Saturday, March 13, 2010

எம்மை துரோகிகள் என புலிகள் செய்த பிரச்சாரம் தவிடு பொடியானது. புளொட் பவன். (பேட்டி)

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மத்திய குழு உறுப்பினர்களில் ஒருவரும், வன்னி மாவட்டத்தில் அவ்வமைப்பின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவருமான பவான் என அறியப்படும் க.சிவநேசன் வன்னி தேர்தல் நிலவரங்கள் தொடர்பாக இலங்கைநெற் இற்கு தொலைபேசி ஊடாக வழங்கிய பேட்டி. பேட்டி கண்டவர் பீமன்.

உங்கள் அரசியல் பிரவேசம் குறித்து விளக்க முடியுமா?

தமிழ் மக்களின் விடுதலைவேண்டி போராடிய தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் 83 காலப்பகுதிகளில் இணைந்த நான் இன்றுவரை அவ்விக்கத்தின் ஊடே எனது பணிகளை செய்து வருகின்றேன்.

83 ல் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இணைந்து கொண்டேன் என தெரிவித்திருந்தீர்கள். அவ்வியக்கத்தினை தேர்ந்தெடுத்தற்கான விசேட காரணங்கள் உண்டா?

நான் பாடசாலைக் கல்வியை தொடர்ந்து கொண்டிருந்தேன். அக்கால கட்டத்தில் தமிழர்களுக்கெதிரான ஒடுக்குமுறைகள் தொடர்ந்து கொண்டிருந்தது. பேரினவாத சக்திகளால் 83 வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டிருந்துடன், இதற்கு எதிராக போராடவேண்டும் என்ற கோஷங்களும் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. எம்மை ஆயுதப்போராட்டத்தில் இணைத்து கொண்டு எமது மக்களின் சுதந்திரத்தை, அதாவது தமிழீழத்தை அடையவேண்டும் என்ற இலக்கோடு நான் கழகத்தில் இணைந்து கொண்டேன். நான் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தினை தேர்ந்தெடுத்தற்கான காரணம் என்னவென்றால். இவ்வியக்கத்தின் தலைவராக உமா மகேஸ்வரன் அவர்கள் இருந்தார். மக்களுக்கான போராட்டத்தின் அவரது கொள்கைகளில் எனக்கு ஈடுபாடும், அந்த இலக்கை அடையலாம் என்ற நம்பிக்கையும் இருந்தது. அத்துடன் அவர் ஒரளவு படித்த மனிதராக காணப்பட்டார்.

சிங்கள முற்போக்கு சக்திகளுடன் இணைந்தே தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும் என உமா மகேஸ்வரன் அவர்கள் கூறிவந்திருக்கின்றார். அவ்விடயத்தில் தற்போது உங்கள் அமைப்பின் நிலைப்பாடு என்ன?

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் என்பது சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல என்பதை அம்மக்களுக்கு காண்பிக்கவேண்டும் என்ற விடயத்தை அவர் தொடர்ச்சியாக கூறிவந்திருக்கின்றார். ஈழம் என்பது சாத்தியமில்லை, அதை இந்தியா ஏற்றுக்கொள்ள மாட்டாது என்பதையும் எமக்கு பின்புலம் இல்லை என்பதையும் உணரமுடிந்தபோது சிங்கள முற்போக்கு சக்திகளுடன் இணைந்து புரட்சி ஒன்றை உருவாக்கி அவர்கள் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலைமையை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை அவரிடம் காணப்பட்டதை என்னால் அவதானிக்க கூடியதாக இருந்துள்ளது.

ஈழம் என்பதை இந்தியா ஏற்றுக்கொள்ள மாட்டாது என எவ்வாறு உணர்ந்திருந்தீர்கள்?

இலங்கை என்பது ஒரு பல இனங்கள் வாழுகின்றநாடு. எனவே இங்கே தனிநாடு ஒன்று உருவாவதை இந்தியா ஊக்குவிக்குமானால் அல்லது உதவி செய்யுமாக இருந்தால் அது இந்தியாவிற்கும் பாதகமாக அமையும் என்பதை இந்தியாவின் பல சக்கிகளும் தெளிவாகவே கூறியிருந்தார்கள். ஏன் கருணாநிதி அவர்கள் கூட ஈழம் என்பது சாத்தியமில்லை என்பதைத்தான் கூறியிருந்தார்.

இதற்கும் அப்பால் சென்றால் இந்திய இடதுசாரிகளான பாண்டியன் , கதிகாலசுந்தரம் ஆகியோரது அரசியல் பாசறை வகுப்புக்களில் பங்கெடுத்திருக்கின்றேன். அவர்களும் ஐக்கிய இலங்கையினுள்ளே அதிகூடிய அதிகாரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்ற விடத்தினையே கூறினர்.

இவ்வாறான நிலையில்தான் இலங்கை இந்திய ஒப்பந்தம் வந்திருந்தது. இன்று இறுதிவரை ஆயுதப்போராட்டத்தை தொடர்ந்திருந்த புலிகளின் தலைவர் பிரபாகரன் கூட அவ்வொப்பந்தத்தை ஏற்று கையொப்பம் இட்டிருந்தார். ஆனால் எமது தலைவர் உமா மகேஸ்வரன் அதனை ஏற்றுக்கொண்டு கையொப்பம் இட்டிருக்கவில்லை. பின்னாட்களில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை எமது தீர்வுக்கான முதற்படியாக ஏற்றுக்கொள்வோம் என இணங்கியிருந்தார்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை உங்கள் தலைமை அல்லது உங்கள் அமைப்பு ஏற்றுக்கொண்டிராததற்கு காரணம் என்ன?

இலங்கை இந்திய ஒப்பந்தம் எமது பிரச்சினைக்கான முழுத்தீர்வு அல்ல என்பதாகும். அதாவது நாம் ஆயுதப்போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்ததன் இலக்கை இந்திய ஒப்பந்தம் அடைந்திருக்கவில்லை என்பதாகும்.

இலங்கையில் தமிழ் ஈழம் மலர்வதை இந்தியா விரும்பியிருக்கவில்லை எனக்குறிப்பிட்டீர்கள். அவ்விடயத்தினை ஆரம்பநாட்களில் ஏன் மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை?

ஈழம் என்பது சாத்தியமில்லை என தெரிவித்திருந்தபோதும், ஈழத்தை கோருங்கள் அப்போதுதான் இலங்கையில் தமிழ் மக்களுக்கு கிடைக்கக்கூடிய அதி உச்ச அதிகாரங்களையாவது பெற்றுக்கொள்ளலாம். அதற்கான உதவியை செய்வோம் என தெரிவித்திருந்தார்கள்.

இலங்கையில் ஆயுதப்போராட்டம் முடிவடைந்துள்ள நிலையில், முன்னாள் ஆயுத அமைப்புக்கள் தமிழ் மக்கள் மத்தியில் அவசியம் இல்லை என்ற கருத்து நிலவுவதை அவதானிக்க முடிகின்றது. உங்கள் கருத்தென்ன?

இதில் உண்மை உண்டு. காரணம் புலிகளின் ஆயுத பலத்திலும் அப்போராட்டத்திலும் மக்கள் அதீத நம்பிக்கை வைத்திருந்தார்கள். அவ்வியக்கம் சுக்குநூறாக, நினைத்துப்பார்க்ககூட முடியாத முறையில் வீழ்ந்தபோது மக்கள் சோர்வடைந்து விட்டார்கள். எனவே அப்படியானதோர் நிலைப்பாட்டை அவர்கள் வெறுக்கின்றார்கள். அதற்காக அவ்வாறானதோர் நிலை மீண்டும் உருவாக வேண்டும் என நான்கூறவில்லை.

புளொட் இயக்கத்தினர் வவுனியா பிரதேச மக்களிடம் பலவந்தமாக பணம் பறித்தாகவும், மக்களை துன்புறுத்தியதாகவும் பரவலான குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றது. இந்நிலை தொடர்ந்தவண்ணம் உள்ளதா?

