அமெரிக்கா சீனாவின் இறையாண்மைக்கு எதிராக செயல்படுகிறது : ஜியாபோ சாடல்
சீனாவின் இறையாண்மைக்கும், பிராந்திய ஒருமைப்பாட்டிற்கும் எதிராக அமெரிக்கா செயல்பட்டு வருவதாக சீனப் பிரதமர் வென் ஜியாபோ குற்றம் சாற்றியுள்ளார். இதுகுறித்து பீஜிங்கில் நேற்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் வென் ஜியாபோ பேசுகையில், “சென்ற ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்றுக் கொண்ட பிறகு அமெரிக்க-சீன உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியது.
ஆனால் தைவானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதன் மூலமும், திபெத்திய மதத்தலைவர் தலாய் லாமாவை வெள்ளை மாளிகையில் ஒபாமா சந்தித்ததன் மூலமும் சீனாவின் இறையாண்மைக்கு எதிராக அமெரிக்கா செயல்பட்டுள்ளது.
இருதரப்பு உறவுகளை மேம்படுத்த ஏற்கெனவே இரு நாடுகளும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கைகள்தான் அமெரிக்க-சீன உறவுக்கான அடித்தளம். அதன்படி அமெரிக்கா செயல்படும் என நம்புகிறேன். இரு நாடுகளும் பேச்சு வார்த்தைகளின் மூலம் ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சீனாவில் நகர்ப்புறங்களுக்கும் கிராமப்புறங்களுக்குமான பொருளாதார இடைவெளி அதிகம் உள்ளது. இந்த நூற்றாண்டின் மத்தியில் தான் சீனா வளர்ந்த நாடாக மாறும். அதே சமயம் தற்போது உலகில் பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்களை கையாள்வதிலும், சர்வதேச ஒத்துழைப்பிலும் சீனா முக்கிய பொறுப்புள்ள நாடாக திகழ்கிறது” என்றார்.
0 comments :
Post a Comment