Monday, March 29, 2010

ஈபிடிபி யினர் தமது சாவகச்சேரி , வவுனியா அலுவலகங்களிலிருந்து தப்பியோட்டம்.

சாவகச்சேரி மற்றும் வவுனியா பிரதேசத்தில் இரு அப்பாவி இளைஞர்கள் கடந்த தினங்களில் கொல்லப்பட்டிருந்தனர். இக்கொடிய கொலைகளை ஈபிடிபி அமைப்பினரே செய்துள்ளதாக தெரியவந்துள்ள நிலையில் சாவகச்சேரி பிரதேச மக்கள் ஈபிடிபி அலுவலகத்தினுள் நுழைந்து காரியாலயத்தை துவம்சம் செய்துள்ளதாக தென்மாராட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் அலுவலகத்தினுள் நுழைந்தபோது அக்காரியாலத்திலிருந்த ஈபிடிபி உறுப்பினர்கள் தப்பியோடியுள்ளதாகவும், காரியாலயத்தை மீண்டும் கைப்பற்ற அமைச்சரினால் இராணுவ உதவி நாடப்பட்டபோதும், அங்கு மக்கள் கொதித்த நிலையில் காணப்படுவதை சுட்டிக்காட்டிய வட பாதுகாப்புத் தலைமையகம் உடனடியாக செயலில் இறங்க முடியாது என கைவிரித்துள்ளதாக நம்பந்தகுந்த வட்டாரங்களிலிருந்த தெரியவருகின்றது.

அதேநேரம் வவுனியா மக்களும் அங்குள்ள ஈபிடிபி அலுவலத்தை தாக்க முன்னேற்பாடுகள் செய்திருந்ததை அறிந்து காரியாலய பிரதேசத்தில் மேலதிக பொலிஸ் ரோந்து இடம்பெறுவதாகவும், காரியாலத்திலிருந்து ஈபிடிபி யினர் தற்காலிகமாக வெளியேறியுள்ளதாகவும் வவுனியா தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்படி இரு சம்பவங்கள் தொடர்பாகவும் பொலிஸ் தரப்பிலிருந்த ஈபிடிபி யினருக்கு வெளிப்படையான உதவிகள் எதுவும் கிடைக்கப்பெறமாட்டாது என நம்பகரமாக தெரியவருகின்றது. எவ்வாறாயினும் இரு சம்பவங்கள் தொடர்பான சரியான தகவல்கள் நாளை அல்லது மறுதினம் வாசகர்களுக்கு தெளிவாக எடுத்துவரப்படும்.

No comments:

Post a Comment