Friday, March 19, 2010

ரிஐடி யினரால் ஊடகவியலாளர் ஒருவர் கைது.

The Nation மற்றும் Bottom Line பத்திரிகைளில் பாதுகாப்பு கட்டுரைகளை எழுதி வந்த றுவன் வீரக்கோண் எனும் பத்திரிகையாளர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சுகயீனமான நிலையில் கொழும்பு பிரத்தியேக வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தபோது வைத்தியசாலையை சுற்றி வளைத்த ஆயுதம் தாங்கிய பொலிஸார் அவரை கைது செய்து சென்றதாக தெரியவருகின்றது.

ஜெனரல் பொன்சேகா சேவையில் இருந்து கொண்டு அரசியலில் ஈடுபட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கும் இவருக்கும் நேரடித் தொடர்புள்ளதாக கூறப்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஆழும் கட்சிக்கு மாறி அமைச்சர் பதவியைப் பெற்றுக்கொண்டுள்ள ஜோன்ஸ்ரன் பெர்ணாண்டோ உட்பட இரு அரசியல்வாதிகளுடன் ஜெனரல் பொன்சேகா முப்படைகளின் பிரதானியாக இருக்கும்போது தொலைபேசியூடாக பேசியதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஜெனரல் பொன்சேகா மேற்படி அரசியல்வாதிகளுடன் பேசுவதற்கு தனக்கு சொந்தமான சீடிஎம்ஏ தொலைபேசியை றுவன் வீரக்கோணிடமே கொடுத்து அனுப்பியதாக ஜோன்ஸ்ரன் பெர்ணாண்டோ, ஜெனரல் பொன்சேகாவிற்கு எதிராக அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

மேற்படி கைது பல தரப்பினராலும் கண்டனத்திற்குள்ளாகி வருகின்றது. அதே நேரம் த லங்கா பத்திரிகையின் ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டபோது, எதிர்வரும் காலங்களில் ஊடகவியலாளர்களைக் கைது செய்வதாயின் அதற்கு முன்னர் தன்னிடம் அனுமதி பெற்றுக்கொள்ளவேண்டும் என ஜனாதிபதி தெரிவத்திருந்த நிலையில், ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இக்கைது இடம்பெற்றுள்ளதா என பலரும் ஆராய்ந்து வருகின்றனர்.

No comments:

Post a Comment