட அறைகளைக் கொண்ட அந்த இடம் ஓர் சிறை என்பதைத் தெரியப்படுத்தியது.
எழு முதல் எட்டு அறைகள் கொண்டதாக இருந்தது. ஒரு அறையில் இருப்பவர்கள் மற்ற அறையைப் பார்க்க முடியாது தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டிருந்தன. அறையினுள்ளேயே கழிவறை கட்டப்பட்டிருந்தது. அதனால் கைதிகள் வெளியே வரவேண்டிய அவசியம் இருக்காது. உள்ளே போனால் போனதுதான், அடுத்த ஒரு மணி நேரத்தில் மேலும் பத்துப் பேர்வரை கொண்டு வரப்பட்டனர் இருபாலையிலிருந்து. அனைவரையும் ஒரே அறையில் போட்டுப் பூட்டினர். மறுநாள் காலையில் எழுந்ததும் அது எந்த இடம் என அடையாளம் காண்பதில் பல முயற்சிகள் செய்தும் பயனற்றுப் போனது. அந்த அறையிலிருந்து எந்த வெளிப்பகுதியையும் பார்க்க முடியாது இருந்தது. புதிதாகக் கட்டப்பட்ட கட்டிடம்தான்.
காலையில் இடியாப்பப் பார்சல் வழங்கப்பட்டது. உண்டபின் கம்பிக் கதவருகில் நான் இடம் பிடித்துக்கொண்டேன். வருவோர் போவோரை என்றாலும் பார்க்கலாம் என்ற நப்பாசையில் இடம் பிடித்து அமர்ந்தேன், 11மணியளவில் இரண்டு புலிவிலங்குகள் வந்து என்னுடைய இலக்கத்தையும் மேலும் இருவரது இலக்கத்தையும் அழைத்தனர்.
அலுவலகம் என்று சொல்லப்பட்ட இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கே ஓர் வெள்ளைத் தாளில் எழுதச் சொன்னனர். விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிராகச் செயல்பட மாட்டேன், ஈ.என்.டி.எல்.எப் இயக்கத்தில் இணைந்து செயல்படமாட்டேன், இது மட்டுமல்லாமல் எந்தவித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடமாட்டேன் என்றும் உறுதியளித்து கையொப்பமிடச் சொன்னார்கள், கையெழுத்திட்டேன்.
பின்னர் வேறு ஓர் வெள்ளைப் பேப்பரில் எனது விரல் அடையாளங்களையும் உள்ளங்கை அடையாளங்களையும் பதிந்து எடுத்தனர். பின்னர் மீண்டும் சிறை அறைக்குக் கொண்டுச் சென்றனர். இப்போது நானும் மற்றைய இருவரும் விடுதலை செய்யப்படுவோம் என்று நினைத்து உள்ளே இருப்பவர்களுடன் கதைக்கலானேன். அவர்களது வீடுகளுக்குச் சென்று சொல்கிறேன் என்று கூறி அன்று முழுவதும் காத்திருந்தோம். எந்தத் தகவலும் இல்லை.
இரவானதும் புட்டுப் பார்சல் சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்றோம். இரவு பத்துமணிக்கு மேல் மூன்று நான்கு பேர் எங்கள் அறையின் அருகில் வந்து பார்த்தார்கள். பின்னர் மறுபுறம் சென்றார்கள் அதில் வெள்ளையாக மீசை இல்லாமல் ஒருவரும் இருந்தார். அவர்கள் சென்றதும் அருகில் இருந்த ஒரு சகோதரர் கேட்டார் அந்த உயர்ந்த ஆள் யார் என்று தெரியுமா என்றார்! தெரியாது என்றேன், அவன்தான் பொட்டன் என்றார். ஓஹோ! இவர்தான் இந்தக் கொடிய சித்திரவதை விலங்குகளின் தலைவனோ! எங்கள் தமிழ் இளைஞர்களுக்கு இவர்கள் செய்துவிட்ட கொடுமைகள் இவரைச் சும்மா விடாதே என்று அப்போது மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.
