Monday, March 22, 2010

அவசரகாலச்சட்டத்தை நீக்க இலங்கை இணக்கம்?

அவசரகாலச்சட்டத்ததையும், மனித உரிமைகள் தொடர்பான சட்டங்களையும் மறு ஆய்வு செய்ய தாம் தயாராக இருப்பதாக இலங்கை அதிகாரிகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு நாள் பயணமாக பிரஸல்ஸ் சென்றுள்ள இலங்கை குழுவினர், ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெறுவது குறித்த பேச்சுவார்த்தையை மேற்கொண்டிருந்தனர்.

அப்போபோது அவசரகாலச்சட்டத்தை தளர்த்துவது, குற்றப்புலனாய்வு விசாரணைகளுக்கு அதிக அதிகாரங்களை கொடுக்கும் சில சட்டவிதிகளையும், சரத்துக்களையும் நீக்குவது போன்றன தொடர்பாக அவர்கள் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கு சில உறுதிமொழிகளை வழங்கியுள்ளனர்.

வரும் பொதுத்தேர்தலின் பின்னர் சாட்சியங்களை பாதுகாத்தல், பாதிக்கப்பட்டவர்களை பாதுகாத்தல் போன்ற விதிகளையும் தாம் அறிமுகப்படுத்த உள்ளதாக இலங்கை குழு தெரிவித்துள்ளது.

இதனிடையே இலங்கை தூதுக்குழுவினருடன் நடைபெற்ற பேச்சுக்கள் குறித்த தகவல்களை வெளியிடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் பேர்னாட் சாவேஜ் மறுத்துள்ளபோதும், பேச்சுக்கள் முக்கியமானது எனவும், ஆனால் அது மட்டும் தமது முடிவுகளை மாற்றியமைக்க போதுமானதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக தாங்கள் ஒரு உடன்பாட்டுக்கு வந்துள்ளதாகவும், மனித உரிமைகளே எமது வெளிவிவகார உறவுகளுக்கு முக்கியமானவை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment