Thursday, March 25, 2010

சிறிலங்காவின் போர்க்குற்ற விவகாரம்: ஐ.நா.வுக்கு வழிவிட இந்தியா, சீனா முடிவு

இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகள் விடயத்தில் ஐ.நா.வுக்கு வழிவிட இந்தியா, சீனா உள்ளிட்ட அதன் ஆதரவு நாடுகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகள் விடயத்தில் ஐ.நா. சபை முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு சிறிலங்காவுக்கு ஆதரவான நாடுகள் உட்பட பன்னாட்டு சமூகம் ஒருவரையறைக்கு அப்பால் சிறிலங்காவுக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என்றும், இந்தியா, சீனா உட்பட சிறிலங்காவுக்கு நெருக்கமான நாடுகளும் மேற்குலகை பகைக்காமல் ஐக்கிய நாடுகள் சபையின் சிறிலங்காவுக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கும் சாத்தியக்கூறுகளே காணப்படுவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்திருப்பதாவது:

சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் நிபுணர்கள் குழு ஒன்றை நியமி்ப்பதற்கு முடிவெடுத்திருப்பது தொடர்பாக, சிறிலங்காவுக்கு ஆதரவாக ஐ.நா. சபையில் அங்கம் வகிக்கும் அணிசேரா நாடுகள், பான் கீ மூனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பதாக கூறப்பட்டது.

ஆனால்,பான் கீ மூனுக்கு அணிசேரா நாடுகள் அனுப்பியுள்ள இந்த எதிர்ப்பு கடிதத்தில், ஆதரவு வழங்குவதாக பகிரங்கமாக அறிவிக்கவும் இல்லை. சிறிலங்காவுக்கு ஆதரவாக தனது கருத்தினை வெளியிடவுமில்லை.

சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகள் விடயத்தில் மேற்குலகம் தற்போது மிகுந்த சிரத்தை காண்பிப்பதனால், இந்த விவகாரத்தில் தான் இனிமேலும் சிறிலங்காவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்து மேற்குலகினை பகைத்துக்கொள்ளக்கூடாது என்று இந்தியா கருதுவதாக கூறப்படுகிறது.

அதுபோலவே, சீனாவின் நிலைமையும் சிறிலங்காவுக்கு ஆதரவாக இருக்கும் என்று கூறுவதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஈரான், சீனாவுக்கு மிக நெருக்கமான நாடு.இராணுவ, பொருளாதார விடயங்கள் உட்பட பல விவகாரங்களில் நெருக்கமான உறவுகளை இந்த இருநாடுகளும் பேணி வருகின்றன.

ஆனால், ஈரானுக்கு எதிரான ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்ட மூன்று தீர்மானங்களுக்கு சீனா ஆரம்பத்தில் தனது கடும் எதிர்ப்பை காண்பித்தபோதிலும், கடைசியில் மேற்குலகின் பேச்சுக்கு கட்டுப்பட்டு ஈரானுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவளிக்கவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்பட்டது.

அப்படிப்பட்ட ஈரான் விடயத்திலேயே மேற்குலகின் கட்டுப்பாட்டுக்குள் சிக்கிக்கொண்ட சீனா, சிறிலங்கா விடயத்தில் கடைசிவரைக்கும் முரண்டுபிடித்துக்கொண்டு ஆதரவளிக்கப்போவதில்லை. இதுஇவ்வாறிருக்க, சிறிலங்காவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்த பல அணிசேரா நாடுகளே, பான் கி மூனுக்கு அனுப்பிய கடிதத்தில் கையெழுத்திடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிறிலங்காவுக்கு மிகவும் நெருக்கமான நாடான லிபியாவின் பேச்சாளர் ஒருவரிடம் சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்காமல், அந்த கேள்விக்கான பதிலை சிறிலங்காவிடமோ அல்லது ஐ.நா.விடமோ கேட்கும்படி கூறி நழுவியுள்ளார்.

இதன் அடிப்படையில் பார்க்கும்போது, போர்க்குற்றங்கள் தொடர்பான விடயத்தில் சிறிலங்காவுக்கான சர்வதேச ஆதரவு என்பது சிறிலங்கா நினைப்பதுபோல காணப்படவில்லை.

சிறிலங்காவுக்கு எதிரான ராஜதந்திர அஸ்திரங்களையும், அரசியல் அழுத்தங்களையும் பிரயோகிப்பதற்கு மேற்குலகம் கங்கணம்கட்டி நிற்கிறது.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com