மகளிர் தினத்தன்று நியூயார்க், கொழும்புக்கு இயக்கப்பட்ட அனைத்து மகளிர் விமானங்கள்.
மகளிர் தினத்தையொட்டி நேற்று சென்னையிலிருந்து கொழும்புக்கும், மும்பையிலிருந்து நியூயார்க் நகருக்கும் முற்றிலும் பெண் ஊழியர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்த விமானங்கள் இயக்கப்பட்டன. சர்வதேச மகளிர் தினம் நேற்று உலக முழுவதும் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி மகளிரை கெளரவப்படுத்தும் வகையில் நேற்று மும்பையிலிருந்து நியூயார்க் நகருக்கு முதல் முறையாக மகளிர் மட்டுமே இயக்கிய விமானத்தை ஏர் இந்தியா செலுத்தியது.
மும்பையில் இருந்து நியூயார்க் நகருக்கு வழியில் எங்கும் நிற்காமல் 14 மணி நேரம் தொடர்ந்து பயணம் செய்யும் வகையில் போயிங் 777-200 ரக விமானத்தை முழுவதும் பெண்களே இயக்கும் வகையில் ஏர் இந்தியா நிறுவனம் ஏற்பாடு செய்து இருந்தது.
இந்த விமானத்தில் பெண் கேப்டன்கள் மிரன்டா, சுனிதா நருல்லா ஆகியோர் விமானத்தின் கமாண்டர்களாகவும், பெண் கேப்டன்கள் சுவாதி ரவால், நேகாகுல்கர்னி ஆகியோர் விமானத்தின் முதல் அதிகாரிகளாகவும் இருந்தனர். நேற்று பிற்பகல் 1.30 மணி அளவில் மும்பையில் இருந்து 174 பயணிகளுடன் இந்த விமானம் புறப்பட்டது.
இதுபற்றி காமாண்டர் சுனிதா கூறும்போது, எப்போதும் விமானத்தில் 2 ஆண் விமானியும், 2 பெண் விமானியும் இருப்பார்கள். சில சமயங்களில் 3 ஆண் விமானியும், 1 பெண் விமானியும் இருப்பார்கள். ஆனால் முதல் முறையாக பெண் விமானிகளை மட்டும் கொண்டு விமானம் இயக்கப்படுவது இது தான் முதல் முறை என்றார்.
இதேபோல, சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து கொழும்பிற்கு முழுக்க முழுக்க பெண்களே இயக்கிய விமானத்தை இந்தியன் ஏர்லைன்ஸ் செலுத்தியது. விமானி தீபா மேத்தா தலைமையில் உதவி விமானி சோனியா ஜெயின், பணிப் பெண்கள் ராஜானி, விருந்தா, தன்னியா, பிரசன்னா, யாமினி கொண்ட குழு தயாரானது.
இந்த விமானத்தில் 141 பேர் பயணம் செய்யதனர். கொழும்பிற்கு பெண்களே இயக்கும் விமானத்தில் செல்ல இருந்த விமானி, உதவி விமானி, பணிப்பெண்கள், பெண் பயணிகள் ஆகியோருக்கு தென்மண்டல விமான நிறுவன அதிகாரி சுனில் கிஷாந்த் மலர் கொத்து தந்து வழியனுப்பி வைத்தார்.
விமானி தீபாமேத்தா நிருபர்களிடம் கூறுகையில், தற்போது விஞ்ஞான ரீதியாக பெண்கள் மேலோங்கி வருகின்றனர். பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற நிலைமை கொண்டு வரப்படுகிறது.
அப்படி இருக்கும்போது கொழும்பிற்கு ஆண்கள் உதவியின்றி முழுக்க முழுக்க பெண்களை கொண்டே இயக்க உள்ளோம். இது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. பெண்களால் சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்க இந்த வாய்ப்பு கிடைத்து உள்ளது என்று விமானி தீபா மேத்தா கூறினார்.
பெண் குழுவால் இயக்கப்பட்ட அந்த விமானம் கொழும்பு சென்றுவிட்டு மாலை 4.25-க்கு சென்னை திரும்பியது. வரும் வழியில் 117 பயணிகள் அதில் பயணித்தனர்.
0 comments :
Post a Comment