ஐ.நா வினால் இடம்பெயர்தோருக்கு வழங்கப்பட்ட நிதி உதவி இடைநிறுத்தம்.
இலங்கையில் யுத்தம் காரணமாக உள்ளுரில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீள்குடியேறும்போது, அவர்களுக்கு கொடையாக வழங்கப்பட்டு வந்த ஆரம்ப நிதியுதவி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக ஐநாவின் அகதிகளுக்கான தூதரகம் தெரிவித்துள்ளது. மோதல்களால் அனைத்தையும் இழந்த நிலையில் சொந்த இடங்களுக்கு திரும்பும் குடும்பங்கள் தமக்குரிய இருப்பிட வசதியை ஏற்படுத்திக் கொள்வதற்காக 25 ஆயிரம் ரூபா ரொக்கப்பணம் ஆரம்ப நிதியுதவியாக வழங்கப்பட்டுவந்தது.
மோசமான நிதிப்பற்றாக்குறையே காரணம்
“தற்போது ஏற்பட்டுள்ள மோசமான நிதிப் பற்றாக்குறை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது” என்று கொழும்பில் உள்ள ஐநாவின் அகதிகளுக்கான தூதரகத்தின் அதிகாரியாகிய சுலக்ஷனி பெரேரா பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.
“ஏற்கனவே தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்ந்துள்ள குடும்பங்கள் பலவற்றிற்கு இந்த நிதியுதவி வழங்கப்பட வேண்டியுள்ளது. இதற்கென மார்ச் மாதம் இறுதிவரையில் வழங்குவதற்காக 3 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் எங்களுக்கு அவசரமாகத் தேவைப்படுகின்றது. இதனை பெறுவதற்கான முயற்சிகளில் நாங்கள் ஈடுபட்டிருக்கின்றோம்” என அவர் கூறினார்.
மீளக்குடியமர்பவர்களுக்கு உதவுவதற்காக 2010 ஆம் ஆண்டிற்கென மொத்தத்தில் 13 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டிருக்கின்றது.
அடுத்தடுத்த மாதங்களில் தங்களுக்கு இந்தப் பணம் வந்து சேராமல்போனால், மீளக்குடியமர்வதற்காக இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர் நண்பர்களது வீடுகளிலும் தங்கியுள்ள குடும்பங்களுக்கு இந்த நிதியுதவி கிடைக்காமல் போகக்கூடும் என்ற அச்சத்தையும் சுலக்ஷனி பெரேரா வெளியிட்டார்.
மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களின் சமூக பொருளாதார வாழ்க்கை முழுமையாக அழிந்து போயுள்ள நிலையில் அவர்களுக்கு இந்த நிதியுதவி மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.
இந்த ஆரம்ப நிதியுதவியில் தடங்கல் ஏற்பட்டுள்ள போதிலும் உடைகள், பாய்கள், நுளம்பு வலைகள், பிளாஸ்டிக் பாத்திரங்கள், காடுகளை அழித்து சுத்தம் செய்வதற்கான உபகரணங்கள் போன்றவைகள் தொடர்ந்து விநியோகிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மீளக்குடியமர்ந்துள்ள மக்களின் வாழ்க்கை மேம்பாட்டைக் கண்காணிக்கும் பணியும் தொடர்ந்து இடம்பெறும் என்றும் சுலக்ஷனி பெரேரா குறிப்பிட்டார்.
Thanks BBC
0 comments :
Post a Comment