Sunday, April 4, 2010

1990 முதல் 2009 வரை புலிகள் ஆட்சியில்……நடந்த வன்கொடுமைகள்! – கிறேசியன்! (பாகம் -26)

என்னை விடுவித்து பாதரிடம் ஒப்படைத்த புலிகளது முகங்களில் ஓர் விறைப்புத் தன்மை இருந்தது. இப்படிப் பிடித்து வந்த ஒருவருக்கு அடி உதை கொடுக்காமல் விடுகிறோமே என்ற ஏக்கம் அவர்களின் முகங்களில் பிரதிபலித்தது! அப்படி விட்டுச் சென்ற பின்னர் புலிகள் எங்கள் பகுதிக்குள் வந்து எந்தத் தொந்தரவும் தரவில்லை. காரணம் மக்கள் ஒற்றுமையாக இருந்ததால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இப்படிக் கூறிய ஜெகன் ஞானதாஸ் தொடர்ந்தார்:-

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் வந்து “ அலுவலகத்துக்கு வந்துவிட்டுச் செல்லவும்” என்று அழைத்தனர். முன்பும் இவர்கள் திருப்பி அனுப்பியது போன்று அனுப்பிவிடுவார்கள் என்று நம்பி, அவர்களது அலுவலகத்துக்குச் சென்றேன். அங்கே கண்களைக் கட்டி வேறு ஓர் இடத்துக்கு அழைத்துச் சென்று அடித்தார்கள். கீழே தள்ளி மதித்தார்கள், அதோடு காலுக்கும் சங்கிலியிட்டு பூட்டுப் போட்டார்கள். கண்கள் கட்டப்படடிருந்ததால் யார் யார் அடித்தார்கள் என்பது தெரியவில்லை! சாவகச்சேரிக்குக் கொண்டு போகப்போகிறோம் என்று கதைத்துக் கொண்டார்கள். ஒரு கிழமையில் இங்கே கொண்டு வந்துள்ளனர் என்று கூறி முடித்தார் ஜெகன் அவர்கள்!

ஞானதாஸ் அவர்களை ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் புலிகள் கைது செய்யச் சென்றபோது பொதுமக்களில் இரண்டு போர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்படிக் கொல்லப்பட்டவர்களுக்கு எந்த நீதி விசாரணையும் நடைபெறவில்லை. ஆயினும் புலிகளது வான் எரிக்கப்பட்டதற்கும் ரெலோ இயக்கத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டதற்குமாக ஆறு ஆண்டுகள் கழித்து பழி வாங்குவதற்காக ஞானதாஸ் அவர்களைப் பிடித்து வந்து கொடுமைப்படுத்த முற்பட்டுள்ளனர். மனித உயிர் எந்த அளவுக்கு மதிக்கப்பட்டுள்ளது என்பதைக் காண இதுவும் ஓரு சாட்சியம்.

உயிர்கள் எப்படியெல்லாம் வேட்டையாடப்பட்டன என்பதற்கு இன்னுமொரு சம்பவத்தைக் கூறவேண்டும். 1993 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் இச்சம்பவம் நடந்தது. புலிகளின் தலைவர் பிரபாகரனின் குழந்தைகளை பாடசாலைக்கு வாகனத்தில் அழைத்துச் சென்று வருவதுடன் பிரபாகரனின் முக்கிய பாதுகாவலர்களில் ஒருவராகவும் இருந்தார் டக்கிளஸ் என்பவர். (இவரது பெயரை நினைவில் வைக்கமுடியவில்லை டக்கிளஸ் அல்லது டயஸ் என்று நினைக்கிறேன்.)

இவர் யாழ்ப்பாணத்தில் ஒரு பெண்ணைக் காதலித்தார். இந்தக் காதலை புலிகளின் புலனாய்வு வல்லவர்கள் கண்டு பிடித்துவிட்டனர். உடனே அவரைப் பிடித்து அவரது தலையில் குண்டு போட உத்தரவிட்டார் அவர்களது தலைவர்.

