Tuesday, March 16, 2010

முஸ்லீம் சமுதாயத்தினரிடம் பாரபட்சமாக நடக்கும் ஐரோப்பிய நாடுகள்

ஐரோப்பிய நாடுகளில் முஸ்லீம் சமுதாயத்தினர் மீதான பாரபட்சமான, துவேஷப் போக்கு அதிகரித்து வருவதாக அமெரிக்க மனித உரிமைத் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க மனித உரிமைத் துறை வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையில், ஐரோப்பிய நாடுகளில் முஸ்லீம்கள் குறித்து துவேஷப் போக்கு அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. முஸ்லீம்களிடம் பாகுபாடு காட்டுவதும், வெறுப்புணர்ச்சியை வளர்த்துக் கொள்வதும் ஐரோப்பியர்களிடையே அதிகரித்து வருகிறது.

கடந்த நவம்பர் மாதம் மசூதிகள் அல்லது பள்ளிவாசல்கள் போன்றவற்றைக் கட்ட சுவிட்சர்லாந்து அரசு தடை விதித்தது இதையே காட்டுவதாக உள்ளது. மேலும், பிரான்ஸ், ஜெர்மனி, ஆலந்தில், முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. தொப்பி அணிவதையும் இந்த நாடுகள் தடை விதித்துள்ளன.

இந்த செயல்கள் மிகவும் கவலை தருவதாக உள்ளன. மத சுதந்திரத்தையும், மனித உரிமையையும் தடுக்கும் செயல்கள் இவை. ஆலந்தில் 8 லட்சத்து 50 ஆயிரம் முஸ்லீம்கள் உள்ளனர். ஆனால் இங்கு அவர்களுக்கு சுதந்திரம் பெரிய அளவில் இல்லை. முஸ்லீம்கள் மீதான துவேஷம் அதிகரிக்க அங்குள்ள வலது சாரி அரசியல்வாதிகள்தான் முக்கியக் காரணம்.

முஸ்லீம்களுக்கு எதிராக அங்கு பெருமளவில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறவில்லை என்றாலும் கூட சிறு சிறு சம்பவங்கள் நடந்தபடிதான் உள்ளன. கேலி செய்வது, வேண்டுமென்று வம்புக்கு இழுப்பது, தகாத வார்த்தைகளால் விமர்சிப்பது போன்றவற்றில் ஆலந்து நாட்டினர் ஈடுபடுகின்றனர்.

மனித உரிமை மீறல்கள்...

மனித உரிமை மீறல்களைப் பொறுத்தவரை சீனா, பெலாரஸ், கியூபா, மியான்மர், வட கொரியா, ஜிம்பாப்வே, சூடான், சிரியா, ரஷ்யா ஆகிய நாடுகளில் அவை பெருமளவில் உள்ளன. ஈரானில் இது அதிகமாகவே உள்ளது.

உய்கூர் முஸ்லீம்களுக்கு எதிராக சீன அரசு மிகப் பெரிய அளவில் அடக்குமுறைகளைக் கையாண்டு வருகிறது. அதேபோல திபெத்தியர்களிடமும் அவர்கள் கடுமையாக நடந்து கொள்கின்றனர். இன்டர்நெட்டையும் கூட சீன அரசு கடுமையாக முடக்கி வருகிறது. செய்திகளை அறிவதில் கூட பல்வேறு கட்டுப்பாடுகளை அது போட்டு வருகிறது.

அப்பாவி மக்கள் உயிரிழப்பு அதிகரிப்பு...

கடந்த 2009ம் ஆண்டில் பல நாடுகளில் ஏற்பட்ட மோதல்களில் அப்பாவிகள் பெருமளவில் உயிரிழந்துள்ளனர். இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சூடான் ஆகிய நாடுகளில்தான் பெருமளவிலான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானில் அப்பாவிகளின் உயிர்களுக்கு சற்றும் உத்தரவாதம் இல்லாத நிலை காணப்படுகிறது. அங்கு சட்டத்திற்குப் புறம்பான செயல்கள், சித்திரவதைகள், படுகொலைகள், காணாமல் போவது ஆகியவை சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது என்று அந்த அறிக்கை கூறுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com