Sunday, March 28, 2010

1990 முதல் 2009 வரை புலிகள் ஆட்சியில்……நடந்த வன்கொடுமைகள்! - கிறேசியன்! (பாகம் -20,21)

ஒரு மாலைப் பொழுதில் ஒரு குழு வந்தது. குழுவின் தலைவருக்குப் பெயர் சின்னக்கேடி. ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்க அங்கத்தினர் ஒருவரது பெயரைச் சொல்லி அழைத்தது சின்னக் கேடி குழு. அவர் வெளியே சென்றார். வீட்டு வளையின் மீது கைவிலங்கைப் போட்டு, அவரை ஓர் வாங்கின் மீது ஏறச் சொல்லி அந்த விலங்கை அவரது கைகளில் பூட்டினர். பின்னர் வாங்கை எடுத்துவிட்டனர். அவர் வேதனையில் துடித்து அலறினார், “எங்கேடா ஆயுதங்களைப் புதைத்து வைத்திருக்கிறாய்” என்று கேட்டு சின்னக் கேடியும், வேறு சில கேடிகளும் அவரைத் தடிகளால் அடித்தனர். அவர் தொங்கவிடப்பட்டுள்ளார்.

சின்னக்கேடி தடியைத் தூக்கி வீசி எறிந்தார். வெளியே சென்று தோட்டச் செடிகளுக்கு தண்ணீர் விடும் ஒன்றரை விட்டம் கொண்ட குழாயை எடுத்து எந்து அந்தத் தோழரை அடிக்க ஆரம்பித்தார். அவரது உடலிலிருந்து இரத்தம் வடியத் தொடங்கியது. இவர்களது அடியினால் அலறத் தொடங்கியவர் பின்னர் சத்தமிடுவதை நிறுத்திவிட்டார். காரணம் அவர் தன் அனைத்து சக்திகளையும் இழந்துவிட்டார். அவரது உடலில் அனைத்து இடங்களாலும் இரத்தம் வடிந்துகொண்டிருந்தது. இரண்டு மணித்தியாலங்களின் பின் அவர் விலங்கிலிருந்து இறக்கப்பட்டார். இழுத்து வந்து அறையில் போட்டனர். அவர் அப்படியே படுத்த படுக்கையானார்.

காயங்களுக்கு மருந்து கிடையாது, ஒரு வாரத்தில் அவரது உடலிலிருந்து சீழ் வடியத் தொடங்கியது. அந்த அறையில் எனையேரால் இருக்க முடியவில்லை. நாற்றம் எடுத்து அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. புலி விலங்குகள் அவரை போர்வையில் படுக்க வைத்து தனி அறையில் போட்டனர். அம்புரோஸ், சின்னக் கேடி, மற்றும் விலங்குகளும் வந்து வட்டமடித்துப் பார்த்துச் செல்வர். அந்த இளைஞனை பார்த்து விட்டு அவர்களின் முகங்களில் எந்தவித மாற்றமும் இன்றி செல்வர். எனது அறையில் முன்பக்கம் இரண்டு ஜன்னலும். பின் பக்கம் ஒரு ஜன்னலும் இருந்தன. எனவே உள் பகுதியிலும், அம்புரோசின விசாரணைப் பகுதியிலும் நடக்கும் அத்தனைச் சம்பவங்களையும் நான் கவனித்து வந்தேன். நான் ஏற்கனவே துணுக்காயில் இருந்த படியால் இங்கே சீனியர் கைதி!

சின்னக் கேடி ஒரு நாள் வந்து நீதான கிறேசியன் என்றார். நான் மிகவம் மரியாதை கொடுப்பது போல் எழுந்து நின்று நான்தான் அண்ண, என்றேன்! இரடா உன்னை வந்து பார்த்துக்கொள்கிறேன் என்று கூறிவிட்டு நகர்ந்தார். இன்று பிற்பகல் தொலைந்தேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஒரு வாரத்துக்கு முன்னர் அடித்துச் சித்திரவதை செய்யப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப். தோழரது நிலை மோசமானது. அவரை ஓர் போர்வையில் போட்டு நான்கு புலி விலங்குகள் வெளியே தூக்கிச் சென்றனர். மறு நாளே அவர் இறந்துவிட்டார் என்று சிறிய விலங்குகள் கதைத்துக் கொண்டிருந்ததைக் கேட்டு, ஏனைய சகோதரர்களிடம் சொன்னேன், அனைவரும் அவருக்காக வருந்தினர்.

