Monday, March 1, 2010

சிலி நிலநடுக்கத்தில் இரண்டு மில்லியன் மக்கள் பாதிப்பு

சிலியின் மத்திய பகுதியைச் சனிக்கிழமை தாக்கிய பயங்கர நிலநடுக்கத்தால் இரண்டு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு அதிபர் மிஷல் பச்சலட் தெரிவித்தார்.
சக்திவாய்ந்த இயற்கைப் பேரிடர் நாட்டைச் சோதனைக்குள்ளாக்கி இருப்பதாகத் தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில் அவர் குறிப்பிட்டார். சனிக்கிழமை அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை குறைந்தது 300 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ரிக்டர் அளவுகோலில் 8.8 புள்ளிகள் பதிவுசெய்த நிலநடுக்கத்தால் பசிபிக் வட்டாரத்தில் சுனாமி ஆழிப்பேரலையும் எழுந்தது. ஆனால் அலைகளின் உயரம் எதிர்பார்த்த அளவை எட்டவில்லை. “இயற்கையின் பயங்கரத்தால் எங்கள் நாடு பெரிதும் பாதிப்படைந்துள்ளது” என்று கூறினார் அதிபர் பச்சலட். “பேரிடரிலிருந்து மீண்டெழும் நமது ஆற்றலை இந்தப் பேரிடர் சோதிக்கிறது. நாட்டின் அடிப்படை சேவைகள் அனைத்தையும் வழக்கநிலைக்குக் கொண்டு வரும் அனைத்து வழிகளையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். ஆனால் செய்வதற்கு நிறைய இருக்கிறது” என்றும் அவர் கூறினார்.

சிலியின் ஆறு வட்டாரங்களில் பேரிடர் நெருக்கடி நிலையை அதிபர் பச்சலட் அறிவித்திருக்கிறார். ஐம்பது ஆண்டுகளில் சிலி நாட்டை உலுக்கியிருக்கும் ஆகப்பெரிய நிலநடுக்கம் இது. பல இடங்களில் சாலைகள், கட்டடங்கள் ஆகியவை சேதமடைந்தன. தலைநகரில் இரசாயனத் தொழில்சாலை தீப்பற்றிக் கொண்டது. மின்சாரம், தண்ணீர் விநியோகமும் தொலைபேசி இணைப்பும் துண்டிக்கப்பட்டுவிட்டன.

மாவ்லி வட்டாரத்தில் மட்டும் 85 பேர் மாண்டதாகச் செய்தியாளர்கள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தின் மையத்திலிருந்து சுமார் 500 கிலோமீட்டர் தொலைவில் இருந்தவர்களாலும் கூட நிலநடுக்கத்தின் உலுக்கலை உணர முடிந்தது. கான்செப்ஷன் நகரிலிருந்து 115 கிலோமீட்டர் வடகிழக்கிலும் தலைநகர் சான்டியாகோவிலிருந்து 325 கிலோமீட்டர் தென்மேற்கிலும் சுமார் 35 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சான்டியாகோ, ஓ ஹிகின்ஸ், பியோபியோ, ஆராவ்கேனியா, வால்பராய்சோ ஆகிய வட்டாரங்களிலும் மக்கள் கொல்லப்பட்டனர்.

கான்செப்ஷனில் முக்கியமான பாலம் ஒன்று உடைந்து பியோபியோ ஆற்றில் சரிந்து விழுந்தது. இடிந்து கிடக்கும் கட்டடங்களில் யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா என மீட்புக் குழுவினர் தேடி வருகிறார்கள். பர்ரல் நகரின் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட ஒரு பெண், குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு உதவச் சென்று ஆபத்தில் சிக்கிக் கொண்டார்.
“நான் அவரைக் காப்பாற்ற முயன்றபோது, சுவர் இடிந்து என் முதுகில் விழுந்தது. நான் தரையில் விழுந்தேன். என் கால்கள் கட்டிலுக்குக் கீழே சிக்கிக் கொண்டன. எப்படியோ இடிபாடுகளுக்கு இடையிலிருந்த சிறிய ஓட்டை வழியே வெளியே தலைகாட்டினேன். அங்கிருந்து மீட்புக் குழுவினர் என்னைக் காப்பாற்றினார்கள்” என்றார் அப்பெண்.

சான்டியாகோவில் கார்ப்பேட்டை உட்பட பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. அந்நகரில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர். நிலநடுக்கத்திற்குப் பிறகு சான்டியாகோ நகரின் பெரும்பகுதி கும்மிருட்டாக இருப்பதாக பிபிசி செய்தி நிறுவனத்தின் கிடியன் லொங் தெரிவித்தார். சான்டியாகோ அனைத்துலக விமான நிலையமும் சேதமடைந்து, குறைந்தது 72 மணி நேரத்திற்கு மூடப்பட்டது.



No comments:

Post a Comment