Friday, March 26, 2010

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற 23 பேர் கைது. புலிகளா எனச் சந்தேகம்.

இந்தியா, குமரி மாவட்டத்தில் விசைப்படகை திருடி அதில் இலங்கைக்கு தப்ப முயன்ற 23 தமிழ் அகதி வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் விடுதலைப்புலிகளா? என்று தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

நடுக்கடலில் கூக்குரல்
குமரி மாவட்டம் மேற்கு கடற்கரை கிராமமான நித்திரவிளையை அடுத்த தூத்தூரை சேர்ந்தவர் சகாயதாஸ். இவர் விசைப்படகில் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டு படகில் நேற்று முன்தினம் கரைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது நடுக்கடலில் தனியாக நின்று கொண்டிருந்த ஒரு படகில் இருந்து "காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்'' என்று அலறல் சப்தம் கேட்டது. உடனே சகாயதாஸ் அந்த படகின் அருகில் தனது படகை கொண்டு சென்றார். அங்கிருந்தவர்களிடம் எதற்காக காப்பாற்றுங்கள் என்று சப்தம் போட்டீர்கள் என்று கேட்டார்.

அதற்கு படகில் இருந்தவர்கள் தங்களது படகு என்ஜின் பழுதாகி விட்டது என்றும், அதை சரிசெய்வதற்கு ஆட்களை அழைத்துவருவதாக கூறிவிட்டு 2 பேர் பைபர் படகில் சென்றனர் என்றும், அவர்கள் ஒருநாள் ஆகியும் இதுவரை திரும்பிவரவில்லை என்றும் கூறினர்.

23 இலங்கை அகதிகள்


உடனே சகாயதாஸ் தனது படகில் அந்தபடகை கட்டி தூத்தூர் கடற்கரை பகுதிக்கு இழுத்துவந்தார். பழுதான படகில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க 23 பேர் இருந்தனர். அவர்கள் மீனவர்கள் போல இல்லாததால், "நீங்கள் எப்படி கடலுக்குள் வந்தீர்கள்?" என்று கேட்டார். அப்போதுதான், அவர்கள் இலங்கைக்கு செல்ல திட்டமிட்டதும், அனைவரும் இலங்கை அகதிகள் முகாம்களில் வசித்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதுபற்றி உடனடியாக சகாயதாஸ் கடலோர காவல் நிலையத்திற்கும், நித்திரவிளை போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் கடற்கரைக்கு விரைந்து வந்து 23 பேரையும் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு இலங்கை அகதிகள் முகாமில் இருந்து தப்பி வந்தவர்கள் என்பதும், கள்ளத்தனமாக படகில் இலங்கைக்கு செல்ல முயன்றதும் தெரியவந்தது. இது போலீசாருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விடுதலைப்புலிகளா?
அதனால் படகில் இருந்தவர்கள் விடுதலைப்புலிகளாக இருப்பார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். பிடிபட்டவர்கள் இலங்கையில் போர் தொடங்கிய போது தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள் என்பதும், இதுவரை தமிழகத்தில் உள்ள பல அகதிகள் முகாமில் வசித்துவந்ததும் தெரியவந்தது. தற்போது இலங்கையில் போர் முடிந்து விட்டதால் அங்குள்ள உறவினர்களையும், நண்பர்களையும் பார்க்க விசைப்படகில் இலங்கைக்கு புறப்பட்டு செல்ல முயன்றதாகவும் தெரிவித்தனர்.

மர்மமாக இருக்கிறது
மேலும், அரசு அனுமதி பெற்று முறைப்படி இலங்கை செல்ல வேண்டும் என்றால் அதிக பணம் செலவாவதோடு, அதிக நாட்களும் ஆகிவிடும் என்பதால் இந்த குறுக்கு வழியை கையில் எடுத்ததாகவும் தெரிவித்தனர்.

இப்படி கள்ளத்தனமாக படகில் ஏற்றி இலங்கை கடற்பகுதியில் இறக்கி விடும் ஏஜெண்டு கும்பல் தனியாக செயல்படுவதாகவும் கூறினர். படகில் ஏற்றிச் செல்வதற்கு ஏஜெண்டுகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் கொடுத்ததாகவும், தங்களிடம் இருந்த செல்போன் சிம்கார்டுகளையும் ஏஜெண்டுகள் வாங்கிவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இவர்கள் அனைவரும் அகதிகள் முகாமில் இருந்து எப்படி தப்பி வந்தார்கள் என்பது மர்மமாக இருக்கிறது.

திருட்டப்பட்ட படகு?
இவர்களை இலங்கைக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்த ஜெகன் என்ற ஏஜெண்டின் பின்னணி என்ன? என்பதும் தெரியவில்லை. அவர் யார் என்பதும் மர்மமாக உள்ளது. இப்படிப்பட்ட படகுகளுக்கு டீசல் சப்ளை செய்பவர் குமரி மாவட்டம் வள்ளவிளையை சேர்ந்த ஜாண் தேவதாஸ் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இலங்கைக்கு செல்வதற்காக தமிழ் அகதிகள் புறப்பட்டு சென்ற படகு குமரி மாவட்டம் பூத்துறையை சேர்ந்த ஜான்சன் என்பவருக்கு சொந்தமானது. அவர் கடந்த 21-ந் தேதி தூத்தூர் பகுதியில் படகை நிறுத்திவிட்டு, பராமரிப்பு பணிக்காக பேட்டரியை கழட்டி எடுத்துச் சென்றார். 23-ந் தேதி வந்து பார்த்தபோது படகு மாயமானதை பார்த்து போலீசில் புகார் செய்தார். அவர் புகார் செய்தபிறகு தான் ஏஜெண்டுகள் அந்த படகை திருடிச் சென்று, அதில் இலங்கை தமிழ் வாலிபர்களை கள்ளத்தனமாக ஏற்றி சென்றது போலீசாருக்கு தெரியவந்தது.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

