Friday, April 2, 2010

புனர்வாழ்வளிக்கப்பட்ட 1365 பேர் நேற்று ஜனாதிபதியினால் பெற்றோரிடம் ஒப்படைப்பு

புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள 1365 பேர் நேற்று பெற்றோரிடம் ஒப்படைக்கப் பட்ட னர். இது தொடர்பான நிகழ்வு நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வவுனியா பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் நடைபெற்றதாக அதற்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தினகரனுக்குத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 1365 பேரை நேற்று உத்தியோகபூர்வமாக அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைத்தார். குறிப்பிட்ட தொகையினர் நேற்று நேரடியாகவே ஜனாதிபதியினால் அவர்களது குடும்பத்தாரிடம் கையளிக்கப்பட்டனர். ஏனையோர் இரண்டொரு தினங்களில் உரிய முறையில் அவர்களது குடும்பத்தாரிடம் சேர்க்கப்படுவரெனவும் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க கூறினார்.

நாட்டின் 18 புனர்வாழ்வு முகாம்களிலுமிருந்து 1365 பேரே குடும்பத்தாரிடம் ஒப்படைக்க தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுள் 1170 பேர் அங்கவீனர்களாவர். அங்கவீனர்களுள் 12 பேர் பல்கலைக்கழக மாணவர்களாவர். மொத்தமாக 31 பல்கலைக்கழக மாணவர்கள், புனர்வாழ்வளிக்கப்பட்ட 164 சிறுவர் போராளிகள் இவ்வாறு ஒப்படைக்கப்பட விருப்பதாகவும் இவர்களை பொறுப்பேற்பதற்காக பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கே வருகை தந்திருப்பதாகவும் ஆணையாளர் மேலும் கூறினார்.

குடும்பத்தாரிடம் இவர்கள் அனைவரும் உரிய முறையில் ஒப்படைக்கப்படும் வரை தொடர்ந்தும் இவர்களுக்குத் தேவையான சமூக மற்றும் மருத்துவ ரீதியானபுனர்வாழ்வளிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். புலிகள் இயக்கத்தினால் பலவந்தமாக படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டு பின்னர் மோதல் இடம் பெற்ற வேளை கைது செய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களே நேற்று உத்தியோகபூர்வமாக குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இவர்களுக்கு உயர் கல்வியை தொடரு வதற்கும் சுயவேலை வாய்ப்பில் ஈடுபடு வதற்கும் தேவையான உதவிகளும் பயி ற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் தொழில்நுட்பம் பற்றிய அறிவும் பெற்றுக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் எதிர்காலத்தில் புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள ஏனையோருக்கு விசேட தொழில்நுட்பப் பயிற்சி வழங்க தீர்மானித்திருப்பதாகவும் ஆணையாளர் பிரிகேடியர் தெரிவித்தார்.

இதுவரையில் புனர்வாழ்வு நிலையங்களிலிருந்த சுமார் 2365 இற்கும் மேற்பட்டோர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும் சுமார் எண்ணாயிரம் வரையிலானோர் புனர்வாழ்வு நிலையங்களில் பயிற்சி பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

வவுனியாவில் 14 புனர்வாழ்வு நிலையங்களும் யாழ்ப்பாணத்தில் 02 புனர்வாழ்வு நிலையங்களும் மட்டக்களப்பிலும் கொழும்பிலும் முறையே ஒவ்வொரு புனர்வாழ்வு நிலையங்களுமாக 18 நிலையங்கள் இயங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

யோகேஸ்வரன் அரவிந்தன், ஹிந்துராஜா, இந்திரர் ஆகியோர் ஜனாதிபதியினால் நேரடியாக அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

Thanks Thinakaran

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com