உங்களுக்கு நன்றாக தெரியும் நாம் மக்கள் மக்தியில் இருந்து செயற்பட்டு வருகின்றோம். செயற்படுகின்றபோது ஒருசில முரண்பாடுகள்வரும். எந்த ஒருவிடயத்தை செய்கின்றபோதும் எவருக்கும் மக்கள் மத்தியில் 100 வீத ஆதரவு கிடைப்பதில்லை. அந்தவகையில் கொழும்பிலும் வெளிநாடுகளிலும் இருந்து அறிக்கை விடுக்கின்றவர்களுக்கும் மக்களுக்கும் இடையே முரண்பாடுகள் வராது. அவர்கள் மக்கள் மத்தியில் செயற்படுவதில்லை. நாம் செயற்படுகின்றோம். எமக்கும் மக்களுக்கும்மிடையே ஒரு சில முரண்பாடுகள் உண்டு. அவற்றை பெரிதுபடுத்தும் செயற்பாட்டை எமது அரசியல் எதிராளிகள் செய்துகொண்டே இருப்பார்கள்.

அடுத்து பணம்பறிக்கின்ற விடயத்தை நான் முற்றாக நிராகரிக்கின்றேன். நாம் யாரிடமும் பலவந்தமாக பறித்ததில்லை. சில காலங்களுக்கு முன்னர் சிலரிடம் எமது கட்சியின் தேவைகளுக்காக கேட்டுவாங்கியிருக்கிறோம். பலர் எமது வேண்டுகோளை ஏற்று தந்திருக்கின்றார்கள். சிலர் இல்லை என்று சொல்லியிருக்கின்றார்கள். நாம் அவற்றை ஏற்றிருக்கின்றோம். கடந்த 6 மாதங்களாக நாம் எவரிடமும் எந்த பணமும் பெறுவதில்லை.

எது எவ்வாறாயினும் நாம் 100 வீதம் சுத்தமானவர்கள் எனக் கூறவில்லை. நாமும் இந்த சமுகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த சமுகத்துடன் இணைந்து வாழ்கின்றோம். எமது மக்களுடன் வாழ்கின்றோம். மக்களும் எம்மை பகடைக்காய்களாக பாவித்திருக்கின்றார்கள் என்ற விடயத்தினையும் இங்கு கூறவேண்டும்.

நீங்கள் கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் இணைந்து கொள்வதற்காக பல சுற்று பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாகவும், தேர்தல் கூட்டு ஒன்றை அமைக்க முயன்றதாகவும், இறுதியில் தோல்வியடைந்தாகவும் தெரியவருகின்றது. உங்களுடைய அந்த முயற்சி வெற்றியளிக்காமைக்கு காரணம் என்ன?

நாங்கள் பேச்சுவார்த்தைக்கு சென்றது என்பதைவிட மக்களின் வேண்டுகோளின் அடிப்படையில் பேசினோம் என்பது சிறந்ததாகும். வவுனியாவிலே பெரும்பாண்மையாக தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள். எனவே பெரும்பாண்மையான தமிழ் ஆசனங்களை பெறவேண்டும் என்ற ஆதங்கம் வவுனியா மக்களிடம் உண்டு. சகோதர இன மக்களின் எண்ணிக்கைக்கேற்ப அவர்களுக்கான பிரதிநிதித்துவம் அமையவேண்டும் எனவும் தமிழர்களாகிய நாம் பிளவுபட்டு நிற்கும்போது அதன் பயனால் அவர்கள் அதிக ஆசனங்களை பெற்றுவிட்டால் அது தமிழ் மக்களின் நலனுக்கு குந்தகம் ஏற்பட்டுவிடும். எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பும், எமது கட்சியும் ஒன்றிணைந்து போட்டியிடவேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் இருதரப்பினரிடமும் முன்வைத்தார்கள். தேர்தல் கூட்டுக்கள் அல்லாது கொள்கையடிப்படையில் இணையக்கூடிய கூட்டுக்கள் தமிழ் மக்களிடையே அவசியம் என்ற விடயத்தை நாம் பன்நெடுங்காலங்களாக வலியுறுத்தியும் வந்துள்ளோம். அந்த அடிப்படையில் மக்களின் வேண்டுதலை ஏற்று நாம் அவர்களுடன் பேசினோம். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது நான்காக உடைந்திருக்கின்றது. நான்கு குழுக்களாக செயற்படுகின்றது. அதிலும் அவர்கள் கொண்ட கொள்கைக்கு மிக எதிர்மாறான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றார்கள். இருந்தாலும் கூட நாம் சம்பந்தன் மாவை தலைமையிலான குழுவுடன் பேசினோம். ஆனால் அவர்கள் தமது விடயங்களில் மிகவும் பிடிவாதமாக இருந்தார்கள். தர்மலிங்கம் அவர்களின் மகன் சித்தார்த்தனை வேண்டுமானால் எம்முடன் இணைந்துக்கொள்வோம், மற்றவர்கனை நாம் சேர்க்க மாட்டோம்.. வவுனியாவில் மாத்திரம் ஒர் இடத்தை ஒதுக்கி தரமுடியும் எனக் கூறியிருந்தார்கள்.

