Saturday, March 13, 2010

ரஞ்சிதாவுடன் இருப்பது நான்தான்: நித்தியானந்தா ஒப்புதல்

நடிகை ரஞ்சிதா உடன் படுக்கை அறையில் இருப்பது தாம்தான் என்று முதன் முறையாக ஒப்புக்கொண்டுள்ள நித்தியானந்தா, அதே சமயம் சட்டவிரோதமாக தாங்கள் எதையும் செய்யவில்லை என்று கூறியுள்ளார். ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா படுக்கையறையில் ஒன்றாக இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து பெரும் பரபரப்பும், சர்ச்சையும் ஏற்பட்ட நிலையில், அவரது பக்தர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், கடந்த 10 ஆம் தேதி முதல் முறையாக திடீரென வீடியோவில் தோன்றி, தான் அலகாபாத் கும்பமேளாவில் இருப்பதாகவும், விரைவில் நேரில் வந்து எல்லாவற்றையும் விளக்குவேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவைச் சேர்ந்த நித்தியானந்தாவின் தீவிர சீடரும், எழுத்தாளருமான ராஜீவ் மல்ஹோத்ரா என்பவர், நித்தியானந்தாவின் இரண்டாவது வீடியோ பேட்டியை வெளியிட்டார்.

அதில், ரஞ்சிதா விவகாரம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் நேற்று இரவு மல்ஹோத்ரா - நித்தியானந்தா உரையாடல் வீடியோவின் மூன்றாவது பாகம் வெளியிடப்பட்டது.அதில் நடிகை ரஞ்சிதா உடன் படுக்கை அறையில் இருப்பது தாம்தான் என்று முதன் முறையாக ஒப்புக்கொண்டுள்ளார் நித்தியானந்தா.

அதில் , " ரஞ்சிதா என் நீண்ட நாள் பக்தை. அவரின் குடும்பமும் எனக்கு நீண்ட காலமாக பக்தையாக இருக்கிறார்கள்.

பரந்து விரிந்த இந்த சமுதாயத்தால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றையே நாங்கள் செய்தோம். சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத எந்த சோதனை முயற்சியையும் நான் மேற்கொள்ளவில்லை.

அந்த வீடியோவில், சட்டத்துக்கு புறம்பாக எந்த விதமான அம்சங்களும் இல்லையே. ஆடை அணிந்த நிலையில் இரண்டு நபர்கள் இருக்கும் அந்த வீடியோவில் என்ன சட்டவிரோதமான செய்கை இருக்கிறது?

இன்னொன்று இதில், யாரும் யாரையும் எதற்காகவும் நிர்பந்திக்கவில்லை. அந்த வீடியோ எடுத்ததாக சொல்லப்படும் டிசமபர் 2009 ல் எனக்கு உடல் நிலை சரியில்லாததால் ஒரு தாய்மை உணர்வோடு ரஞ்சிதா எனக்கு உதவிகள் செய்தார்.அதை படம் பிடித்து கூடுதல் காட்சிகளை இணைத்து வெளியிட்டுள்ளார்கள்.

மற்றபடி ரஞ்சிதா என் பக்தை.அவ்வளவுதான்.அவர் எனக்கு எப்போதும் பக்தையாக இருப்பார். இது உண்மை. இது சத்தியம்.

எனக்கு எதிரிகள் இல்லை என்று நினைத்தேன். வீடியோ வெளிவந்ததும் அதிர்ச்சியடைந்தேன்; எனக்கு எதிரிகள் இருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டேன்.

என்னை விட மீடியா தான் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.எனவே மீடியா சொல்வது தான் உண்மை என மக்கள் நம்புகிறார்கள்.

நாங்கள் எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்துள்ளோம். அவற்றைப் பற்றி யாரும் அக்கறை கொள்ளவே இல்லை.இன்று இந்த சாதாரண விஷயத்தைப் பெரிதாக்கி களங்கம் கற்பிக்கிறார்கள்.

இன்று எங்கள் ஆஸ்ரமத்தில் வெறும் 20 பேர் மட்டுமே உள்ளனர். மற்றவர்கள் உயிருக்குப் பயந்து ஓடிவிட்டார்கள். எனது உயிருக்கே உத்தரவாதமிருக்குமா தெரியவில்லை.அதனால்தான் நான் இன்னமும் வெளிப்படையாக வராமல் இருக்க வேண்டியுள்ளது" " என்று கூறியுள்ளார்

'மாஸ்டர்'களுக்கு இது சகஜம் தான்..


இதற்கிடையே 'டைம்ஸ் நவ்' தொலைக்காட்சி சேனலுக்கு பிரத்தியேகமாக பேட்டி அளித்துள்ள நித்தியானந்தா, 'ரஞ்சிதா என்னுடைய சிஷ்யை. இதற்கு முன்பும், இப்போதும், எப்போதும் அவர் என்னுடைய சிஷ்யையாகவே இருப்பார்.

நான் உடல்நலம் சரியில்லாமல் இருந்தேன். அப்போது எனக்கு பக்தை என்ற முறையில் ரஞ்சிதா எனக்கு பணிவிடை செய்தார். அதில் என்ன தவறு இருக்கிறது?

எந்த ஒரு மனிதருக்கும் உதவி செய்ய ஒருவர் தேவை தானே, ஒரு பக்தை தாமாக முன்வந்து பணிவிடை செய்வதை நான் மறுக்க முடியாது. அதை ஏற்பதும் தவறல்ல.

மற்றபடி, சட்டவிரோதமாக நானும் ரஞ்சிதாவும் எதையும் செய்யவில்லை.இவையெல்லாம் எனக்கு எதிராக திட்டமிடப்பட்ட ஒரு சதி தானே தவிர வேறில்லை. இதுபோன்ற குற்றச்சாட்டுகள் மிகப் பெரிய 'மாஸ்டர்'களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆதி சங்கராச்சாரியார், சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ணர் போன்றவர்களும் இதுபோன்ற சோதனைகளை சந்தித்தார்கள்.

ஒவ்வொரு 'குரு'வும் வாழ்நாளில் இதுபோன்ற ஒரு சோதனையான கட்டத்தை தாண்டித்தான் சென்றாக வேண்டும். எல்லா மாஸ்டர்களும் உடலாக இருந்த சமயத்தில் இன்றைய நித்தியானந்தா நிலையை கடந்து தான் சென்றார்கள்' என்று கூறியுள்ளார்.

நித்யானந்தருக்கு ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்ற‌ம் அழை‌ப்பாணை
''பாலியல் புகாரில் சிக்கியுள்ள நித்யானந்த‌ர் ஏப்ரல் 2ஆம் தேதி ஆஜராக வேண்டும்'' என்று ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த வழ‌க்க‌றிஞ‌ர் கே.செல்வமணி என்பவர், ஸ்ரீபெரும்புதூர் மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில், 'புனிதமான காவி உடை அணிந்து நித்யானந்த‌ர், நடிகையுடன் சல்லாபத்தில் ஈடுபடும் காட்சிகள் தொலைக்காட்சி, பத்திரிகைகளில் வெளியானது.

சாமியார் என்ற போர்வையில் நல்லொழுக்கம், நீதிபோதனை செய்துவிட்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது இந்து மத உணர்வாளர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளது. அவர் மீது 295ஏ பிரிவின் கீழ் கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

இ‌ந்த மனுவை விசாரித்த நீதிபதி குணசேகர், நித்யானந்த‌ர் ஏப்ரல் 2ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக அழை‌ப்பாணை அனுப்ப உத்தரவிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com