நித்தியானந்தாவின் மனு கர்நாடக உயர் நீதிமன்றினால் நிராக்கப்பட்டது.
தன் மீதான வழக்குகள் விசாரணைக்கு தடை கோரி நித்யானந்தா தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. மேலும், நித்யானந்தா மீதான வழக்கை பிடுதி போலீசார் தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் பிடுதி போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூர் அருகே பிடுதியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தியான பீட சாமியார் நித்யானந்தா மீது செக்ஸ் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது. தியான பீடத்தின் முன்னாள் ஊழியரும், சிஷ்யருமான நித்ய தர்மானந்தா லெனின் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் நித்யானந்தா மீது தமிழக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர் இவ்வழக்கு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டது. பெங்களூரை அடுத்துள்ள ராமநகர் மாவட்டம் பிடுதி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக போலீசார் நித்யானந்தாவுக்கு எதிரான வழக்கை கர்நாடகத்துக்கு மாற்றும்போது முதல் தகவல் அறிக்கை உள்பட ஆவணங்கள் தமிழில் இருந்தன. அதை கன்னடத்துக்கு மொழிபெயர்ப்பு செய்யும் பணி தற்போது முடிவடைந்துள்ளது.
இதைத் தொடர்ந்து நித்யானந்தாவுக்கு எதிராக புகார் கொடுத்த நித்ய தர்மானந்தா என்ற லெனினை பிடித்து விசாரிக்க பிடுதி போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதற்கிடையே, மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் அண்ணன் எஸ்.எம்.சங்கரின் மகன் குருசரணும் பிடுதி போலீசில் நித்யானந்தா மீது புகார் கொடுத்துள்ளார்.
இதுவரை நித்யானந்தா தலைமறைவாகவே இருந்து வருகிறார். அவ்வப்போது வீடியோ காட்சிகளில் தோன்றி தன் தரப்பு நியாயத்தை தெரிவித்து வருகிறார். ஆனால் போலீசிடம் விளக்கம் அளிக்கவோ அல்லது அல்லது பொதுவான பத்திரிகையாளர் சந்திப்பையோ நித்யானந்தா தவிர்த்து வருகிறார்.
ஹரித்துவாரில் கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதாக கூறப்பட்ட நித்யானந்தா விரைவில் பெங்களூருக்கு திரும்புவார் என ஆசிரம ஊழியர்கள் கூறி வருகின்றனர். இந் நிலையில் தன் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி நித்யானந்தா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
நித்யானந்தா சார்பில் அவரின் வழக்கறிஞர் இந்த மனுவை நேற்று தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் நித்யானந்தாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
மேலும், நித்யானந்தா மீது பதிவு செய்யப்பட்டுள்ள பல்வேறு புகார்கள் தொடர்பான ஆவணங்கள், வழக்கு ஆவணங்கள் அனைத்தையும் நீதிமன்றத்தில் வரும் 26ம் தேதிக்குள் சமர்ப்பித்து வழக்கு நிலவரத்தை தெரியப்படுத்த வேண்டும் என்றும் பிடுதி போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
0 comments :
Post a Comment