Thursday, March 25, 2010

கூத்தமைப்பும் பவுணு விடுவதெல்லாம் கவுணு ஆத்தாடி அம்மாடி டவுணு! - சதா. ஜீ.

'கொல்பவன் வெல்வான்' – தயாரிப்பு: தமிழீழம். இது ஒரு காலத்தில் புலிகள் தயாரித்த வெடிபொருளில் எழுதப்பட்டிருந்தது மட்டுமல்ல வேலுப்பிள்ளைன்ர பெடியன் ஒவ்வொரு நொடியும் தனக்குத்தானே சொல்லிக்கொண்டதும் புலி உறுப்பினர்களின் நெஞ்சில் எழுதியதுமாகும். இதை அடிமைப்பட்ட புத்திஜீவிகள், தமிழ் ஊடகங்கள் பரப்பினார் நியாயப்படுத்தினர்.

இப்போ பெடியன்ர இடத்தை சம்பந்தன் குழு பிடித்துக்கொண்டுள்ளது. 'தமிழ்பேசும் மக்களுடைய அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய நீதியானதும் நியாயமானதுமான நிரந்தர அரசியல் தீர்வு வந்தே ஆகும். நாம் எவருக்கும் அடிமையாக அடிபணிந்து வாழ வேண்டியது அவசியமில்லை. ஜனாதிபதி எந்தத் தமிழ்த் தலைவருடன் அரசியல் தீர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் உறுதியாகத் தெரிவிப்பார்கள்' என்று சண்டியர் சம்பந்தனின் சண்டித்தனம்.

அரசியல் தீர்வு குறித்து ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் தாம் கலந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படவில்லை சம்பந்தர். 'தாமே' அதாவது தாம் மட்டுமே பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும். அதற்கான லயக்கும் தமக்கே இருப்பதாக கூட்டம்போட்டு கூப்பாடு போடுகிறார்கள் இந்தக் குழுவினர்.

ஒற்றுமையின்மையைக் குறைத்து தமிழ் பிரதிநித்துவத்தை குறைத்துக்கொள்ளக்கூடாது என்றுவேறு அரிய கண்டுபிடிப்பைவேறு சொல்லிக்கொள்கிறார்கள். அது எப்படி என்று அவர்களையே கேட்கவேண்டும். தமிழ் பிரதிநித்துவமல்ல, கூத்தமைப்பின் பிரதிநித்துவம் குறைந்து சித்தெறும்பாகப் போகிறது. தொகுதிவாரியாக எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த பாராளுமன்ற ஆசனம் யார் கூடுதலான வாக்குகளைப் பெற்றுக்கொள்கிறார்களோ அவர்களுக்கு வழங்கப்படும். இம்முறை பன்முகப்பட்ட தமிழ் பிரதிநித்துவம் தெரிவாகும். இதில் எப்படி தமிழ் பிரதிநித்துவம் குறைந்துவிடும்.

கூத்தமைப்பின் அவா என்னவென்றால் தாம் மட்டுமே பாராளுமன்றம் செல்லவேண்டும். ஒற்றுமையாக அனைத்து வசதி வாய்ப்புக்களையும் தாமே அள்ளிக்கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நல்நோக்கம்!

அதைவிடுத்து தமிழ் மக்களின் அரசியல் தீர்வு பற்றிப் பேசுவாதாக இருந்தால் எப்போதோ பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கலாம். அதற்கான சந்தர்ப்பங்கள் நிறையவே வந்துபோயின. ஆனால் அதையெல்லாம் தட்டிக்கழித்துவிட்டு இன்று ஒற்றுமையுடன் மக்கள் வாக்களிக்க வேண்டும். தாம் மட்டுமே பாராளுமன்றம் செல்லவேண்டும், ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும்.