இதனைக் கேள்விப்பட்ட அந்த டக்கிளஸ் தப்பி ஓடி விட்டார். அவரை பிடிப்பதற்காக கரை ஓரங்களில் இருந்த அவர்களது அனைத்துத் துறைகளுக்கும் தகவல் கொடுத்து உசார் படுத்தப்பட்டனர். ஆயினும் அவரைப் பிடிக்க முடியவில்லை. பின்னர் அவரது புகைப்பட்த்தை பத்திரிகைகளுக்குக் கொடுத்து மக்களைக் காட்டிக் கொடுக்கும்படி வேண்டிக்கொண்டனர்.

உதயன் பத்திரிகையில் படத்துடன் செய்தி வெளியானது. மூன்று நாட்கள் கழித்து அந்த இளைஞன் செம்மனிச் சுடுகாட்டில் விசமருந்தி தற்கொலை செய்து கொண்டான். அந்தப் புகைப்படமும் உதயன் பத்திரிகையில் வெளிவந்தது. காதலிப்பதற்குத் தண்டனை! அதாவது இயற்கைக்குத் தண்டனை வழங்கியவர்கள் புலிகள் என்பது வரலாறு. கொலை அவர்களது பிறப்புரிமை! மக்கள் அவர்களது அடிமைகள் என்ற நிலைதான் புலிகளின் ஆட்சியில்.

இருபாலை முகாமில் வைக்கப்பட்டிருந்த எங்கள் சகோதரர்களைச் சுற்றி பலத்த பாதுகாப்புப் போட்டிருந்தனர். அனைத்துச் சகோதரர்களுக்கும் கால்களில் சங்கிலி விலங்கிட்டுப் பூட்டுக்கள் போட்டிருந்தனர் என்பது பற்றி முன்னரே நான் சொல்லியிருந்தேன். இப்படிக் கால்விலங்கு, புலிக்காவல், தகரவேலி, தண்டனை தரும் நாவல் மரத்தடி இவை அனைத்தையும் தாண்டி நள்ளிரவில் ஒரு சகோதரன் தப்பிச் சென்றான். அந்தச் சகோதரனை நினைத்து நான் பெருமைப்பட்டுக்கொண்டேன்.

நான் இருந்த அறையிலிருந்து மூன்றாவது அறையில் எட்டுப்பேர்வரை இருந்தனர். அதில் திருகோணமலையிலிருந்து கொண்டு வந்திருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் சகோதரன் ஒருவர் 20-21 வயதுடையவர். அவர் நள்ளிரவில் அந்த வீட்டின் சீலிங்கை நீக்கி அதனூடாகச் சென்று கூரையின் ஓட்டைக் கடந்து பின்னர் ஓட்டின் மேலிருந்து கீழே குதித்து, முக்கிய வாசல் வழியாக தப்பிச் சென்றுவிட்டார்.

இந்த முகாமைச் சுற்றி வீடுகள் நிறைய இருந்தன. உள்ளே புலிகள் எங்கள் சகோதரர்களைத் தாக்கும் சத்தம் வெளியே இருப்பவர்களுக்கும் கேட்கும் என்று புலிகள் பேசிக்கொள்வார்கள். இப்படித் தப்பிச் சென்ற அந்தச் சகோதரனைப் பிடிக்கவே முடியவில்லை புலிகளால்.
எப்படியும் அவர் இருபாலையிலிருந்து தப்பிச் சென்றிருக்க முடியாது என்பது புலிகளினது கணிப்பு. ஆயினும் அவரைப் பிடிக்க முடியவில்லை. காரணம் இருபாலை மக்கள் அவரைக் காப்பாற்றினர் என்பதுதான் உண்மை.

இரண்டு நாட்கள் கழித்து செம்படை சலீம் வந்தார். “ இங்கு இருப்பவர்களுக்குத் தெரியாமல் அவர் தப்பியிருக்க முடியாது. அவனைப் பிடித்துவிடுவோம் அவன் பிடிபட்ட பிறகு உண்மையைச் சொன்னால் உங்கள் அனைவரையும் சுட்டவிடுவோம். அதனால் நீங்கள் இப்பவே உண்மையைச் சொல்லிவிட வேண்டும்” என்று அனைவரையும் ஒன்று கூட்டி மிரட்டினார். அந்த அறையில் இருந்தவர்களில் ஜெகன் ஞானதாஸ் அவர்களும் ஒருவர். ஆனாலும், அனைவரும் ஏகோபித்த குரலில் கூறினார்கள், ‘எங்களுக்குத் தெரியாது” என்று.

தொடரும்…

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com