புலி விலங்குகள் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டிருந்தனர். நாட்டுப் பற்றின் மீதோ, இனப்பற்றின் மீதோ நாட்டம் கொண்டவர்களாகத் தெரியவில்லை. கொடூரக் குணங்களைக் கொண்ட இவர்கள் இனத்தின் மீது பற்றுக்கொண்டவர்களாக இருப்பதற்கான எந்தவித அடையாளங்களும் அவாகளிடத்தில் காணப்படவில்லை. குற்றச் செயல் புரியும் கொடியவர்களின் கூடாரமாகத்தான் என் கண்ணுக்குப்பட்டது.

மாதங்களைக் கடந்து சென்றது எனது சிறைவாசம், இரண்டு மூன்று பேரைத் தவிர ஏனையவர்களை மாற்றிக் கொண்டே இருந்தனர். எனது குடும்பத்தினர் இந்த விலங்குகளது அலுவலகங்களுக்குச் சென்றிருப்பார்கள் என்பது தெரியும். இந்த விலங்குகளிடம் காரூண்யத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்? எனக்குப் பழகிவிட்டது! முன்னர் அனைத்துக் கடவுள்களையும் வேண்டி விண்ணப்பித்தேன். இம்முறை எந்த கடவுளாவது சப்போர்ட் பண்ணினால் பண்ணட்டும் என்று இருந்துவிட்டேன். ந்தத் தடவை என்னை விடமாட்டார்கள். எப்படியும் இறச்சிக் கடைக்குக் கொண்டுபோய் கூறு போடுவார்கள் என்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு இருந்தேன்.

இந்த முகாமில் என்னைத் தவிர ரஞ்சித் என்னும் சகோதரன் இருந்தார், அவர் எனது இயக்கமான ஈ.என்.டி.எல்.எப். ஐ சேர்ந்தவர். அவருக்கு நீலநிற கால்சட்டை கொடுத்திருந்தனர். சறம் வழங்கப்படவில்லை. அவர் இறந்துவிட்டதாக அவரது சறத்தை உருவி அவரது வீட்டுக்கும் அனுப்பியிருந்தனர் விலங்குகள். ரஞ்சித் ஏற்கனவே அம்புரோஸ், சின்னக் கேடியால் வதைக்கப்பட்டு உடல் முழுவதும் தழும்புகளுடன் இருந்தார். குளிக்க வரும் போது அவரது உடலைப் பார்த்தேன். மனித உரிமைகள் பற்றிப் பேசும் அமைப்புகள் முன் அவரை நிறுத்தினால் புலி விலங்குகளது முகம் கிழிக்கப்பட்டு ஓநாய்களது முகம் தெரியவந்திருக்கும். இதனை அறிந்தேன்.

மூன்றாம் மாதத்தில் ஒரு நாள் அவரை காந்தியின் இறச்சிக் கடைக்கு அனுப்பிவிட்டனர். அவர் புறப்பட்டுச் செல்லும் போது எனது ஜன்னல் அருகில் வந்து என்னைக் கூப்பிடுகிறார்கள், பெரும்பாலும் கொன்றுவிடுவார்கள் என்றுதான் நினைக்கிறேன். இப்படி கால்விலங்குடன் இருப்பதை விட சாவது நல்லதுதானே என்று கூறிய அவர் நீங்கள் விடுதலையானால், எனது அண்ணன்களிடம் சொல்லுங்கள், என்னைக் கொண்டு போய் கொன்றுவிட்டார்கள் என்று! ரஞ்சித் முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் காட்டவில்லை, சாதாரணமாகக் கதைப்பது போன்று இதை என்னிடத்தில் கூறினார். ரஞ்சித்தின் அண்ணன்மார் யாழ் நகரில் கடை வைத்துள்ளனர். ஓர் நல்ல பண்புள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்.

நாங்கள் எதிரியிடம் சிக்குண்டு இவ்விதம் வதைபட்டால் எங்கள் இனத்துக்காக அதனைப் பெருமையுடன் தாங்கிக் கொள்வோம். ஆனால் இங்கே எங்கள் இனத்தவர்கள், கொடிய விலங்குகளாக மாறி எங்கள் இளைஞர்களை இப்படி அனியாயமாக சித்திரவதை செய்வதைப் பார்க்கும் போது எங்கள் இனத்தின் மீதே எங்களுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. இவர்கள் இப்படி மனிதநேயத்தை இழக்க யார் காரணமாக இருந்திருப்பார்கள்? இவர்களது பெற்றோரா? ஏத்தனை போராளிகளைக் கொல்வது? ஏத்தனை தலைவர்களைக் கொல்வது? எத்தனை அறிவு ஜீவிகளைக் கொல்வது? அனைத்துக்குமே கொலைதான் தீர்வு என்றால் சிங்கள இராணுவம் முல்லைத்தீவில் கொலை செய்ததை எப்படித் தப்பென்பது? தனக்கொரு நியாயம் பிறருக்கொரு நியாயமா?

