கொலை வழக்கில் ஆயுள் கைதியாகும் 12 வயது சிறுவன்!
8 மாத கர்ப்பிணியாக இருந்த தந்தையின் காதலியை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த 12 வயது சிறுவனுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்ட பின் சிறுவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜோர்டன் பிரவுன். 12 வயதே ஆன இவர், தனது தந்தையின் 'கேர்ள்பிரண்ட்' கென்ஷிமேரி ஹவுக் (26) என்பவரை கடந்த ஆண்டு துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டார். தனது தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொள்வதை விரும்பாததாலும், கென்ஷிமேரி கர்ப்பமாக இருப்பதை அறிந்த பின்னரும் ஆத்திரத்தில் சிறுவன் ஜோர்டான் பிரவுன் இந்த கொலையை செய்ததாக கூறப்படுகிறது.
கொலை சம்பவம் நடந்த போது கென்ஷிமேரி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த துப்பாக்கிச்சூட்டில் வயிற்றில் வளர்ந்த ஆண் குழந்தையும் இறந்துபோனது. இக்கொலை சம்பவம் தொடர்பாக சிறுவன் பிரவுனை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
ஜோர்டான் 12 வயதுடையவனாக இருப்பதால் முதலில் சிறுவர் சீர் திருத்த நீதிமன்றத்தில் இவ்வழக்கை விசாரிக்க முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் ஜோர்டான் செய்த குற்றத்தின் தன்மையைக் கருதி வழக்கமான நீதிமன்ற விசாரணையே நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, லாரன்ஸ் நகர செசன்சு நீதிமன்றத்தில் நீதிபதி டொமினிக் மோட்டோ முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்துவருகிறது. இந்த வழக்கின் தீர்ப்பு வருகிற ஏப்ரல் 5ம் தேதி வழங்கப்பட உள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் சிறுவனுக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
0 comments :
Post a Comment