இரண்டு நாட்கள் கடந்தன. மூன்றாம் நாள் இரவு ஏழுமணியளவில் துணுக்காயில் இருந்த வான்மீன் வந்தார். அவருடன் மேலும் இருவர் வந்தனர். என்னை வெளியில் அழைத்தனர். எனது கால்விலங்கில் பூட்டப்பட்டிருந்த பூட்டுக்கள் இரண்டையும் கழற்றினர். இப்போதும் நான் எனது கிழிந்த சறத்துடன்தான் இருந்தேன். இருப்பத்தி இரண்டு மாதங்களுக்கு முன்னர் என்னிடமிருந்து எடுத்த எனது சேட்டையும், நான் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் கொடுத்தனர். எனது அறைக்கு அடுத்த அறியிலிருந்த ஒருவரிடமிருந்து சறம் ஒன்றினை வாங்கித் தந்தார் வான்மீன். சறம் கொடுத்தவரை பார்த்து நன்றி சொல்ல இவர்கள் அனுமதிக்க வில்லை.
முன்னர் போன்று கசங்கிய சேட்டுடன் புறப்பட்டேன். அறையில் இருந்தவர்களிடம் விடைபெற்று வாசலுக்கு வந்ததும் மீண்டும் எனது கண்களைக் கட்டினர். வான்மீன் தனது சைக்கிளின் முன்புறத்தில் என்னை ஏற்றினார். சைக்கிள் பயணம் அரை மணித்தியாலத்தை தாண்டியது. இந்த அரைமணி நேரமும் அவர் ஏதோ இயக்கப்பாடலும் சினிமாப் பாடலும் கலந்து பாடிக் கொண்டே சைக்கிளை மிதித்துக் கொண்டு வந்தார். துணுக்காயில் சித்திரவதை செய்பவர்களின் தலைவனாக இருந்த வான்மீன், இப்போது என்னைச் சைக்கிளில் ஏற்றி பாட்டுப்பாடி மிதித்துக்கொண்டு வருகிறார். பதவி இறங்க என்ன காரணம்? கேட்கவா முடியும்!
ஓர் வீட்டின் முன் நிறுத்தி இறங்கும்படி கூறிய அவர் உள்ளே அழைத்துச் சென்றார். கண்கட்டை அகற்றினார். அந்த இடம் நல்லூர் சங்கிலியன் வீதியில் இருந்த அதே முகாம். அங்கும் வேறு சிலரை வைத்திருந்தனர். அவர்களுடன் எதுவும் கதைக்கக் கூடாது என்று கூறினார் வான்மீன். அந்த முகாமின் பொறுப்பாளராக முதலில் இருந்த அதே சூட் தான் இப்போமும் இருந்தார்.
அந்த வீட்டின் வெளி வராந்தையில் படுக்கச் சொன்னார்கள். இரவு 11மணியளவில் இரண்டு பேர் வந்தனர். இவனை ஏன் வெளியில் படுக்கவைத்துள்ளீர்கள், வெளியில் ஆம்ஸ் இருக்கு, உள்ளே படுக்கவையுங்கள் என்றனர். பின்னர் உள்ளே படுக்கவைத்தனர். உள்ளே ஆறு ஏழுபேர்வரை இருந்தனர். அவர்களிடமும் என்னுடன் கதைக்கக் கூடாது என்று கூறிவிட்டுச் சென்றனர்.
காலை 8.30 மணிக்கு என்னை அழைத்து நீங்கள் போகலாம், இனிமேல் எந்த இயக்கத்துடனும் தொடர்பு வைக்கக் கூடாது, தெரிய வந்தால் மண்டையில் போட்டுவிடுவோம் என்று சூட் கூறினார். விட்டால் போதும் என்று வெளியே வந்தேன். எனது வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அங்கிருந்து எனது வீடு மூன்றரை முதல் நான்கு கிலோ மீற்றர் வரும், கால்விலங்குகள் கழற்றப்பட்டதால் ஆகாயத்தில் பறப்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. எவ்வளவு தூரத்துக்கு எனது கால்களை எட்டி வைக்க முடியுமோ வைத்தேன்.
