Saturday, March 6, 2010

கல்முனை மா. ந. சபை தமிழரசுக்கட்சி உறுப்பினர் கணேஷ் சு.கவில் இணைவு.

தமிழரசுக் கட்சி தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றிவருவதாக அவர் குற்றச்சாட்டு : இனியபாரதியின் வெற்றிக்காக உழைப்பேன்.
கல்முனை மாநகரசபையின் தமிழரசுக் கட்சி உறுப்பினர் காத்தமுத்து கணேஷ் நேற்று முதல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டார்.

இது தொடர்பான நிகழ்வு நேற்று காரைதீவில் நடைபெற்றது.

பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் (ரிஎம்விபி) கட்சி சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் இவர், போட்டியிலிருந்தும் விலகுவதாக நேற்று அறிவித்தார். இலங்கை சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்ட காத்தமுத்து கணேஷ் ஜனாதிபதியின் இணைப்பாளரான கு. இனியபாரதியைச் சந்தித்து கட்சி மாறியதற்கான விளக்கத்தை அளித்தார்.

தேசிய நல்லிணக்க அமைச்சின் இணைப்பாளர் வீ. கிருஷ்ணமூர்த்தி, இணைப்பாளர் ரி. நந்தகுமார் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

அங்கு காத்தமுத்து கணேஷ் கருத்துத் தெரிவிக்கையில்:- “நான் கடந்த 30 வருட காலமாக இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்தேன். அவர்களால் தமிழ் மக்களுக்கு எந்த விமோசனமும் இதுவரை கிட்டவில்லை. 1946 களிலிருந்த தமிழ்த் தலைவர்கள் தந்தை செல்வா, ஜி. ஜி. பொன்னம்பலம் போன்றோர் நல்ல தலைமைத்துவத்தை அன்று வழங்கினர்.

இன்று தமிழர்களுக்கு எந்தவித தலைமைத்துவமும் இல்லை. தமிழரசுக் கட்சி தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. இனியும் தமிழ் மக்கள் அவர்களை நம்பக்கூடாது. சரத் பொன்சேகாவுடன் கடந்த தேர்தலில் 10 அம்சக்கோரிக்கையை முன்வைத்து ஒப்பந்தமொன்றைச் செய்திருந்தனர்.

22 எம்பிக்களில் 5 பேரை மந்திரிசபை அமைச்சராக்குவதென்பது அதில் ஒன்று. அது தோல்வியில் முடிந்தது. அரசியல் சாணக்கியம் அவர்களுக்கு இல்லை.

யாழ்ப்பாணத்தில் ஒரு இலட்சத்து 48 ஆயிரம் வாக்குகள் பெற்ற கஜேந்திர பொன்னம்பலம் முதல் தங்கேஸ்வரி வரை சகலரும் விலகினார்கள். பழைய தலைவர்களின் ஆசனம் பறிபோய்விடும் என்பதற்காக இந்நாடகத்தை நடத்துகிறார்கள். கல்முனைக்கு வந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤டன் கூட்டுவைக்கிறார்கள். இப்பச்சோந்திகளை யார் நம்புவது?

அம்பாறை மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றக் கூடிய 45 ஆயிரம் வாக்குகளை பெறக்கூடிய ஒரே வல்லமை ஸ்ரீல. சு. கட்சியின் இனியபாரதி க்கு மட்டுமே உண்டு.


No comments:

Post a Comment