Tuesday, March 30, 2010

அனைத்து வேட்பாளர்களும் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு அனுமதிக்கப்படுவர்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு அனுமதிக்கப்படுவர் என ரத்னபுர மாவட்ட சிரேஸ்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம்ஏபிசி பெரேரா தெரிவித்துள்ளார். விருப்புவாக்குகள் எண்ணும்போது தவறுகள் நிகழ்ந்துள்ளதாக எழக்கூடிய குற்றச்சாட்டுக்களை தடுக்குமுகமாகவே இவ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், வேட்பாளர்கள் வாக்கெண்ணும் நிலையங்ளுக்கு சமூகமளித்து தமக்கான வாக்குகளின் எண்ணிக்கையை நேரடியாக அறிந்து கொள்ள முடியும் எனவும் மேலும் கூறியுள்ளார்.

அத்துடன் தாபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் குறிப்பிடத்தக்களவு நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், விண்ணப்பங்கள் சரியாக நிரப்பப்படாமை, முடிவுத் திகதிக்கு முன்னர் கிடைக்கப்பெறாமை, தபால்மூல வாக்களிப்புக்கு தகுதியற்றவர்கள் என இவ்நிராகரிப்புக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளவர்கள் எதிர்வரும் 8ம் திகதி நேரில் சென்று வாக்களிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்களிப்பின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக வாக்களித்தவர்கள் பலர் இம்முறை தபால் மூலம் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என ஜேவிபி குற்றஞ்சாட்டியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

தேர்தலின் மூலம் தெரிவாகவுள்ள 196 ஆசனங்களுக்காக இம்முறை நாடுபூராகவும் 7620 பேர் போட்டியிடுகின்றனர்.

No comments:

Post a Comment