இவ்விடயத்தினை எமது தலைவர் மிகவும் ஆணித்தரமாக எதிர்த்ததுடன், தான் புளொட் அமைப்பின் தலைவராக பேசுவதாக இருந்தால் பேசுகின்றேன், அதைத்தவிர்த்து தனியே தர்மலிங்கம் அவர்களின் மகனாக பேசுவதற்கு எதுவுமில்லை என தெரிவித்திருந்தார். இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ள ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகள் துரதிஸ்டவசமாக அமைந்துள்ளது.

கடந்த தேர்தலில் தமிழ் மக்கள், தமிழீழ விடுதலைப் புலிகளை ஏகபிரதிநிதிகளாக ஏற்றே தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை பாராளுமன்றம் அனுப்பியதாக கூறப்படுகின்றது. தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுள்ள நிலையில் புலிகளை ஏகபிரதிநிதிகளாக ஏற்றிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், அந்நிலையில் இருந்து விலகியுள்ளதையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிலர் தாம் புலிகளை பயங்கரவாதிகளாகவே கருதியிருந்ததாகவும் கூறியுள்ளதையும் மக்கள் அறிந்துள்ளனர். இவ்வாறான நிலையில் மக்கள் தற்போது எவ்வாறானதோர் அரசியல் தலைமையை எதிர்பார்க்கின்றனர்?

ஓர் நீதியானதும் நேர்மையானதுமான தலைமை தமக்கு வேண்டும் என்பதில் மக்கள் அவாகொண்டிருப்பது போன்றுதான் தோன்றுகின்றது. அன்று புலிகள் தம்மை தமிழ் மக்களின் பிரதிநிதிகளென உலகிற்கு எடுத்துக் கூறுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியிருந்தார்கள். கூட்டமைப்பினரும் தமது கதிரைகளை தக்கவைத்துக் கொள்ளவதற்காக புலிகளை ஏகப்பிரதிநிதிகளாக உலகிற்கு சொல்வதில் மும்முரமாக நின்றார்கள். ஆனால் இன்று நிலைமை வேறு.

உண்மையிலே இது ஒரு தேசியக் கூட்டமைப்பு அல்ல. சந்தர்ப்பவாத கூட்டென்பதே பொருத்தமானதாகும். ஏனென்றால், அக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ, ஈபிஆர்எல்எப், தமிழர் விடுதலைக் கூட்டணி என்பவற்றின் தலைமைகள் புலிகளின் தலைமையால் கொன்றொழிக்கப்பட்ட நிலையில், அதன் இரண்டாவது தலைமைகள் தமது தலைகளை காப்பாற்றிக் கொள்வதற்காகவும், பாராளுமன்றக் கதிரைகளை பெற்றுக்கொள்வதற்காகவுமே கூட்டில் இணைந்து கொண்டார்கள். இதுவொரு தேசியக் கூட்டடென்றால் அதைப்போல் நகைச்சுவை இருக்கமுடியாது என்றே நான் கூறுவேன். அன்று தேசியம் என்று இலங்கை அரசிற்கு எதிராக கூப்பாடு போட்டவர்களால் எவ்வாறு இன்று அதே அரசின் சின்னத்தின்கீழ் போட்டியிடமுடியும். இவர்கள் கதிரைகளுக்காக எதுவும் செய்வார்கள்.

