Thursday, March 4, 2010

பயங்கரவாதத்தைக் கண்டிக்கும் முஸ்லிம் கல்விமான்

பலராலும் மதிக்கப்படும் முஸ்லிம் கல்விமான், பயங்கரவாதத்திற்கும் தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல்களுக்கும் எதிரான ஃபத்வா சமயத் தீர்ப்பை லண்டனில் வெளியிடுகிறார். பாகிஸ்தானைச் சேர்ந்த டாக்டர் தாஹிர் உல்-கத்ரி வெளியிடும் 600 பக்க அறிக்கை, அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் வன்செயல் கொள்கையை முற்றிலும் தவிடுபொடியாக்குகிறது.

அல்-காய்தா என்பது “புதிய பெயர்கொண்ட பழைய தீமை” என்று வர்ணிக்கும் டாக்டர் தாஹிர், அல்-காய்தாவுக்கு எதிராகப் போதிய அளவு சவால் விடுக்கப்படவில்லை என்கிறார்.

இவரது இயக்கம் பிரிட்டனில் விரிவடைந்து வருகிறது. அரசியல்வாதிகளும் பாதுகாப்புத் தலைவர்களும் இவரது இயக்கத்தில் ஆர்வம் காட்டுகின்றனர். அப்பாவி மக்களைக் கொல்வதையும் தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்துவதையும் இஸ்லாம் தடை செய்வதாக டாக்டர் தாஹிர் தனது அறிக்கையில் கூறுகிறார்.

இதற்கு முன் வேறு பல கல்விமான்கள் இதே போல கூறியிருந்தாலும், டாக்டர் தாஹிர் இக்கருத்துக்கு விரிவான விளக்கம் தருவதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் போராளிகள் நடத்தும் வெடிகுண்டுத் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தனது ஃபத்வா அறிக்கையை டாக்டர் தாஹிர் சென்ற ஆண்டு தயாரிக்கத் தொடங்கினார்.

“தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் நடத்த நினைப்போரின் மனதில் இந்த அறிக்கை ஐயத்தை ஏற்படுத்தும்” என்று பிரிட்டனிலுள்ள மின்ஹஜ்-உல்-குர்ஆன் அமைப்பின் பேச்சாளர் ஷாஹித் முர்சலீன் கூறினார்.

“பிரிட்டனிலுள்ள தீவிரவாதக் குழுக்கள், தற்கொலைத் தாக்குதல் நடத்தினால் அடுத்த பிறப்பில் கண்டிப்பாக வெகுமதி கிடைக்கும் என்று கூறி இளையர்களைச் சேர்க்கிறார்கள்.
“டாக்டர் தாஹிரின் ஃபத்வா, இந்த எண்ணத்தைக் களையும்” என்றார் அவர்.

- பிபிசி நியூஸ்

No comments:

Post a Comment