பிரிந்துபோன தமிழ் காங்கிரஸ் மீண்டும் வந்து இணைந்துகொள்ள வேண்டும். அது பிரிந்துநிற்பதால் வாக்குகள் பிரிந்து செல்லப்போகிறது. இது ஈபிடிபிக்கு வாய்ப்பாக போகும். சுயேற்சைகளுக்கு அல்லது யூஎன்பிக்குப் போகும்.

சண்டியர் சுடலைக்குப் போகிற வழியைத் தெரிந்துகொள்கிற வேளையில் மனிதனுக்கு வாழ வேண்டும் என்ற ஆசையைக் காட்டிலும் 'அள்ள' வேண்டும் என்ற பேராசையை என்னவென்று சொல்வது?

கடந்த ஆறாண்டு காலமாக கூத்தமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 22 பேரும் என்ன செய்தார்கள் என்பது வெள்ளிடை மலை. இவர்கள் ஆயிரத்தெட்டு விளக்கங்கங்களையும் முழக்கங்களையும் வெளியிட்டாலும் அதனைப் பகுப்பாய்வு செய்கின்ற பக்குவம், பொதுப்புத்தி நமக்குத் தேவை.

தமிழ் பிரதேசங்களை ஆக்கிரமிக்கிறான். சிங்கள குடியேற்றம் - புத்த விகாரையைக் கட்டுகிறான். தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகிறது என்பதெல்லாம் உண்மை. ஆனால் இதற்கான வாதங்களும் நியாயங்களும் எதிர்தரப்பில் இருக்கிறது அதனை மறுப்பதற்கில்லை. 'தக்கன பிழைக்கும்' என்ற விஞ்ஞானத்தை விடுவம். இந்த கூத்தமைப்பினரினால் என்ன செய்ய முடியும்? ஆனானப்பட்ட அமிர்தலிங்கம் நாட்டின் எதிர்கட்சித் தலைவராக இருந்து என்னத்தை கிளிக்க முடிந்தது. வெளிநாட்டில்தான் வாழ முடிந்தது. கொழும்புக்கு வந்து வாழ்வை முடிக்கவேண்டியேற்பட்டது.

இந்த பொதுப்புத்தி நமக்குப் பிடிபடாவிட்டால் சாதாரணமாக யோசித்தால், இந்த 22 பேரும் கடந்த ஆறாண்டு காலம் பாராளுமன்றத்தை அலங்கரித்தனர். அதற்கான கொழுத்த ஓய்வூதியம் கிடைக்கும். இதற்கு மேலாகவும் வேண்டும் என்ற அடம்பிடித்தால் எப்படி? வேறு 22 பேர் பாராளுமன்றம் போய் அவர்களும் தங்கள் மனைவி பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு வழிசமைத்து கொஞ்சம் சொத்து சேர்க்கட்டுமே! இது ஒரு சாதாரண புத்தி. நியாயமான புத்தி தானே!

இனி உண்மையான அக்கறையோடு சிந்திப்போமானால், இலங்கை இனப்பிரச்சினையைப் பொறுத்தவரையில் செய்யதைக்காட்டிலும் சொல்வது எளிது. முதலாவதாக இலங்கை ஒரு சிறிய நாடு. பல்லினங்கள், மதங்கள், பல கலாசாரங்களைக் கொண்ட நாடு. பல முரண்பாடுகளுக்கு மத்தியிலும் நாம் ஐக்கியத்தைப் பேணவேண்டும் என்பதே யதார்த்தம். அரசியல் பொருளாதார கலாசார அபிவிருத்தி வெகுவாக சீர்குலைந்துள்ளது. பொதுமக்களின் அரசியல் பரிணாமமும் சமநிலையில் இல்லாதிருக்கின்றது.