வன்னியில் புலிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் தேர்தல் பிரச்சாரங்கள் செய்கின்றீர்களா?

விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் ஒருசில இடங்களில் மக்கள் மீள் குடியேற்றப்பட்டிருக்கின்றார்கள். அப்பிரதேசங்களுக்கு நாம் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் செல்லவில்லை. அவர்கள் குடியேற்றப்பட்ட மறுகணமே சென்றோம். அவர்களுடன் பேசினோம். உற்சாகம் அளித்தோம். அவர்களின் குறைநிறைகளை கேட்டு எம்மால் முடிந்தவற்றை செய்தோம். அவர்களின் மனநிலை எமக்கு நன்றாக தெரியும். அவர்கள் தற்போது ஓர் தேர்தலை சந்திப்பதற்கு தயாரானவர்களாக இல்லை. அவர்கள் இழக்க கூடிய யாவற்றையும் இழந்து ஏறக்குறைய பிச்சாண்டிகள் என்றநிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். எனவே அம்மக்களிடம் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்வது பொருத்தமானது அல்ல. இருந்தாலும் அவர்களுக்கு அரசியல் உரிமை உண்டு. அவர்களுடைய பிரதிநிதிகளை அவர்களே தெரிந்தெடுக்கவேண்டும். அந்த உரிமையை அவர்கள் இழந்து விடக்கூடாது என அவர்களுக்கு தைரியம் கொடுக்கின்றோம். அதே நேரத்தில் உங்களுக்கு நிச்சயமாக சிறந்ததோர் அரசியல் தலைமைத்துவம் வேண்டும் அதை நீங்கள் இப்போது சரியாக தேர்ந்தெடுக்காவிட்டால், இன்னும் ஆறு வருடங்கள் காத்திருக்க நேரிடும் என்ற விடயத்தை விளங்கப்படுத்தி வருகின்றோம்.

உங்கள் கருத்துக்களை கேட்பதற்கு அம்மக்கள் ஆர்வம் காட்டுகின்றார்களா?

நிச்சயமாக, அவர்கள் எமது கருத்துக்களை மிகவும் ஆர்வத்துடன் செவிமடுக்கின்றார்கள். ஆனாலும் அங்குள்ள மக்கள் தடுப்பு முகாக்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ள சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகளின் விடுதலையிலேயே ஏக்கம் கொண்டுள்ளனர். அவ்விளைஞர் யுவதிகளை தம்முடன் இணைத்துக்கொள்ளவேண்டும், அவர்கள் இழந்த குடும்ப சுகத்தை அவர்களுக்கு கொடுக்கவேண்டும். அவர்களுக்கு கிடைக்காமல்போன கல்வியறிவை ஊட்டவேண்டும் என்ற விடயங்களை எம்மிடம் பேசுகின்றனர். இவ்விடயத்தில் அரசு எமக்கு அளித்த உறுதி மொழிகளை பூரணமாக நிறைவேற்றவில்லை என்றுதான் நான்கூறுவேன். இம்மக்கள் விடுவிக்கப்பட்டதும், இவ்விளைஞர் யுவதிகள் கைது செய்யப்பட்டதுமான காலகட்டங்களில் நாம் அரசுடன் பல தடவைகள் பேசியிருக்கின்றோம். இவ்விளைஞர் யுவதிகள் கட்டம் கட்டமாக விடுதலை செய்யப்படுவார்கள் என அரசினால் எமக்கு கூறப்பட்டுள்ளது.

