Saturday, March 6, 2010

பான் கீ மூன் ஜனாதிபதியுடன் தொபேசியில் பேசினார். விசேட நிபுணர் குழு அமைக்கப்படும்.

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்க நிபுணர்கள் குழு ஒன்றை அமைக்க இருப்பதாக ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கடந்த வியாழக்கிழமையன்று இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

வெள்ளைக்கொடிகளை ஏந்தி வந்த தமிழீழ விடுதலைப்புலிகளை இலங்கைப்படையினர் சுட்டுக்கொன்றது உட்பட்ட இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக, பான் கீ மூன் விசாரணைக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் என சித்ரவதைகள் மற்றும் சட்டவிரோத கொலைகள் தொடர்பான ஐ.நா.வின் விசேட பிரதிநிதி பிலிப் அஸ்ட்டன் கோரியிருந்தார்.

அதேவேளை, கடந்த மாதம் இலங்கைக்கு செல்லவிருந்த ஐக்கிய நாடுகளின் அரசியல்துறை ஆலோசகர் லின் பாஸ்கோ அறிவித்தபடி அங்கு செல்லவில்லை. அவர் அடுத்த வாரம் இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு செல்கின்ற போதும், இலங்கைக்கு செல்லவில்லை.

இது குறித்து கேள்வி எழுப்பிய இனனர் பிரஸ் சிட்டி ஊடகவியலாளர்கள், இலங்கை விடயத்தில் ஏனைய உறுப்பு நாடுகளின் அழுத்தம் காரணமாகவே ஐக்கிய நாடுகளின் செயலாளர் தாமதமான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் என ஐக்கிய நாடுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜெராட் ஆருட் தெரிவித்துள்ளமையை சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேநேரம் குறிப்பிட்ட நிபுணர்கள் குழு ஐ.நாவின் செயலருக்கே பரிந்துரைகளைச் செய்யும் எனவும் ஜனாதிபதிக்கு எவ்வித அறிவுறுத்தல்களையும் வழங்கமாட்டாது என பான் கீ மூன் உறுதியளித்தாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் றோகிந்த போகல்லாகம தெரிவித்துள்ள அவர் இக்கலந்துரையாடலானது வழமையானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment