Tuesday, March 30, 2010

விசாரணைக்குச் சென்ற அகதிப் பெண் தற்கொலை- கற்பழிக்கப்பட்டதாக அகதிகள் புகார்

போலீஸ் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இலங்கை தமிழ்ப் பெண் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார். அவர் போலீஸாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அகதிகள் முகாமில் உள்ளவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கரூர் அருகே 2 ஆண்டுகளுக்கு முன்பு 2 குழந்தைகள் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில், முரளி (28), குமார் (29), பாண்டி (24) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் குமார், பாண்டி இருவரும் கரூர் அருகே உள்ள ராயனூர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள்.

இந்த நிலையில், குமாரின் மனைவி பத்மாதேவியை (28) பசுபதி பாளையம் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் கடந்த 7-ந் தேதி அன்று அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பத்மாதேவியை அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு வந்த பத்மாதேவி அன்று இரவு சுமார் 7 மணி அளவில் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து கொண்டார். பலத்த காயம் அடைந்த பத்மாதேவியை மற்ற அகதிகள் மீட்டு கரூர் அரசு மருத்துவ்மனையில் சேர்த்தனர்.

அங்கு 21 நாட்களாக தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த பத்மா தேவி, நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதனால் அகதிகள் முகாமில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பத்மாதேவியை விசாரணைக்கு அழைத்து சென்று கற்பழித்து விட்டதாகவும், அதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறி சில நாட்களுக்கு முன்பு கரூரில் போராட்டம் நடந்தது.

பத்மாதேவியிடம் ஏற்கனவே நீதிபதி மற்றும் ஆர்.டி.ஓ. வாக்குமூலம் பெற்று இருந்தனர். அதில் தன்னை போலீசார் பாலியல் பலாத்காரம் செய்தது பற்றி குறிப்பிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. பத்மாதேவி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, மீண்டும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எழாமல் தடுக்க கரூர் அரசு மருத்துவமனை, ராயனூர் அகதிகள் முகாம் ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Thanks thatstamil

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com