எதற்காக என்னைப் பிடித்து சித்திரவதை செய்தார்கள்? எதற்காக விடுவிக்கிறார்கள்? முட்டாள்களின் ஆட்சியில் இவை எல்லாம் நடக்கும் போலும் என்று நினைத்துக் கொண்டு ஆரியகுளம் வழியாக ஸ்ரான்லி வீதியில் நடக்கலானேன். மனித உறவுகள் நினைவிருக்கும் வரைதான்! மறதி பல நன்மைகளை மனித குலத்துக்குச் செய்துள்ளது. என்னுடன் இருந்தவர்களில் ஏனைய அனைவரையும் இறச்சிக்கடைக்குக் கொண்டு சென்றார்கள். அவர்கள் இப்போது என்னவிதமான சித்திரவதைகளை அனுபவிக்கிறார்களோ தெரியாது. நான் வீடு நோக்கி நடக்கிறேன்.
காலையில் வருவோர் போவோர் பற்றிய எந்த எண்ணமும் எனக்கிருக்க வில்லை, இருபாலை, இறச்சிக்கடை, புலி விலங்குகளது கொடுமை, எனது வீடு இவை பற்றியே எனது எண்ணங்கள் இருந்தன. எனக்கும் ஏனையோருக்கும் நடந்தவை போன்று தொடர்ந்தும் நடக்கத்தான் போகிறது. இதை எப்படி நிறுத்துவது. ஓன்றில் இன்னும் ஓர் இயக்கம் வளர்ந்து வரவேண்டும், அல்லது இந்தியா வரவேண்டும் அல்லது இலங்கை அரசு இவர்களைப் பிடிக்க வேண்டும். இலங்கை அரசு பிடித்தால் சித்திரவதை நிற்கலாம், உரிமைகள் பறிபோய்விடும்! எனவே இலங்கை அரசு பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் சரியானதல்ல!
பிறிது ஓர் இயக்கம் மக்களையும் உரிமைகளையும் மதிக்கக் கூடியதாக வளர்ச்சிப்பெற்று வரவேண்டும். அல்லது இந்தியா தனது உறுதிப்படி மீண்டும் வந்து மாநிலத்திற்கான அரசை ஏற்படுத்தி ஓர் நிர்வாகத்தை வகுத்து வழங்கவேண்டும் அல்லது ஐக்கிய நாடுகள் சபை எங்கள் பகுதிக்கு வந்து பிரச்சினைகளைத் தீர்த்து எங்கள் உரிமைகளை மீட்டு நிர்வாகத்தினை ஏற்படுத்த வேண்டும். இவை எதுவானாலும் ஒன்று நடந்தால்தான் தமிழர்கள் அச்சமின்றி வாழ முடியும், அதுவரை என்ன செய்வது? என்ற யோசனையுடன் எனது வீட்டு வாசலை அடைந்தேன்.
எனது மூத்த சகோதரிகள் என்னைக் கண்டதும் கட்டித் தழுவி அழுது வடிந்து பெரிய பிரளயத்தையே ஏற்படுத்தினர். நான் கொல்லப்பட்டுவிட்டேன் என்று பலரும் கூறியிருந்தனராம். ஆனால் சறம் கொடுக்கும் சம்பிரதாயம் நடைபெறாதபடியால் அவர்களுக்கு ஓர் நம்பிக்கை இருந்துள்ளது, நான் உயிருடன் இருப்பேன் என்று!
உலகத்தில் எந்த நாட்டிலாவது ஒருவர் கைது செய்யப்பட்டால், அவரது வீட்டுக்குத் தகவல் தெரிவிப்பார்கள், கடிதம் எழுத அனுமதிப்பார்கள், தொலை பேசி வசதிகூட செய்து கொடுப்பார்கள். உறவினரைப் பார்ப்பதற்கு அனுமதிப்பார்கள். ஆனால் சுதந்திரத்துக்காகப் போராடிய புலி விலங்குகளது ஆட்சியில்தான் தமிழ் இனத்தின் உரிமைகள் கால்களில் போட்டு மிதிக்கப்பட்டன.
பிடித்துச் செல்லப்பட்டவர்கள் உயிருடன் இருக்கின்றனரா இல்லையா என்று கூட தெரியாத நிலையில் அவர்களது உறவினர்கள் அலைவார்கள். அதைக் கண்டு ரசிப்பார்கள் புலிகள். விடுதலை கேட்டோம் சிங்கள ஆட்சியாளரிடமிருந்து, உயிர்ப்பிச்சை கேட்டனர் தமிழர்கள் புலி விலங்குகளிடமிருந்து! அப்படி ஓர் ஆட்சியை நடத்தி, இறுதியில் தமிழர்களை பலி கொடுத்தனர் சிங்கள இராணுவத்திடம்!
