இணக்கப்பாட்டு அணுகுமுறையை தமிழர்கள் கடைப்பிடிக்க வேண்டும்:சந்திரஹாசன்!
ஏகப் பிரதிநிதியென்பது ஜனநாயகத்திற்கு ஒவ்வாத சொற்பிரயோகமென்றும், தமிழ் மக்கள் ஒதுங்கியிருக்கும் அணுகுமுறையிலிருந்து மாறி, இணக்கப்பாட்டு அணுகு முறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றும் ‘ஒஃபர்’ தன்னார்வ அமைப்பின் ஸ்தாபகரும், தந்தை செல்வாவின் புதல்வருமான சட்டத்தரணி எஸ்.ஸி.சந்திரஹாசன் தெரிவித்தார். உண்மையின் யதார்த்தத்தின் அடிப்படையில் செயற்பட்டால் தமிழ் மக்கள் சாதிக்க முடியுமென்றும் சந்திரஹாசன் குறிப்பிட்டார்.
‘தமிழ் மக்களின் எதிர்காலமும் காலத்துக்கு ஏற்ற அணுகுமுறையும்’ என்ற தொனிப்பொருளில் கொழும்பு ‘ரமடா ஹோட்டலில்’ நடந்த கலந்துரையாடலில் சந்திரஹாசன் கருத்துரை வழங்கினார்.
தமிழ் மக்கள் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பான காலம் வந்துள்ளது. அதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் நாம் இணக்கப்பாட்டு அணுகுமுறையில் செயற்பட்டதால் பல முக்கிய விடயங்களைச் சாதித்திருக்கிறோம். குறிப்பாக, இந்தியாவில் அகதிகளாக உள்ள சுமார் 29 ஆயிரம் பேருக்கு இலங்கைப் பிரஜாவுரிமையைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க முடிந்துள்ளது.
அதேபோன்று, அகதி முகாம்களில் வாழும் மாணவர்களுக்கு கல்விப் பொதுத்தராதரப்பத்திர சாதாரணதரப் பரீட்சை நடத்தப்பட்டது” என்று சுட்டிக்காட்டிய சந்திரஹாசன், “நான் 26 வருடங்களுக்குப் பின்னர் இலங்கை வந்துள்ளேன். தெல்லிப்பழையில் உள்ள என் வாழ்விடத்தைத் தேடிக் கண்டுபிடித்தேன். வடக்கு, கிழக்குப் பகுதிகளில் ஏனைய கிராமங்களில் மக்களின் வாழ்க்கை நிலையையும் அவதானித்தேன்.
இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின்னர் ஜப்பானும், ஜேர்மனியும் மீண்டெழுந்ததைப் போல், நாமும் மீள முடியாதா’ என்று சிந்தித்தேன். அப்போதுதான் “மக்களை முன்னேற்ற ஏதாவது செய்ய முடியாதா?” என்று ஷான் சண்முகநாதன் கேட்டார். இப்போது அவருடன் இணைந்து அதனை நிறைவேற்ற முன்வந்துள்ளேன்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த ஷான் சண்முகநாதன் வரவேற்புரை நிகழ்த்துகையில், “தமிழர்கள் புதிய அணுகுமுறையைக் கைக் கொண்டு புதியபாதை வகுத்துச் செயற்பட வேண்டும். எமது தேவைகளையும் சிந்தனைகளையும் நாம் மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டும். தமிழ் மக்களின் தனித்துவமான பிரச்சினைகளை இணங்காண வேண்டும். ஒரே மனநிலையில் ஒன்றுபட்டு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசாங்கத்துடன் தொடர்புகொள்ளும் போது இணக்கமுடன் செயற்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
பேராசிரியர் சோ. சந்திரசேகரன், இலண்டனிலிருந்து வந்திருந்த சொலிசிட்டர் ஆரிய ஸ்ரீஹரன், சட்டத்தரணி கந்தையா நீலகண்டன் ஆகியோரும் கருத்துரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்வில் பல்வேறு துறைகளையும் சார்ந்த பெருந்திரளான புத்திஜீவிகள் கலந்து கொண்டார்கள். அவர்களுள் பெரும்பாலானோர் தமிழ் மக்களின் கரிசனைகள், எதிர்காலவியல் நோக்கு தொடர்பில் தமது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.
இவ்வாறான கலந்துரையாடலைத் தொடர்ச்சியாக நடத்த திட்டமிட்டுள்ளதாக நிகழ்வு ஏற்பாட்டாளர் ஷான் சண்முகநாதன் தனது நன்றி உரையில் குறிப்பட்டார்.
1 comments :
SJV and his team led the tamil community against the majority governments and organised the idea of "we tamils".This led to a great disaster .This had poisoned the entire nation and made into two
rival socities.Now the son's idea is a bit of philosophical.We think it's OK,:We should adopt comply and compromise policies to change the societies to live in peace and harmony.
Post a Comment