மறுபுறத்தில் இவ்விளைஞர் யுவதிகள் புலிகளினால் பலவந்தமாக பிடிக்கப்பட்டவர்கள். புலிகள் தமிழ் இளைஞர் யுவதிகளை பலவந்தமாக பிடித்து போரில் ஈடுபடுத்துகின்றனர் என அரசு சர்வதேச நாடுகளுக்கு சொல்லியிருக்கின்றது. எனவே அவ்வாறான இந்த அரசு அவ்விளைஞர்களை எவ்வாறு தடுத்து வைக்கமுடியும் என எனக்கு விளங்கவில்லை. எனவே இவ்விளைஞர் யுவதிகள் விடயம் தொடர்பாக உடனடியாக எம்மால் நடவடிக்கை எடுக்க முடியாது போனாலும், தேர்தல் முடிந்த பின்னர் எமக்கு தேர்தலில் ஆசனங்கள் கிடைக்காது போனாலும் கூட அவர்களின் விடுதலை வேண்டி பாரிய அளவிலான சாத்வீக போராட்டங்களையாவது நாடாத்தி அவர்களை மீட்க எமது முழுப்பலத்தையும் பிரயோகிப்பது என நாம் உத்தேசித்துள்ளோம். அத்துடன் அதில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையும் உண்டு. இதுவே இன்று வன்னிமக்கள் எதிர்பார்க்கும் பாரிய எதிர்பார்ப்பாகும்.

புளொட் அமைப்பினராகிய உங்களைப்பற்றி வன்னி மக்களுக்கு புலிகளால் ஒரு பயங்கரமான வடிவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அம்மக்கள் உங்களை விரோதிகளாகவே பார்க்க கூடிய அளவிற்கு அவர்கள் மூளைச்சலைவை செய்யப்பட்டுள்ளார்கள். அத்துடன் இம்மக்கள் சுமார் 24 வருடங்களின் பின்னரே உங்களை நேரடியாக காண்கின்றார்கள். புலிகளால் துரோகிகள் என கூறப்பட்டு வந்த உங்களை மக்கள் காணும்போது அவர்களின் உணர்வுகள் எவ்வாறு காணப்படுகின்றது?

எமது அமைப்பு மாபெரும் மக்கள் அமைப்பாக கட்டியெழுப்பட்டு 1986ம் ஆண்டு காலப்பகுதிகளில் கிராமங்கள் தோறும் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களை கொண்டிருந்த அமைப்பென்பது யாவரும் அறிந்தவிடயம். அவ்வாறே வன்னியில் இருந்த எமது தோழர்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்திருந்தாலும் கூட அவர்கள், சமுதாயத்தில் நல்ல பிரஜைகளாக இருந்துள்ளதுடன், அவர்கள் தற்போது தம்மை புளொட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியப்படுத்தும்போது புலிகளின் அப்பிரச்சாரங்கள் தவிடு பொடியாகியுள்ளது. இவை அனைத்துக்கும் அப்பால் எம்மை எவ்வாறு கெட்டவர்கள் எனச் சொன்னார்களோ அதற்கு மேலாக இலங்கை இராணுவத்தினர் தொடர்பாக மிக கொடுரமான செய்திகளை புலிகள் மக்களுக்கு கொடுத்திருந்தார்கள். அதாவது சிங்கள இராணுவம் உங்களை அண்டினால் அவர்கள் வெட்டி, சுட்டுக்கொல்வார்கள், கற்பழிப்பார்கள் போன்ற செய்திகள் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் வன்னியிலிருந்து வந்த மக்களை இராணுவம் புலிகள் கூறியது போல் அணுகவில்லை என்பதை அம்மக்களுடாகவே அறிய முடிகின்றது. இராணுவம் தம்மை மிகவும் கண்ணியமாக நாடாத்தியாதாகவே மக்கள் கூறுகின்றனர். ஆகவே இவ்விடயதிலும் புலிகளின் பிரச்சாரம் மேலும் தவிடு பொடியானது. புலிகள் கூறியவை யாவும் பொய்யானது என்ற நிலைப்பாட்டுக்கு மக்கள் வந்து விட்டனர். எனவே புளொட் இயக்கத்தினர் மீதும் கூறப்பட்டவை பொய்யானது என்பதையும் உணர்ந்து விட்டனர். நீங்கள் கூறும் இவ்விடயத்தில் உண்மை இருக்கின்றது. ஆனால் அது புலிகளாலேயே பொய்யாக்கப்பட்டுள்ளது. இவ்விடயங்களை மக்களுக்கு விளங்கவைப்பதற்கு நாம் எதையும் விசேடமாகச் செய்யவில்லை.

உங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பலர் வன்னி பிரதேசத்தில் இருந்து மீண்டுவந்துள்ளதாக தெரிவித்தீர்கள். அவ்வாறானவர்கள் மீண்டும் உங்களுடன் இணைந்து செயற்பட ஆர்வம் கொண்டுள்ளார்களா? அவர்கள் இணைவார்களாயின் அது எவ்வாறான செல்வாக்கினை செலுத்தும?

வவுனியாவிலே எமது காரியாலயத்தில் இன்று பழைய தோழர்களுக்கான ஒன்று கூடல் ஒன்று இடம்பெற்றது . அதில் சுமார் 1000 இற்கு சற்று குறைவானவர்கள் வந்திருந்தார்கள். தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுடன், பழையகால நிகழ்வுகளையும் , சம்பவங்களையும் தோழர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். அத்துடன் எதிர்காலத்தில் ஆயுதங்களுடன் சம்பந்தப்படாத வகையில் மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற ஆதங்கம் அவர்களுள்ளே இருப்பதையும் அவர்களது கருத்துக்கள் எடுத்துக்காட்டின.

இவ்விடயத்தில் நான் ஒன்றைச் சுட்டிக்காட்டவேண்டும் நாம் இதுவரை எமது தோழர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுக்கவில்லை. அதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் நாம் நாடளாவிய ரீதியில் எமது தோழர்களை அழைப்போம். அப்போது எமது பலம் தெரியவரும். எமது அமைப்பு அவர்களை சிறந்த முறையில் பயிற்றுவித்து விடுவித்திருக்கின்றது. அவர்களில் பலர் இன்று சமூகத்தில் சிறந்த அந்தஸ்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தேர்தலின் பின்னர் அவர்களை அழைத்து அவர்களுடாக கிராம மட்டங்களில் கட்டமைப்புக்களை உருவாக்கி மக்களுக்கு சேவையாற்ற முடியும் என்பது இன்று நடந்த ஒன்றுகூடல் ஊடாக உறுதியாகியுள்ளது.

தேர்தல் நிலவரங்களை பார்க்கும் போது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் கட்சிக்கு வாக்கு சேர்க்க முனைவதிலும் பார்க்க விருப்புவாக்குகளை பெற்றுக்கொள்வதற்கு முனைப்புக் காட்டுவதையும், அதனடிப்படையில் ஒரே கட்சியை சேர்ந்த வேட்பாளர்களிடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. இவ்விடயத்தில் உங்கள் கட்சி நிலவரங்கள் எவ்வாறு காணப்படுகின்றது?

எங்களுடைய கட்சி வேட்பாளர்களை பொறுத்தவரை அவ்வாறான சம்பவங்கள் எதுவும் இல்லை. நானும் கூட ஒரு வேட்பாளன். கட்சிக்கு வாக்குகளை சேர்ப்பதிலேயே எமது வேட்பாளர்கள் குறியாக இருக்கின்றார்களே தவிர விருப்பு வாக்குகள் என்பது பிரச்சினை அல்ல.

தேர்தல் பிரச்சாரங்களின் போது, தமிழர் தமிழருக்கும் முஸ்லிம்கள் முஸ்லிம்களுக்கும் சிங்களவர் சிங்களவருக்குமே வாக்களிக்கவேண்டும் என்ற குறுந்தேசியவாதம் பேசப்படுவதை அவதானிக்க முடிகின்றது. இவ்விடயத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன? இது சரியா?

