புத்த மதத்தை அழிக்க முயற்சிக்கிறது சீனா: தலாய் லாமா குற்றச்சாற்று
திபெத் பிரச்சனைக்கு தான் முன்னெடுத்த அனைத்து முயற்சிகளையும் கண்டுகொள்ளாமல் தட்டிக்கழித்த சீன அரசு, திபெத்தில் புத்த மதத்தை முழுமையாக அழித்து ஒழித்துவிடும் திட்டத்துடன் செயல்பட்டு வருகிறது என்று திபெத் தலைவர் தலாய் லாமா குற்றம் சாற்றியுள்ளார்.
1959இல் திபெத்தை ஆக்கிரமிக்க சீனா மேற்கொண்ட இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்த்து திபெத்தியர்கள் நடத்திய போராட்டத்தின் 51வது ஆண்டு தினத்தை முன்னிட்ட ஹிமாச்சல பிரதேசம் தர்மசாலாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தலாய் லாமா, “பெளத்தத்தை கொன்றொழிக்க முயற்சிக்கிறது சீனா” என்று நேரிடையாக குற்றம் சாற்றினார்.
திபெத்திற்கு தான் கேட்பது சுயாட்சிதான் என்றும், அதன் மூலம் தங்களுடைய ஆன்மீக வழியையும், பண்பாட்டையும், மொழியையும் திபெத்தியர்கள் காப்பாற்றிக்கொள்ள அந்த அளவிற்காவது சுதந்திரம் வேண்டும் என்பதே தனது கோரிக்கை என்று கூறினார்.
ஆனால், தனது முயற்சிகளையும் கண்டுகொள்ளாமல் தட்டிக்கழித்த சீன அரசு, திபெத்தில் ‘தேசப்பற்றுக் கல்வி’யைப் போதிக்க முயற்சித்து வருகிறது என்று கூறினார்.
“திபெத்திலுள்ள மடங்களில் உள்ள சன்யாசிகளை சிறை வைப்பது போன்று அடைத்து, அவர்கள் தங்கள் ஆன்மீகப் பணிகளை தொடர்வதற்கு தடை ஏற்படுத்தி வருகிறது. பெளத்தத்தை கொன்றொழிக்கும் முயற்சியில் நேரிடையாக ஈடுபட்டு வருகிறது. இதையெல்லாம் சீன அரசு ஏற்கிறதோ இல்லையோ, அங்கு மிக மோசமான பிரச்சனை தோன்றியுள்ளது” என்று தலாய் லாமா கூறியுள்ளார்.
“இன்றுள்ள சீனத் தலைமையின் போக்கை வைத்துப் பார்க்கும்போது. எந்தத் தீர்வும் எட்டுவதற்கான சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. ஆயினும் பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண தொடர்ந்து முயற்சிப்பது என்ற எங்கள் நிலையில் மாற்றமில்லை” என்றும் தலாய் லாமா கூறியுள்ளார்.
சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய அந்த நிகழ்வை குறிக்கும் நாளில் தலாய் லாமாவின் உரையைக் கேட்க பல்லாயிரக்கணக்கான திபெத்தியர்கள் தர்மசாலா வந்திருந்தனர்.
0 comments :
Post a Comment