Thursday, March 4, 2010

ஐரோப்பாவில் கைதாகும் புலிகள்.

கடந்த காலங்களில் ஐரோப்பிய நாடுகளில் புலிகளின் பெயரால் அராஜகங்களை மேற்கொண்டுவந்த புலம்பெயர் புலிகள் கைது செய்யப்படுகின்றனர். ஜேர்மன் ஒபகோசன் பகுதியில் அமைந்துள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் கழகத்தினை நேற்று சுற்றிவளைத்த ஜேர்மன் பொலிஸார் அங்கிருந்த ஜேர்மன் புலிகளின் பொறுப்பாளர் வாகீஸன் உட்பட ஐவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சார்பாக சட்டத்தரணிகள் பொலிஸாரைத் தொடர்பு கொண்டபோது பயங்கரவாத இயக்கமாக தடைசெய்யப்பட்டுள்ள புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய பல சட்டவிரோத செயல்கள் தொடர்பாக கைது இடம்பெற்றுள்ளதாகவும் , பொலிஸாரின் விசாரணைகள் முடிவுற்று வழங்கு நீதிமன்றுக்கு வரும்போது போதிய கால அவகாசத்துடன் சட்டத்தரணிகளுக்கு குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அறிவிக்கப்படும் எனவும் அதுவரை காத்திருக்கும்படியும் பொலிஸார் தெரிவித்துள்ளதாக புலிகளுக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

சமாதான ஒப்பந்த காலத்தில் வன்னி சென்றிருந்த தமிழ் மக்களை புலிகள் கடத்தி மற்றும் பலவந்மாக தடுத்து வைத்திருந்து பணம் பறித்திருந்ததுடன் பல மனித உரிமை மீறல்களையும் மேற்கொண்டிருந்தனர். இவ்விடயங்கள் தொடர்பாக வெளிநாடுகளிலிருந்து சென்றிருந்த பாதிக்கப்பட்டவர்கள் தாம் வசிக்கும் நாடுகளுக்கு இது தொடர்பாக அறிவித்திருந்துடன், இச்செயற்பாடுகளுக்கும் வெளிநாடுகளில் செயற்பட்ட புலிகளுக்கும் இடையேயான தொடர்புகளும் விபரிக்கப்பட்டிருந்தது. நீண்டநாட்கள் தமது விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் தற்போது கைதுகளை மேற்கொண்டுள்ளனர்.

வன்னியில் உயிர்தப்பிய புலிகளில் பலர் தற்போது ஐரோப்பா கனடா போன்ற நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரிவருகின்றனர். அவர்களை விசாரிக்கும் குறிப்பிட்ட நாடுகளின் விசேட பொலிஸ் பிரிவினர் தத்தமது நாடுகளில் உள்ள புலிகளின் முக்கியஸ்தர்களுக்கும் வன்னிக்கும் இடையே காணப்பட்ட தொடர்புகள் தொடர்பாகவும் , மனித உரிமை மீறல்களுக்கான பங்களிப்புக்கள் தொடர்பாகவும் துரவித்துரவி விசாரணைகள் மேற்கொண்டு சாட்சியங்கள் பதிவு செய்து அதனடிப்படையிலேயே விசாரணைகள் தொடர்வதாகவும் தெரியவருகின்றது.

No comments:

Post a Comment