தமிழகத்தில் புலி விளம்பர ஒலிபரப்பு வீரர் ஒருவர் சொன்னார், புலிகள் யாரையும் கொலை செய்யவில்லை! அவர்கள் தண்டனை தான் வழங்கினார்கள் என்று! ராஜபக்சே நாளை ஓர் அறிவிப்பு வெளியிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். “நாங்கள் யாரையும் கொலை செய்யவில்லை! குற்றவாளிகளுக்குத் தண்டனைதான் வழங்கினோம்!” என்று அறிவிப்புச் செய்தால் அதை யாராவது ஏற்றுக்கொள்வார்களா?
புலிகளின் பிரச்சாரப் பீரங்கிகள் இப்படியான வார்த்தைகளைப் பயன்படுத்தி எங்கள் உயிர்ப்பிரச்சினையில் புகுந்து விளையாடினார்கள்! தங்களது பணவருவாய்க்காக புலிகளின் குற்றச் செயல்களுக்கு புதுமையான விளக்கங்களைத் தாராளமாக அள்ளிவீசினர் வெளிநாடுகளில்.

ரஞ்சித் போன்று ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர் தர்மன், இவரை நான் இந்த முகாமுக்கு வந்த சில நாட்களில் கொண்டு வந்தனர். ஆனைக்கோட்டைப் பகுதியின் ஈ.பி.ஆர்.எல்.எப். பொறுப்பாளராக இருந்த திருமதி ரூபி அவர்களின் அக்காள் மகன்தான் இந்தத் தர்மன். இவரைப் பிடித்துவந்து பெயர் விபரங்களைப் பதிவு செய்து காலில் விலங்கிட்டுப் பூட்டி வைத்திருந்தனர். இவரை எனது அறையில்தான் தங்க வைத்தனர். இரண்டு மாதங்கள்வரை எதுவித தொந்தரவும் செய்யாமல் இருந்துவிட்டு ஒரு நாள் இரவில் அவரை காந்தியின் இறச்சிக் கடைக்கு கொண்டு சென்றுவிட்டனர். பின்நாளில் அறிந்தேன் அவரை அங்கேயே கொன்று விட்டனர் என்று.

(பாகம் -21)

என்னை இந்த வதை முகாமுக்குக் கொண்டு வந்து நான்கு மாதங்கள் ஆகின. இந்த நான்கு மாதங்களில் இவர்கள் யாரையும் விடுதலை செய்யவில்லை. துணுக்காய் முகாமில் குறிப்பிடும்படியான நபர்கள்தான் சித்திரவதை செய்தனர். ஆனால் இங்கு அப்படியல்ல, பலபேர் இங்கு வந்து சித்திரவதை செய்து பழகிச் சென்றனர். இங்கு வரும் அனைத்துப் புலி விலங்குகளும் ஒரு விடயத்தில் ஒற்றுமையாகச் செயல்பட்டனர். அது என்னவென்றால், “தூசணம் பேசுவதில்”! அம்புரோஸ் எங்கள் சகோதரர்களை அடிக்கும் போது மட்டும்தான் கெட்டவார்த்தைகளைப் பயன்படுத்துவார். ஏனையோர் பார்க்கும் போதெல்லாம் தூசண வார்த்தைகளைத் தாராளமாக அள்ளி விதைப்பார்கள். படிப்பறிவு உள்ளவர்களாக இருந்தால் இப்படியான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கமாட்டார்கள் என்பது எனது கணிப்பாகும்.

நான்காவது மாத முடிவில் ஒருநாள் மாலைவேலையில் அனைவரும் தயாராக இருங்கள் என்று கூறினர். ஐந்து மணியளவில் ஓர் பட்டியலைப் படித்தனர். நாற்பது பேரது இலக்கங்கள் படிக்கப்பட்டன. அவர்களது கண்கள் கட்டப்பட்டன. வெளியே கொண்டு சென்று இரண்டு வான்களில் ஏற்றினர். அவர்கள் அனைவரையும் காந்தியின் இறச்சிக்கடைக்குக் கொண்டு சென்றனர்.