தகவல் அறிந்த குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் நேற்று காலை தூத்தூர் பகுதிக்கு நேரில் சென்று நடுக்கடலில் பிடிபட்ட 23 இலங்கை அகதிகளிடம் விசாரணை நடத்தினார். கைது செய்யப்பட்ட 23 பேரும் தமிழகத்தில் உள்ள பல்வேறு அகதி முகாம்களில் வசித்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் பெயர் விபரம் வருமாறு:-

1.முருகையா (வயது 40), சென்னை, பழவந்தாங்கலில் வெளிப்பிரிவில் வசித்தவர்.

2.உமா சந்திரன் (23), யானைக்கூட்டம் முகாம், சிவகாசி.

3.யோகதாஸ் (28), யானைக்கூட்டம் முகாம், சிவகாசி.

4.அலிஸ்டன் (23), பவானிசாகர் முகாம், ஈரோடு.

5.ஜெயச்சந்திரன் (29), திருலதா ஊர்முகாம், மதுரை.

6.ஜோசப் பிரதீப் (28), பவானிசாகர் முகாம், ஈரோடு.

7.ராஜா (29), உச்சம்பட்டி முகாம், மதுரை.

8.கிரேசி (25), வாணியர் கேம்ப் முகாம், தர்மபுரி.

9.ரமேஷ் (25), திருச்சி முகாம்.

10.இன்பரூபன் (24), கீழ்புத்துப்பட்டு முகாம், திண்டிவனம்.

11.அருணகிரி நாதன் (37), பவானிசாகர் முகாம், ஈரோடு.

12.டெடிலேசன் (27), பவானிசாகர் முகாம், ஈரோடு.

13.ஜெயரதன் (30), கீழ்புத்துப்பட்டு முகாம், திண்டிவனம்.

14.கனகராஜா (26), கோபால சமுத்திரம் முகாம், நெல்லை.

15.ரவி (40), காலாங்கரை முகாம், சென்னை.

16.ஜெகநாதன் (33), ராயலூர் முகாம், கரூர்.

17.நிக்ஷன் (28), கானாங்கரை முகாம், புழல்.

18.பாக்கியராஜ் (27), லேடர் காலனி முகாம், மேட்டுப்பாளையம், கோவை.

19.சர்மிளன் (23), நாக்கூர் முகாம், சிவகங்கை.

20.கக்கேஸ்வரன் (21), பவானிசாகர் முகாம்.

21.பிரதீபன் (21), சென்னை முகாம்.

22.தேசியன் லாரன்ஸ் (32), சென்னை முகாம்.

23.இம்மானுவேல் ஜெயக்குமார் (35), சென்னை முகாம்.

மேலும் இவர்களுடன் படகில் சென்றவர்கள் 2 பேர் ஏஜெண்டுகள் ஆவார்கள். அவர்களின் பெயர் விவரம் தெரியவில்லை. அந்த 2 மர்ம ஆசாமிகளும்தான் 23 பேரையும் இலங்கைக்கு அழைத்துச் செல்வதாக கூறி படகில் அழைத்துச் சென்று இருப்பார்கள் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பல்வேறு அகதிகள் முகாமில் இருப்பவர்களில் இலங்கைக்கு செல்ல விரும்புபவர்களை நாகர்கோவில் அழைத்து வந்து, அங்குள்ள லாட்ஜில் தங்கவைக்கின்றனர். பின்னர் அங்கிருந்து ஒரு தனியார் வேனில் அழைத்துச் சென்று கடற்கரை பகுதியில் உள்ள ஒரு தோப்புக்குள் திருட்டுத்தனமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அதன்பின்னர் அங்கிருந்து பைபர் படகில் தூத்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட இடப்பாடு என்று இடத்திற்கு கொண்டுவந்துள்ளனர். அங்கு தயாராக நின்ற விசைப்படகில் ஏற்றி இலங்கைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

படகு பழுதானது


நடுக்கடலில் படகில் பழுது ஏற்பட்டபோது, ஏஜெண்டுகள் 2 பேரும் கரைக்கு சென்று படகை சரிசெய்ய ஆட்களை அழைத்துவருவதாக கூறி பைபர் படகில் சென்றனர். அவர்கள் அதன் பின்னர் திரும்ப வரவில்லை. இதனால் பதற்றமடைந்த 23 பேரும் கடந்த 24-ந் தேதி படகில் இருந்துகொண்டு காப்பாற்றுங்கள் என்று கூக்குரல் எழுப்பியுள்ளனர். அந்த சமயம் அந்த பகுதியில் சென்ற படகின் மூலம் அவர்கள் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

மேலும், வள்ளவிளையை சேர்ந்த ஜாண் தேவதாஸ் இந்த படகுகளுக்கு டீசல் சப்ளை செய்தது தெரியவந்துள்ளது. பூத்துறையை சேர்ந்த ஆரோக்கியம் வீட்டில் கேரள மாநிலம் விழிஞ்சம் பகுதியை சேர்ந்த தேவதாஸ், ஜாண் ஆகியோர் அடிக்கடி வந்து தங்குவது உண்டு. அவர்களை பிடித்து விசாரித்தால் உண்மை நிலவரம் தெரியவரும். அது பற்றி விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.

நன்றி தினத்தந்தி


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com