இலங்கை அமைச்சரின் குற்றச்சாட்டை இந்தியா நிராகரித்துள்ளது.
இலங்கை உள்வீட்டு விவாகாரங்களில் இந்தியா மூக்கை நுழைப்பதாக விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியிலிருந்து பிரிந்து சென்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டுள்ள தபால் துறை அமைச்சர் நந்தன குணதிலக குற்றச்சாட்டியிருந்தார்.
அத்துடன் சமீபத்திய நாடாளுமன்ற தேர்தலின்போது ஜனாதிபதி ராஜபக்சவுக்கு எதிராக சில இந்திய அதிகாரிகளும், இந்தியாவின் அயல்நாட்டு விவகாரங்களுக்கான புலனாய்வு அமைப்பான 'ரா'வைச் சேர்ந்த சில அதிகாரிகளும் மகிந்த ராஜபக்ச தோல்வி அடைவதற்கு ஏதுவாக செயற்பட்டதாகவும் இலங்கை தபால் துறை அமைச்சர் நந்தன குணதிலக குற்றம் சுமத்தியிருந்தார்.
இலங்கை வந்த இந்திய அயலுறவுத்துறைச் செயலர் நிருபமா ராவ், ஜனாதிபதி ராஜபக்சவை சந்தித்துப் பேசியபோது, அவர் முன்னிலையில் நந்தன குணதிலக இந்தக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆனால் அப்போதே நிருபமா இந்தக் குற்றச்சாற்றை மறுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கொழும்பிலிருந்து வெளியாகும் ' டெய்லி மிரர்' நாளேட்டிற்கு அளித்த பேட்டியில் இதே குற்றச்சாற்றை குணதிலக மீண்டும் தெரிவித்துள்ளார். முன்னர் அமெரிக்காவுடன் இலங்கை நல்லுறவை வளர்த்துவந்ததால் விடுதலைப்புலிகளை இந்தியா வளர்த்துவிட்டது. அதன் உளவு ஏஜென்சியான 'ரா' மற்ற போராளி குழுக்களை உருவாக்கியது.
இந்நிலையில் சமீபத்திய தேர்தலில் ராஜபக்ச வெற்றி பெறுவதை விரும்பாத சில இந்திய அதிகாரிகள், அவரை தோற்கடிக்க முயற்சித்தனர். அதே சமயம் இந்திய அரசோ அல்லது பிரதமரோ இதை செய்யவோ அல்லது விரும்பவோ இல்லை' என்று அந்த பேட்டியில் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதனிடையே குணதிலகவின் இந்த குற்றச்சாற்றை இந்தியா அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது இது தொடர்பாக கொழும்பில் இந்திய ஊடகவியலாளர்கள் இடம் பேசசிய நிருபமா ராவ், 'ரா' போன்ற இந்தியாவின் எந்த நிறுவனமும் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக செயல்படவில்லை என தெரிவித்தார்.
சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக இந்தியா செயற்பட்டதாக கூறப்படுவது பொய்யான தகவல் எனவும், இந்தியா எந்த ஒருநாட்டின் உள்விவகாரங்களிலும் தலையிடுவதில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
0 comments :
Post a Comment