தேசியவாதம் என்பது எங்களுடைய உள்ளங்களிலே ஊறியவிடயம். தேசியவாதம் என்ற விடயமே எம்மை போராட்டங்களை நோக்கி தள்ளியுள்ளது. தமிழ் தேசியம் என்ற விடயத்திற்காக ஆரம்ப காலங்களில் முஸ்லிம்களும் எம்முடன் இணைந்து போராடிவந்த வரலாறுகளே உண்டு. ஆனால் பேரினவாத சக்திகளால் தமிழ் மக்களில் இருந்து முஸ்லிம்கள் பிரிக்கப்பட்டுவிட்டார்கள். சிங்களத் தேசியவாதம் என்பது சிங்கள மக்களின் நலனை கருத்திற்கொண்டதாக காணப்படுகின்றது. எனவே தமது இனங்களின் நலனில் கவனம் கொண்ட விடயங்களை குறுந்தேசியவாதமாக வரையறுக்க முடியாது. அவை தேசியவாதம்தான். அந்த வகையில் இங்கே வன்னியில் ஏறத்தாழ 12,000 சிங்களவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் தமது நலனை கருத்தில் கொண்ட சிங்களவர் ஒருவரை தெரிவு செய்யவேண்டும் எனக்கருதுவது தவறு எனக் கூறிவிடமுடியாது. ஆகவே இவ்விடயத்தினை தேசியவாதம் அல்லது குறுந்தேசியவாதம் என்பதை விட ஒர் இனத்தின் நலன்சார்ந்த விடயம் என்றே நான் கூறுவேன். அந்தவகையில் அதில் எவ்வித தவறும் இல்லை.

வன்னியிலே பல அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் போட்டியிடுகின்றது. சரியாக எத்தனை அரசியல் கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் போட்டியிடுகின்றது? இவற்றால் தமிழ் மக்களுக்கு ஏற்படக்கூடிய சாதக பாதகங்கள் எவை?

அரசியல் கட்சிகள் , சுயேட்சைக்குழுக்கள் என மொத்தமாக 28 குழுக்கள் போட்டியிடுகின்றன. அனேகமான சுயேட்சைக் குழுக்கள் அரசினால் களமிறக்கப்பட்டுள்ளது. ஏன் சில கட்சிகள் கூட அதே நிலைதான். ஊதாரணத்திற்கு யாழ்பாணத்தில் அரசுடன் இணைந்து அரசின் சின்னத்தின்கீழ் போட்டியிடும் தமிழ் கட்சியை இங்கு தனித்து போட்டியிட விட்டிருக்கின்றார்கள். அதேபோன்று கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிட்ட கட்சிகளைத் தனித்தனிக்கட்சிகளாக போட்டியிட விட்டிருக்கின்றார்கள். இது அரசிற்கு சாதகமான ஒர் நடவடிக்கையாகத்தான் நான்பார்க்கின்றேன். அரசு தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடித்து கட்சியொன்று அதிகூடியவாக்குகளை எடுப்பதை தடுப்பதன் மூலம் தமது பிரதிநிதித்துவத்தை கூட்டலாம் என கருதுகின்றது. ஆனால் தமிழ் மக்கள் இவ்விடயங்களை நன்கு விளங்கி தாம் தமது பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவேண்டும் என உறுதிபூணுவார்களாயின் எவரது வியூகங்களாலும் எம்மை தோற்கடிக்க முடியாது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் உங்களது கட்சியினால் ஒரு பாராளுமன்ற உறுப்பினரைக்கூட பெற முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. அந்தவகையில் இத்தேர்தலை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

கடந்த தேர்தலானது முற்றிலும் வேறுபட்ட நிலையில் நோக்கவேண்டியது. புலிகள் மிகவும் பலமாக காணப்பட்டார்கள். அத்துடன் ரணில் விக்கிரமசிங்கவுடன் சமாதான ஒப்பந்தம் என்ற ஒன்றை செய்துகொண்டதுடன் தங்களை தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என உலகிற்கு அறிவிக்கும் பொருட்டு ரிஎன்ஏ என்ற அமைப்பொன்றை நிறுவி அவர்களை தேர்தலில் நிறுத்தியதுடன், தமது அரசியல் அங்கீகாரத்திற்காக அவ்வமைப்பை வெல்ல வைக்கும் நோக்கில் தமது முழு ஆயுதப்பலத்தையும் பிரயோகித்து அவ்வமைப்பினை வெல்லவும் வைத்திருந்தார்கள். ஆனால் இத்தேர்தலானது புலிகள் முற்றிலும் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட நிலையில் மக்களுக்கு சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. எனவே எமக்கு இங்கு சாதகமான நிலை உள்ளதாகவே தோன்றுகின்றது.

நேர்காணல்கள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. XIII

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com