எனது தாயார் வீட்டில் இல்லை, எனது சகோதரியைப் பார்ப்பதற்காக மன்னாருக்குச் சென்றவர், திரும்பி வரமுடியாத நிலையில் சண்டை உச்சக் கட்டத்தை அடைய, எனது சகோதரியின் குழந்கைளைக் காப்பாற்ற அவர்களை அழைத்துக்கொண்டு படகேறி இந்தியா சென்றுவிட்டதாகச் சொன்னார்கள் சகோதரிகள். அன்று மதியம் உணவருந்தி நின்மதியாக உறங்கினேன் திண்ணையில்! நானும் இந்தியா செல்ல வேண்டும், அம்மாவைப் பார்க்க வேண்டும், இந்தப் புலிவிலங்குகளிடமிருந்து தப்பித்தால்தான் இந்தியா செல்லலாம், அதற்குப பணம் வேண்டும், எனது முதலாளி கொடுத்த தங்கச் சங்கிலி இருந்தது. அதை விற்று படகுக்குக் கொடுக்கத்தான் சரியாக இருக்கும். எதற்கும் உழைத்துக் கொஞ்சம் பணம் சேர்த்துக் கொண்டு இந்தியா செல்வோம் என்று தீர்மானித்தேன்.
மறுநாள் காலையில் எனது உறவினரான முதலாளியிடம் செல்வதென்று தீர்மானித்து அன்று இரவு முழுவதும் விழித்துக்கொண்டே கனவுகளுடன் உறவாடிக் கொண்டிருந்தேன். காலையில் உடலுக்கு நல்லெண்ணை தேய்த்து, சீயக்காய் வைத்து முழுகினேன். காலை உணவை முடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன் எனது உறவினர் வீட்டுக்கு.
தொடரும்…
(பாகம் -33)
எனது உறவினரான வில்சன் அவர்களைச் சந்தித்தேன். அவர் பல தடவைகள் புலிகளது அலுவலகம் சென்று எனது விடுதலைக்காகப் பலதரப்பட்ட தொல்லைகளை புலி விலங்குகளுக்குக் கொடுத்ததைப் பற்றிய விபரங்களைக் கூறினார். புலிகள் அவரை மிரட்டியது பற்றியும், அதற்கு அவர் பயந்துவிடவில்லை என்பதையும் தெளிவாகக் கூறினார். அத்துடன் தனக்கு இந்தத் தொழிலில் விருப்பம் இல்லை என்றும் இதைவிட்டுவிட்டு வெளிநாடு செல்லப்போவதாகவும், எனவே இந்தத் தொழிலை என்னிடம் ஒப்படைப்பதாகவும் கூறினார்.
குறைந்தது நான்கு மாதங்களில் அவரது பயணம் உறுதியானதும் தனது அனைத்துத் தொடர்புகளையும் உபகரணங்களையும் என்னிடத்தில் ஒப்படைத்தார். அவரை வழியனுப்பிவிட்டு அந்தத் தொழிலை நான் ஆரம்பித்தேன். என் கீழ் எண்பது பேர் வரை பணி செய்தனர். எனக்குக் கிடைத்த வருமானத்தை சரி சமமாகப் பங்கிட்டுத் தொழிலாளர்களுக்குக் கொடுத்து வந்தேன். இரண்டரை ஆண்டுகள் சிறப்பாக இந்தத் தொழிலை நடத்தினேன். வில்சன் அவர்களிடமிருந்த தொழிலாளர்களை விட இரண்டு மடங்கு தொழிலாளர்கள் என்னுடன் இணைந்தனர். இந்தக் காலகட்டத்தில் பல தடவைகள் புலிகள் என்னிடம் வந்து தங்கள் இயக்கத்தில் இணைந்து செயல்படும்படி வற்புறுத்தினர்.
நான் இவர்களிடம் பட்ட அனுபவங்களை எந்தக் காலத்திலும் மறக்க முடியாது. இப்படியான ஓர் கொடியவர்கள் திரைமறைவில் செய்துவரும் அனியாயங்களை ஒரு காலத்தில் எங்கள் மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காண்பிக்க வேண்டும் என்று அப்போதே நினைத்திருந்தேன். உலகின் வேறு நாடுகளில் பலதரப்பட்ட கொடுமைகள் நடந்ததாக நாம் படித்துத் தெரிந்துகொண்டிருக்கிறோம். ஆனால் நான் அவற்றை நேரில் அனுபவித்தவன், அதிலும் எதிரிகளிடம் அகப்பட்டு இந்த வதையைச் சந்திக்கவில்லை. உரிமை வேண்டும், விடுதலை வேண்டும் என்று கோரிக்கை வைத்துப் போராடப் புறப்பட்டவர்கள், தமிழர்களின் உரிமையை எப்படியெல்லாம் மதித்தார்கள் இந்த இயக்கத்தினர் என்பதை நேரில் கால் விலங்குடன் நாற்பது மாதங்கள் வாழ்ந்து அனுபவித்த வரலாற்றை மறந்து இந்தக் கொடியவர்களின் இயக்கத்தில் இணைந்தால் நான் ஓர் சூடு சொரணையற்ற சந்தற்பவாதியாகத்தான் இருக்க முடியும்.
இவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளும் போதெல்லாம் ஏதாவது காரணம் சொல்லித் தட்டிக் கழித்து வந்தேன். நான் சார்ந்த இயக்கமான ஈ.என்.டி.எல்.எப் இந்தியாவில் தமிழ் அகதிகள் குழந்தைகளுக்கென்று பாடசாலை ஒன்றை இலவசமாக நடத்திவருவதை அறிந்திருந்தேன். நான் எப்படியாவது இந்தியா சென்று எங்கள் இனத்துக்கான ஏதாவது ஓர் நற்பணியில் ஈடுபடவேண்டும் என்று தீர்மானித்திருந்தேன். அதற்கான நேரத்தையும் எதிர்பார்த்திருந்தேன்.
1995ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் புலிகள் யாழ்ப்பாணத்தை விட்டு யாருக்கும் தெரியாமல் தப்பித்து வன்னிக்கு ஓடினர். தமிழ் மக்களைக் காப்பாற்ற புறப்பட்ட வீரர்கள், மக்களைக் கைவிட்டு விட்டு தாங்களும் தங்கள் குடும்பங்களும் யாருக்கும் தெரியாமல் வன்னிக்குச் சென்றுவிட்டனர். ஒருவார காலம் இப்படித் தாங்கள் மட்டும் தப்பித்தபின் மக்களுக்கு அறியப்படுத்துகின்றனர். 28ம் திகதி மதியம் ஒலிபெருக்கி மூலம் திடீரென யாழ்ப்பாண மக்களை வெளியேறும்படியும், இராணுவம் முன்னேறி வந்துகொண்டிருக்கிறதென்றும் மக்களை மிரட்டி, விரட்டினர். துணி மூட்டைகளுடன் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்தனர் தங்கள் வாழ்விடங்களைவிட்டு.
நானும் எனது உறவினர்களும் நான்குமணியளவில் கச்சேரியடியை அடைந்தோம், மறுநாள் காலை நான்கு முப்பது மணிக்குத்தான் நாவற்குழிப் பாலத்தைக் கடந்தோம். மூன்று கிலோ மீற்றர் தூரத்தைக் கடக்க பன்னிரெண்டு மணி நேரம் எடுத்துக்கொண்டது. உறவினர்கள் தங்கள் உறவுகளை இந்தப் பாலத்துக்குள் தொலைத்துவிட்டு அலைந்தனர். கைத்தடியைத் தாண்டியதும் பலரும் தங்கிவிட்டனர். எனது கணிப்பின்படி அன்று இடம்பெயர்ந்தவர்கள் ஐந்தரை முதல் ஆறு லட்சம்பேர் வரை இருக்கும்.
