Sunday, March 14, 2010

குற்றப்பத்திரிகை : இராணுவ நீதிமன்று இரண்டும் ஜெனரல் பொன்சேகாவால் நிராகரிப்பு.

இராணுவச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மீதான விசாரணைகள் எதிவரும் 16, 17 ம் திகதிகளில் இராணுவ நீதிமன்றில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தமக்கு எதிரான குற்றப் பத்திரிகைகளை நிராகரித்துள்ளதாகவும், குறிப்பிட்ட தினங்களில் இராணுவ நீதிமன்றில் ஆஜராக மாட்டார் எனவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இராணுவ நீதிமன்றத்தினால் பொன்சேகாவிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப் பத்திரிகையை ஒப்படைக்கும் நடவடிக்கைகள் வெற்றியளிக்கவில்லை. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் பணிப்புரையின் பேரில், பொன்சேகாவிற்கு எதிராக 7 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணைகளை மேற்கொள்ள மூன்று பேர் அடங்கிய இராணுவ நீதிமன்றமொன்று அமைக்கப்பட்டுள்ளது. இராணுவச் சட்டத்தின் அடிப்படையில் இராணுவ அதிகாரி ஒருவரை விசாரணை செய்வதற்கான நீதிமன்றில் குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளவரிலும் பார்க்க உயர்ந்த தரத்தில் உள்ளவர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படவேண்டும் எனவும் நியமிக்கப்பட்டுள்ளவர்கள் மூவரும் ஜெனரல் பொன்சேகாவிலும் பார்க்க இளநிலை அதிகாரிகள் எனக் கூறப்படுவதுடன், அவர்களில் ஒருவர் தற்போதைய இராணுவத் தளபதியின் மைத்துனர் எனவும் முன்னாள் பா.உ அனுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சுமத்தியுள்ளார்.

பொன்சேகா குற்றப் பத்திரிகையை ஏற்றுக் கொண்டாரா அல்லது நிராகரித்தாரா என்பது குறித்து கருத்து எதனையும் வெளியிட முடியாது என இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். அதேநேரம் ஜெனரல் இராணுவ நீதிமன்றை நிராகரித்தாலும் அதிகாரிகள் அவரை மன்றில் அஜர் படுத்துவார்கள் என தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் இயக்குனர் லக்ஸ்மன் குலுகல்ல தெரிவித்திருந்தார்.

இவருக்கு எதிரான இராணுவ விசாரணை வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் கொழும்பு கடற்படை தலைமையகத்தில் நடைபெறவுள்ளது, வரும் செவ்வாய்க்கிழமையன்று இராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படும் போது அவரது சார்பாக, பிரபல வழக்கறிஞர்கள் தயா பெரேரா உள்ளிட்டவர்கள் ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள குற்றவியல் சட்டத்தரணிகளில் மிகப்பிரபல்லமானவர் தயாபெரேரா என்பதுடன் இராணுவச் சட்டதிட்டங்கள் தொடர்பான விசேட நிபுணர் எனவும் கூறப்படுகின்றது.

குற்றப்பத்திரிகையை நிராகரித்துள்ள ஜெனரல் பொன்சேகா தான் இராணுவச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டவன் அல்ல எனவும் கைது சட்டவிரோமானது எனவும் தெரிவித்துள்ளதாக ஜேவிபியின் முன்னாள் பாராளுமன்றக் குழத் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதே நேரம் ஜெனரல் மீதான குற்றச்சாட்டுக்களை முறியடிப்பதற்கு முன்னாள் பிரத நீதியரசர் தலைமையிலான சட்ட நிபுணர்கள் குழு தயார்படுத்தல்களைச் செய்துவருவதாக ஜெனரலுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எது எவ்வாறாயினும் ஜெனரல் பொன்சேகா கைது செய்யப்பட்டபோது அவர் இராணுவப் புரட்சி ஒன்றின் மூலம் நாட்டினைக் கைப்பற்ற சதித்திட்டம் தீட்டியிருந்தாகவும், நாட்டின் ஜனாதிபதி உட்பட அவரின் சகோதர்கள் கொல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் மேற்படி குற்றச்சாட்டுக்கள் இல்லை என தெரியவருகின்றது.


No comments:

Post a Comment