பெங்களூர் இஸ்ரோ ஆய்வு மையம் மீது துப்பாக்கிச் சூடு. தீவிரவாத தாக்குதல் அல்ல.
பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) ஆய்வு மையத்தின் மீது இரண்டு மர்ம ஆசாமிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து அவர்கள் மீது அங்கு பாதுகாப்புக்கு இருந்த மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை வீரர்களும் (சிஐஎஸ்எப) பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து அந்த இரு ஆசாமிகளும் தப்பியோடிவிட்டனர்.
அவர்களைத் தேடும் பணியில் ஆயிரக்கணக்கான போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெங்களூர் பையலலுவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ரேடார் மையத்தில் இன்று காலை இந்த சம்பவம் நடந்தது.
நிலவுக்கு இஸ்ரோ அனுப்பிய சந்த்ராயன் செயற்கைக் கோளில் இருந்து தகவல்களைப் பெற இந்த ஆய்வு மையம் அமைக்கப்பட்டது. இப்போது பிற செயற்கைக் கோள்களும் இந்த மையத்தில் இருந்து கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் எதி்ர்காலத்தில் இஸ்ரோ பிற கிரகங்களுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள செயற்கைக் கோள்களின் கட்டுப்பாடும் இந்த மையத்தில் இருந்து தான் கையாளப்படவுள்ளது. இதற்காக இங்கு மாபெரும் ஆண்டெனக்கள் நிறுவப்பட்டுள்ளன.
நிலவை சுற்றி வந்து சந்த்ராயன் செயற்கைக் கோள் நடத்திய ஆராய்ச்சியின் தகவல்கள் மற்றும் அந்த கோள் எடுத்த படங்கள் எல்லாம் இந்த Deep Space Network ஆண்டெனக்கள் மூலம் தான் பெறப்பட்டன.
24 மணி நேரமும் மிக பலத்த பாதுகாப்பு நிறைந்த இந்த மையத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தீவிரவாதத் தாக்குதலா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
இந்த மையத்தின் அருகே இன்று அதிகாலை 3 மணியளவில் சந்தேகப்படும் வகையில் சுற்றித் திரிந்த இரண்டு ஆசாமிகளை, அங்கிருந்த பாதுபாப்பு வீரர்கள் நிறுத்தி விசாரித்தபோது திடீரென அவர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதையடுத்து பாதுகாப்பு வீரர்களும் திருப்பிச் சுட்டனர்.
பாதுகாப்பு வீரர்கள் அவர்களை சுற்றி வளைப்பதற்குள் இருவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இவர்களைப் பிடிக்க கர்நாடக போலீசார் வலை வீசியுள்ளனர். பெங்களூரின் மையப் பகுதியில் இருந்து 35 கி.மீ. தொலைவில் மைசூர் சாலையில் இந்த மையம் அமைந்துள்ளது.
தீவிரவாத தாக்குதல் அல்ல:
இந்த துப்பாக்கிச் சூடு தீவிரவாதத் தாக்குதல் அல்ல என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இஸ்ரோ மையங்கள் போதிய பாதுகாப்பில் உள்ளன. பையாலலுவில் நடந்த தாக்குதல் தீவிரவாதத் தாக்குதல் போலத் தெரியவில்லை. இது ஒரு அமெச்சூர்தனமான தாக்குதல். நாட்டுத் துப்பாக்கியைக் கொண்டு யாரோ இருவர் இதை நடத்தியுள்ளதாகத் தெரிகிறது.
அதே நேரத்தில் இந்தத் தாக்குதல் குறித்து மாநில அரசிடம் அறிக்கை கேட்டுள்ளோம். இஸ்ரோவின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்யவும், உறுதிப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சிஐஎஸ்எப் குழு பாதுகாப்பு மறு ஆய்வுப் பணியை மேற்கொண்டுள்ளனர். முதல் கட்ட தகவலின்படி யாரோ இருவர் முகத்தை மூடியபடி 10, 15 மீட்டர் தொலைவில் இருந்து இஸ்ரோ மையத்தில் பாதுகாப்புக்கு இருந்த சிஐஎஸ்எப் படையினரை நோக்கி சுட்டுள்ளனர். பதிலுக்கு படையினரும் சுட்டுள்ளனர்.
முழு விசாரணைக்குப் பின்னரே இது எந்த மாதிரியான தாக்குதல் என்பது தெரியவரும் என்றார்.
0 comments :
Post a Comment