தமிழர்களின் பூர்விக நிலத்தைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று நினைத்த புலிகளது கொள்கை மிகவும் தவறானது. இந்தப் பூர்விகப் பிரதேசத்தைக் காப்பாற்ற முடியாது என்றால் எதற்காக சக போராளி இயக்கங்களை அழித்தார்கள். இவர்களது இயலாமை அன்றே வெளிப்பட்டது. ஆனால் இவர்களது பிரசாரம் அந்த இயலாமையை மறைத்து வீரர்களாகக் காட்டியது.
நாங்கள் நாவற்குழியிலிருந்து கிளாலி வழியாக பூநகரியின் நல்லூரை அடைந்தோம். கிளாலியிலிருந்து நல்லூருக்குப் படகுகள் மூலம் சென்றோம். ஒரு விசைப் படகு ஆறு படகுகளை இழுத்துச் செல்லும். இப்படி இந்த நீர் நிலையைக் கடப்பதற்கு தலைக்கு 50 ரூபா முதல் 100 ரூபா வரை பணம் பறித்துக்கொண்டுதான் இந்த வேலையைச் செய்தனர் புலிகள்.
இரண்டாவது நாள் குஞ்சு பரந்தன் வழியாக வட்டக்கச்சியை அடைந்தேன். புதிய இடம், வாழ்க்கை மாறுபட்ட திசைக்குச் செல்லத் தொடங்கியது. ஓராண்டு காலம் விடலைத்தீவு, கள்ளியடி, நாச்சிக்குடா ஆகிய பகுதிகளில் வாழ்க்கையை மாற்றி மாற்றி வாழ்ந்து பார்த்து இறுதியாக வலைப்பாட்டிலிருந்து இந்தியாவுக்குச் செல்வதற்கான வாய்ப்பினைப் பெற்றேன்.
தொடரும்…
(பாகம் -34)
தங்கள் உத்தரவுகளை மீறி யாரும் இந்தியாவுக்கோ அல்லது வேறு இடங்களுக்கோ தமிழர்கள் செல்லக்கூடாது என்று வாய்வழிச் சட்டங்களைப் பிறப்பித்தனர். 1996 செப்ரம்பர் மாதம் வலைப்பாட்டு வழியாக இந்தியா செல்ல நானும் எனது சிறிய தாய் மகனும் விண்ணப்பித்தோம். ஒரு நபருக்குப் பத்தாயிரம் புலிகள் வசம் கொடுக்க வேண்டும். ஒரு படகில் நானூறுபேர் வரை எற்றுவார்கள். ஒரு நாளைக்கு மூன்று நான்கு படகுகள் இவ்விதம் இந்தியாவுக்கு அனுப்பப்படும்.
இதன்படி எனது முறை வந்தது. வலைப்பாடு வழியாக வெளியேறுபவர்களை விசாரித்து தங்களுக்கு வேண்டப்படாதவர்கள் வெளியேறினால் தடுப்பது இவர்களது கடமையாக இருந்தது. இதற்கு பொறுப்பாக “சோ” என்பவர் இருந்தார். பெயர் முகவரியைப் பதிந்து விளங்காத சில கேள்விகளைக் கேட்டார் அவர். இவர்களால் படிக்கப்ட்ட செய்திகள் எதனையும் நான் சொல்லவில்லை. உங்களது உத்தரவால் இடம்பெயர்ந்து நொந்து வாழும் பொதுமக்களில் நானும் ஒருவன் என்று கூற அவரால் பதில் ஏதும் சொல்ல முடியாமல், சரி பணத்தைக் கட்டிவிட்டுப் போகலாம் என்றார்.
மூன்று நாட்களில் படகு தயார், காசைக் கொடுங்கள் என்று பெற்றுக்கொண்டனர். காசை வாங்கியவர் முன்னைநாள் புலிகள் இயக்கத்pன் கடற்புலிகளின் பொறுப்பாளராக இருந்த அன்பப்பா என்பவர். இவர் அப்போது புலிகள் இயக்கத்திலிருந்து விலகி படகுவைத்து இந்தப் போக்கு வரத்துத் தொழிலைச் செய்து வந்தார். ஒரு நபரிடம் இருந்து வாங்கும் பத்தாயிரத்தில் ஐ.ந.;தாயிரம் புலிகளுக்குக் கொடுக்கப்பட்டுவிடும்.
