ஜெனரல் பொன்சேகா இராணுவ நீதிமன்றில் ஆஜர். விசாரணைகள் ஏப்பரல் 6 க்கு ஒத்தி.
இராணுவப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கடற்படை தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதியும் , இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளருமான ஜெனரல் பொன்சேகா மீதான விசாரணைகள் ஏலவே அறிவிக்கப்பட்டிருந்தது போல் இன்று கடற்படைத் தலைமையத்தில் அமைக்கப்பட்ட விசேட இராணுவ நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணைகளில் ஜெனரல் பொன்சேகா கலந்து கொள்ளமாட்டார் என ஜேவிபியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுத் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருந்தபோதும், அவர் ஆஜராகியுள்ளார். ஜெனரல் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி ரின்சி அர்ஷாகுலரத்ன தலைமையில் சட்டத்தரணிகள் ஆஜராகியுள்ளனர்.
இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரியவினால் நியமிக்கப்பட்டுள்ள மூவர் தலைமையில் வழக்கு எடுக்கப்பட்டபோது, இராணுவ நீதிமன்றின் நீதிபதிகள் தொடர்பாக ஜெனரல் பொன்சேகாவின் சட்டத்தரணிகளால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட 3 நீதிபதிகளில் ஒருவர் இராணுவத் தளபதியின் மைத்துனர் , ஒருவர் குற்றச்செயல் ஒன்றுக்காக ஜெனரல் பொன்சேகாவினால் தண்டிக்கப்பட்டு பதவியிறக்கப்பட்டவர், மூன்றாமவர் இராணுவ ஏல விற்பனை ஒன்று தொடர்பாக குற்றவாளியெனக் நிருபிக்கப்பட்டவர் என தெரிவித்த சட்டத்தரணிகள் நீதிபதிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஜெனரல் பொன்சேகா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இராணுவ நீதிமன்றில் விசாரிக்க முடியாது எனக் குறிப்பிட்டதுடன், தமது வாதத்திற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு நீதிபதிகள் கேட்டபோது சட்டத்தரணிகள் அதற்கு கால அவகாசம் வேண்டும் என தெரிவித்ததை அடுத்து வழக்கு எதிர்வரும் ஏப்பரல் மாதம் 6ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றைய விசாரணையின்போது, தம்மீதான குற்றச்சாற்றுக்கள் அனைத்தையும் பொன்சேகா மறுத்ததோடு, இவை அரசியல் உள்நோக்கங்கள் கொண்டவை என்றும், அடுத்த மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தாம் போட்டியிடாமல் தடுப்பதற்காகவே தம்மீது இந்த வழக்குகள் போடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும் தம்மீதான இந்த குற்றச்சாற்றுக்களை விசாரிக்க இராணுவ நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும், எனவே தாம் குற்றவாளி இல்லை என்றோ அல்லது குற்றவாளி என்றோ மன்றாடப்போவதில்லை என்றும் பொன்சேகா நீதிமன்றத்தில் தெரிவித்ததாக அவரது வழக்கறிஞர்களில் ஒருவரான நளின் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment