EPRLF இன் தலைவன் நானே என்கின்றார் டக்ளஸ் தேவானந்தா.
EPRLF எனப்படும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவன் நானே என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுகின்றார். இன்று பிற்பகல் லண்டன் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தானத்தில் (TBC) இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடலில் கலந்துகொண்டுபேசிய அமைச்சர், EPRLF இன் தலைவர் என பலராலும் அறியப்பட்ட தோழர் பத்மநாபா அவ்வமைப்பின் உத்தியோகபூர்வ தலைவரே எனவும், அக்கட்சியின் செயற்பாட்டு தலைவராக தானே செயல்பட்டுவந்ததாகவும் கூறினார்.
அவர் மேலும் பேசுகையில் தான் EPRLF கட்சியை தலைமை தாங்கியபோது புலிகளின் முக்கிய தலைவர்களான கிட்டு போன்றவர்களுடன் இரகசிய தொடர்புகளை வைத்திருந்தாக, EPRLF(சுரேஸ் அணியின்) தலைவர் சுரேஸ்பிறேமச்சந்திரன் போன்றோர் தன்மீது குற்றஞ்சுமத்தியிருந்தாகவும் தெரிவித்தார். தான் வெளித்தோற்றத்தில் புலிகளுக்கு எதிர்ப்பானவனாக தெரிந்தாலும், புலிகளின் தலைமையுடன் நெருங்கிய உறவுகளை வைத்திருந்துவந்துள்ளேன் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த முனைவதாக அமைச்சரின் மேற்படி கருத்து தோன்றுகின்றது.
அதே நேரம் யாழ்பாணத்தில் ஈபிடிபியினர் ஏனைய அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக வெளிவரும் செய்திகள் தொடர்பாக கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது, வெளிநாடுகளிலிருந்து வந்து யாழ்பாணத்தில் போட்டியிடும் வேட்பாளர்களே கொழும்பிலிருந்து குண்டர்களைக் கொண்டுவந்து இச்செயற்பாடுகளைச் செய்வதாக டக்ளஸ் தெரிவித்தார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் போட்டியிடும் வெற்றிலைச் சின்னத்திலேயே வெளிநாட்டிலிருந்து வந்த சிலர் வேட்பாளர்களாகவுள்ளனர். தனது சகவேட்பாளர்கள் குண்டர்களை கொண்டுவந்துள்ளார்கள் என அமைச்சர் தெரிவிப்பது விருப்பு வாக்குகளை இலக்கு வைத்தா என்ற கேள்வி எழுகின்றது.
அதே நிகழ்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அக்கட்சியின் முக்கியஸ்தரும் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தவராஜா அவர்கள் கூறுகையில், யாழ்பாணத்தில் பன்நெடுங்காலமாக உரிமை கோரப்படாமல் இருக்கும் வங்கிக்கணக்குகளில் உள்ள (வெளிநாடுகளில் வசிக்கும் மக்களது) பணத்தை எடுத்து யாழ் அபிவிருத்திக்கு செலவிடுவதற்கான அமைச்சரின் முயற்சி கட்சியின் நற்பெயருக்கும் பெரும் களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். அத்துடன் இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் தன்னுடன் கலந்துரையாடியதாகவும் தான் அரச கணக்காய்வுத் திணைக்களத்தில் ஆரம்ப நாடக்களில் வேலை செய்த அனுபவத்தை வைத்து அவ்விடயத்தினை நடைமுறைப்படுத்தக் கூடியவிதத்தினை அவருக்கு எடுத்துரைத்ததாகவும் அதனடிப்படையில் அதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெறுவதற்கான ஆவனங்களை ஆங்கிலத்தில் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டதற்கிணங்க செய்து அனுப்பியதாகவும் தெரிவித்தார்.
அவர் கூறிய விடயங்களில் இருந்து யாழ்பாணத்தில் உரிமை கோரப்படாத வெளிநாடுவாழ் மக்களின் பணத்தினை எடுப்பதற்கான அமைச்சரவை (கபினட்) அங்கீகாரம் டக்கிளசினால் கோரப்பட்டுள்ளமை தெளிவாகியுள்ளது. ஆனால் அதற்கான அங்கீகாரம் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாக என்பது தெளிவில்லை. எதுவாக இருந்தாலும் இதற்கான அங்கீகாரம் தேர்தல் முடிவடைந்தபின்னர் கிடைக்கப்பெறும் என நம்பப்படுகின்றது.
0 comments :
Post a Comment