இந்தப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட படகுகள் அனைத்தும் வல்வெட்டித்துறை முதலாளிகளுக்குச் சொந்தமானவை. இந்த வேளையில் சுமார் இருபதினாயிரம் பேர் வலைபாட்டிலிருந்து இந்தியா சென்றனர் என்பது ஓர் புள்ளிவிபரமாகும்.
நானும் எனது சகோதரனும் இந்தியாவை அடைந்தோம். எனது சகோதரன் வெளிநாடு செல்ல, நான் எனது தாயாரைச் சந்தித்துப் பின்னர் பெங்களுரில் இயங்கிவரும் எங்கள் இயக்கத்தினால் நடத்தப்படும் பாடசாலைக்குச் சென்று அங்கு பணியாற்ற ஆரம்பித்தேன். இன்று அப்பாடசாலையின் மாணவர் பிரிவின் பொறுப்பாளராக இருக்கிறேன்.
அப்படியிருந்தும் நான் 2004 செப்ரம்பரில் மீண்டும் யாழ்ப்பாணம் சென்று இரண்டு ஆண்டுகள் யாழ்ப்பாணத்தில் இருந்து மீண்டும் 2006 நவம்பரில் இந்தியா வந்தேன். யாழ்ப்பாணத்திலிருந்த அந்த இரண்டு ஆண்டுகளும் புலிகளது செய்ற்பாடுகளையும் கவனித்து வந்தேன்.
நான் பணியாற்றும் ஈழக்குழந்தைகளுக்கான இந்தப் பாடசாலை தமிழகத்தின் அகதிகள் முகாம்களிலிருந்து தெரிவு செய்யப்படும் ஈழக்குழந்தைகளுக்கான கல்வி நிலையமாகும். 1990ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தப்பாடசாலையில் இதுவரை நான்காயிரம் ஈழத் தமிழ்க் குழந்தைகள் கல்வி கற்றுச் சென்றுள்ளனர். உடை, உணவு, உறைவிடம், கல்வி அனைத்துமே இங்கு இலவசமாகத்தான் வழங்கப்படுகிறது.
ஈழ விடுதலைக்காகப் பல இயக்கங்கள் தோன்றினாலும் எங்கள் இனத்தை சமுதாயச் சீரழிவிலிருந்து காக்கும் பணியினை எந்த இயக்கமும் செய்ய வில்லை. ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.) எங்கள் சமுதாயத்தின் எதிர்காலம் குறித்த தூரப்பார்வையுடன் செயற்பட்டு, எங்கள் குழந்தைகளுக்கான கல்விக் கூடத்தை ஆரம்பித்தது. இப்பணிக்காக என்னை அர்ப்பனிக்க எனக்குக் கிடைத்த வாய்ப்பாகவே நான் கருதுகிறேன். அன்னிய நாட்டில் இருந்தாலும் எங்கள் இனம் சிதைந்துவிடக் கூடாது, கல்வி அறிவின்றி சீரழிந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டு பலதரப்பட்ட சிரமங்களுக்கு மத்தியில் இன்றுவரை செயற்பட்டு வரும் இந்தப் பாடசாலையில் பணிபுரிவதையிட்டு நான் பெருமைப்படுகிறேன்.
விடுதலைப் புலிகளால் பாதிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கானவர்களில் நானும் ஒருவன். அவர்கள் என்னைக் கொலை செய்யாமல் விட்டதற்காக நான் கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அதேவேளை எங்கள் இனத்துக்காக நடத்தப்படும் இந்தக் கல்வி நிலையத்;தில் பணியாற்ற கிடைத்த வாய்ப்புக்காகவும் கடவுளுக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
நான் யாழ்ப்பாணம் சென்று தங்கியிருந்த இரண்டாண்டு காலமும் புலிகள் பற்றிய பல தகவல்களைச் சேகரித்தேன். அவற்றையெல்லாம் வெளியிட எனது இயக்கம் அனுமதி தராததால் மேற் சொன்னவற்றுடன் நிறுத்திக்கொள்கிறேன். இனியும் தேவைப்படுமாயின் அவைபற்றி வெளியிடப்படும் என்று தெரிவித்து முடிக்கிறேன்.
நன்றி!
கிறேசியன்.
0 comments :
Post a Comment