அமெரிக்காவில் பெண் தீவிரவாதி கைது. இந்தியா குறித்து உளவு பார்த்தாராம்!
ஜிஹாத் ஜேன் என்ற பெயரில் இந்தியா வுக்கு எதிரான தீவிரவாத செயல்களுக்கான தகவல்களைத் திரட்டி வந்த அமெரிக்கப் பெண்ணை அந்த நாட்டு எப்பிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்தியாவிலும், தெற்காசியாவிலும், ஐரோப்பாவிலும் பெரும் தீவிரவாத சதிச் செயல்களை இவர் உள்ளிட்டோர் தீட்டி வந்தது தெரிய வந்துள்ளது. தீவிரவாத செயல்களுக்கான ஆளெடுப்பிலும் ஜிஹாத் ஜேன் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவருடைய உண்மையான பெயர் கொலீன் லாரோஸ் என்ற பாத்திமா லாரோஸ். பென்சில்வேனியாவைச் சேர்ந்தவர். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்.
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத செயல்களில் தற்போது வெள்ளையர்களை ஈடுபடுத்தத் தொடங்கியுள்ளனர் தீவிரவாதிகள். இதை நிரூபிக்கும் வகையில், கடந்த ஆண்டு டேவிட் கோல்மேன் ஹெட்லி என்ற அமெரிக்கர் கைது செய்யப்பட்டார். மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் இவருக்கு மிக நெருங்கிய தொடர்புகள் இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்த வரிசையி்ல் இன்னொரு அமெரிக்கப் பெண் பிடிபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 46 வயதாகும் கொலீன் லாரோஸ், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிலடெல்பியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு உலகெங்கிலும் உள்ள பல்வேறு தீவிரவாதக் குழுக்களுடன் நல்ல தொடர்பு உள்ளதாம். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இவர் தீவிரவாதக் குழுக்களுக்காக பணியாற்றி வந்துள்ளார்.
நான்கு குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. அவை - தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்தது, வெளிநாடு ஒன்றில் கொலைச் செயலை செய்ய திட்டமிட்டது, அடையாளத் திருட்டில் ஈடுபட்டது, போலி வாக்குமூலம் அளித்தது.
கொலீன் லாரோஸ் குறித்த வழக்கில், பிலெடல்பியா கோர்ட்டில் அரசு வழக்கறிஞர் மைக்கேல் லெவி கூறுகையில், தீவிரவாதிகள் தற்போது புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது. பார்த்தவுடன் இவர் தீவிரவாதி என்ற சந்தேகம் கொஞ்சம் கூட எழாத வகையில் ஆட்களை இவர்கள் தேர்வு செய்கிறார்கள். அமெரிக்கர்கள் தீவிரவாதிகளுக்குத் துணை போக ஆரம்பித்து பிடிபட்டிருப்பது இதையே காட்டுவதாக உள்ளது என்றார்.
வெள்ளை இனத்தைச் சேர்ந்த முதல் பெண் தீவிரவாதி கொலீன் லாரோஸ் என்று கூறப்படுகிறது. இவருடைய கூட்டாளி இந்தியா அல்லது பாகிஸ்தானில் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அவருடைய பெயரை எப்.பி.ஐ. குறிப்பிடவில்லை.
டென்மார்க்கைச் சேர்ந்த லார்ஸ் வில்க்ஸ் என்ற கார்ட்டூனிஸ்ட்டைக் கொல்ல கொலீன் லாரோசுக்கு இந்த நபர் உத்தரவிட்டிருந்தாராம். இந்த வில்க்ஸ், நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன் வரைந்ததால் சர்ச்சைக்குள்ளானவர்.
வில்க்ஸ் கொலைச் சதி தொடர்பாக அயர்லாந்து போலீஸார், 4 ஆண்கள், 3 பெண்களை கைது செய்துள்ளனர். இவர்கள் மூலம்தான் கொலீன் லாரோஸ் குறித்த தகவல் வெளியானதாம்.
வில்க்ஸ் கொலைத் திட்டத்தை நிறைவேற்ற சிலரை தேர்வு செய்திருந்தார் கொலீன் லாரோஸ். மேலும் இதற்காக நிதியும் கூட திரட்டி வைத்திருந்தார். தெற்காசியா, மேற்கு ஐரோப்பா, கிழக்கு ஐரோப்பாவில் உள்ள சில தீவிரவாதிகளுடன் அவர் தொடர்ந்து நல்ல தொடர்பில் இருந்து வந்துள்ளார். இருப்பினும் எந்த குறிப்பிட்ட தீவிரவாத இயக்கத்திற்காகவும் இவர் தனியாக செயல்பட்டதாகத் தெரியவில்லை.
இந்தியாவில் தீவிரவாத திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பான சதியும் கொலீன் லாரோசிடம் கொடுக்கப்பட்டிருந்ததாக தெரிய வந்துள்ளது. இருப்பினும் இந்தியாவில் இதற்கு முன்பு நடந்த தீவிரவாத செயல்களில் கொலீன் லாரோசுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்துத் தெரியவில்லை.
0 comments :
Post a Comment