இந்நிலையில் இனப்பிரச்சினைக்கு மேலாக இலங்கையின் தேசிய நிலைமையை கவனத்தில் கொள்ள வேண்டும். அரசியல் தலைவர்கள் தனது மக்களின் அரசியல் சித்தாந்தக் கல்வியின் மீது அதிக கவனம் செலுத்தவேண்டும். கட்சி, அரச ஊழியர்களின் ஊழல், லஞ்சம் பெறல் ஆகிய பல்வேறுபட்ட பிரச்சினைளைத் தீர்ப்பதற்கு நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். இதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்பது மட்டுமல்ல பல முரண்பாடுகள் வெடிப்புக்கள் நிகழும். நாம் 'மனிதம்' என்கிற உயரிய சிந்தனையை உயர்த்திப் பிடிப்போமானால் முரண்பாடுகளெல்லாம் கால் தூசுக்குப் பெறாது.

இனம் கடந்து, மொழி கடந்து, மதம் கடந்து, சாதி கடந்து, கலாசாரம் கடந்து நாம் இணைந்து பணியாற்றுவதே அரசியல் சீர்திருத்தத்துக்கு உருப்படியான படிக்கற்கள்.
வெறும் உணர்ச்சி இனவாதப் பேச்சுக்களால் ஏற்பட்ட உட்சண்டைகள் இலட்சக்கணக்கான உயிர்களை பலியிடுவதையும் பலகோடி பெறுமதியான பொருளாதாரத்தை அழித்ததையும் தனிப்பட்டவர்களின் மனதைப் புண்படுத்தியதைத் தவிர வேறென்ன? இந்த இனவாதப் போக்குகளில் இருந்து தப்பிப் பிழைத்தலின் யதார்த்த நிலை பயங்கரமானது. நான் சிறந்தவன் என்பது சரி. நான்தான் சிறந்தவன் என்பது எந்தவகையில் நியாயமானது? இது பிற மனிதர்களை இழிவுக்குட்படுத்தும் செயலல்லவா?

இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் போதுமான பல கஷ்டங்கள் உள்ளன. இது போதாதென்று இனவாதம் பேசும் தமிழ் கட்சிகள் அரசயில் தீர்வை நாமே பெற்றத் தருவோம் என்றும் யாருக்கும் சோரம் போகமாட்டோம் என்றும் சமஷ்டி ஒன்றும் பேயுமல்ல பிசாசுமல்ல என்று மக்களை வதைத்தெடுப்பது வேதனையளிக்கிறது.

சமூகப் பெறுமதியான சிந்தனைகளை முன்வைக்கத் திராணியற்றவர்கள் இவர்கள் என்பதை தமிழ் மக்கள் இனம்காணவேண்டும். பெரும்பாலான தமிழ் ஊடகங்களும் இந்த திக்கற்றவர்களின் வெற்றுப் பேச்சுக்களையே நம்பி பிழைப்பு நடத்துகிறார்கள். இதனால் சமூகப் பெறுமதியான சிந்தனைகள் மக்களுக்குப் போய்ச் சேர்வதில்லை.

ஆனாலும் மக்கள் தமதும் தம் சந்ததியினதும் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு செயலாற்றும் தருணம் இது. வெறும் உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டுவிடாமல் விழிப்புடன் இருக்க வேண்டும். சமூகப் பெறுமதியான சிந்தனைகள் எவை என்பதை இனம் காணவேண்டும். அதனை முன்வைப்பவர்கள் எவர் என்பதை அடையாளம் காணவேண்டும். அவ்வாறான சமூகப் பிரஞ்னையுள்ளவர்களை தமது பிரதிநிதிகளாக தேர்ந்தெடுத்து வளமான சமூகத்தை கட்டியமைக்க வேண்டும்.

பிரகாசமான எதிர்காலத்தை உண்மையில் விரும்பும் அனைவரும் இந்தப் பிரச்சினைகளின் மீது வழிப்பாக இருக்க வேண்டும்.

1 comments :

Anonymous ,  March 26, 2010 at 6:06 PM  

Tamils need fresh and efficient and honest guys to the parliament.Let the clowns party get to a side.The shows what they have given to tamils is enough enough and enough

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com