Sunday, March 21, 2010

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானப் பணியாளர்கள் வேலை நிறுத்தம்

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானச்சேவை நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 12,000 விமானப் பணியாளர்கள் திட்டமிட்டபடி வார இறுதியில் மூன்று நாள் வேலை நிறுத்தத்தைத் தொடங்கினர். வேலை நிறுத்தத்தைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன் நடைபெற்ற கடைசி நேரப் பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, வேலை நிறுத்தம் நடைபெறுவது உறுதியானது.

பேச்சு வார்த்தையில் இணக்கம் ஏற்படவில்லை என்று விமானச்சேவை நிறுவனத்தின் தலைமை நிர்வாகி வில்லி வால்ஷும் தொழிற்சங்கத்தின் தலைவர் டோனி ஊட்லியும் தெரிவித்தனர். வேலை நிறுத்தத்தின் முதல் மூன்று நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானப் பயணங்கள் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு, மார்ச் 27ம் தேதி முதல் மேலும் நான்கு நாட்களுக்கு வேலை நிறுத்தம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“அனைத்து பேச்சு வார்த்தைகளும் முறிந்துவிட்டன என்பதை ஏமாற்றத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். வெள்ளிக்கிழமை நள்ளிரவு நேரத்தில் வேலை நிறுத்தம் தொடங்கும்.
இந்நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்த விரும்பவில்லை. எனது உறுப்பினர்களுடன் மோதவே இந்நிறுவனம் விரும்புகிறது” என்று திரு ஊட்லி செய்தியாளர்களிடம் சொன்னார்.

கடைசி நேரத்தில் சம்பளத்தைக் குறைக்கும் திட்டத்தை பிரிட்டிஷ் ஏர்வேஸ் முன்வைத்ததாக அவர் கூறுகிறார். முதல் வேலை நிறுத்தத்தின்போது, 1,950 விமானப் பயணங்களில் 1,100 பயணங்கள் நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால், வேலை நிறுத்தத்தில் இடம்பெறாத ஊழியர்களைப் பயன்படுத்தி குறைந்தது 60 விழுக்காடு விமானப் பயணங்களை நடத்தப் போவதாகப் பிரிட்டிஷ் ஏர்வேஸ் உறுதி கூறியிருக்கிறது.

No comments:

Post a Comment