பொட்டுவின் பெயரை நீக்குமாறு INTERPOL இடம் இலங்கை கோரிக்கை
சர்வதேச காவல் படையான "இன்டர்போல்" அமைப்பால் தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலிலிருந்து, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவுத் தலைவரான பொட்டு அம்மான் பெயரை நீக்குமாறு இலங்கை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இறுதிக்கட்ட போரின்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவுத் தலைவரான பொட்டு தற்கொலை செய்துகொண்டதாக இலங்கை அரசு கூறியுள்ள நிலையில், அவரை மீண்டும் தேடி வருவதாக சர்வதேச காவல் படையான 'இன்டர்போல்' அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
ஆனால் இறுதி யுத்தத்தின் போது பொட்டு அம்மானும் அவரது மனைவியும் தம்மை தாமே தற்கொலை தாக்குதல் மூலம் அழித்துக்கொண்டதால்தான், அவர்களது உடல்களை மீட்க முடியவில்லை என்றும், அவர்களது மரண சான்றிதழ் பத்திரத்தை தம்மால் தர முடியவிலை என்றும் இலங்கை அரசு கூறியிருந்தது.
ஆனால், பொட்டு அம்மானை மீண்டும் தேடிவருவதாக 'இன்டர் போல்'தமது இணையத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பு, இலங்கை அரசுக்கு பெரும் அதிர்ச்சியையும், சங்கடத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், 'இன்டர்போல்' அமைப்பால் தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலிலிருந்து பொட்டு அம்மான் பெயரை நீக்குமாறு அந்த அமைப்பை இலங்கை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக இலங்கை இராணுவ புலனாய்வுத் துறைத் தலைவர் கபில்ல ஹென்டாவிட்ரானா, சர்வதேச காவல்படை அமைப்பை தொடர்பு கொண்டு மேற்கூறிய கோரிக்கையை விடுத்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
0 comments :
Post a Comment