சிறிது நேரத்தில் எங்களது இலக்கங்களைப் படித்தனர். எனக்கு வழங்கப்பட்டிருந்த இலக்கம் ஆர்:11 ஆகும்! நாம் எழுந்து வெளியே வந்ததும், கண்கள் கட்டப்பட்டன! எங்களைக் கொண்டு செல்லும் வான் சிறியது என்றபடியால் ஏழுபேரை ஏற்றினர். மூன்று நான்கு நிமிட ஓட்டத்தில் ஓர் வீட்டின் முன்நிறுத்தப்பட்டது. இறங்கும்படி பணித்தனர்.

இறங்கினோம்! இது நாம் முதலில் கேள்விப்பட்ட இருபாலை வதை முகாம் என்பதைத் தெரிந்துகொண்டோம். உள்ளே செல்லும்படி கூறிய அவர்கள் உள்ளே வந்ததும் கண்கட்டுகளை அகற்றினர். உள்ளே ஒரு ஹோல் இருந்தது. அதைச் சுற்றி ஐந்து அறைகள் இருந்தன. இந்த ஹோலுக்குள் பதினைந்து பேர் வரை விலங்குகளுடன் அமர்ந்திருந்தனர். புது வரவான எங்களைப் பார்த்து அனுதாபத்துடன் சைகை வரவேற்புக் கொடுத்தனர்!

சிறிது நேரத்தில் ஏனைய சகோதரர்களையும் கொண்டு வந்தனர். அத்துடன் நாம் இருந்த அந்த விசாரணை முகாமை மூடிவிட்டனர் என்று வந்தவர்கள் கூறினர். இங்கும் அறையினுள்தான் என்னைப் போட்டனர். என்னுடன் இந்த அறையில் எட்டுப்பேரைப் போட்டனர்.

புலிவிலங்குகளுக்கென்று இந்த வீட்டின் அருகில் தனியாக ஒரு வீடு இருந்தது. இவை போக செம்பட்டை சலீம் (துணுக்காய் வதைமுகாம் பொறுப்பாளர்) வசிப்பதற்கென்று ஒரு வீடும் எங்கள் வீட்டிலிருந்து சுமார் அறுபது எழுபது அடி தூரத்தில் இருந்தது. சலீம் பதவி உயர்வில் வந்தாரா அல்லது, பணிஸ்மென்டில் இங்கு வந்தாரா என்று தெரியாது. ஆயினும் இவர்தான் இந்த வதை முகாமின் பொறுப்பாளர். ஆனால் இவர் யாரையும் விசாரிப்பதில்லை.

நாங்கள் இருந்த இந்தப் பகுதிக்குப் பொறுப்பானவர் கௌதமன். இவருக்குத் துணையாகச் செயற்பட்டவர்கள், சின்னக்கேடி, மஞ்சு, திசை, பாபு, மலரவன், மாசில் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் அல்லாமல் செம்பட்டை சலீமின் பகுதியிலும் பலர் இருந்தனர் சித்திரவதை செய்வதற்கென்று!

இங்கு ஓர் கிணறு இருந்தது. இந்தக் கிணற்றிலிருந்து சற்றுத் தள்ளி ஒரு நாவல் மரம் இருந்தது. கடுமையான சித்திரவதை செய்ய இந்த நாவல் மரத்தின் நிழலைத்தான் பயன்படுத்தினர் புலிவிலங்குகள். இவை அனைத்தையும் சுற்றி தகரத்தினால் சுவர் எழுப்பியிருந்தனர் வதை வல்லவர்கள். வெளியிலிருந்து யாரும் பார்த்துவிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் இந்தத் தடுப்பை ஏற்படுத்தியிருந்தனர். என்னால் விபரிக்க முடியாத சித்திரவதையை அனுபவித்தது இந்த வழமான இருபாலைச் சூழலில்தான்.

காலையில் கடன் கழித்து வந்ததும் இடியாப்பமும் சம்பலும் கொடுத்தனர். உண்ட அரை மணி நேரத்தில் நாவல் மரத்தடியிலிருந்து ஒரு சகோதரர் அலறும் சத்தம் கேட்டது. அடிக்கும் சத்தமும், புலிவிலங்குகள் தூசண வார்த்தைகளால் பேசும் பேச்சுக்களும் கேட்டன. இங்கிருந்த பழைய சகோதரர்களிடம் கேட்டேன், இங்கு எப்படிச் சித்திரவதைச் செய்வார்கள் என்று! சொன்னால் விளங்காது. உங்கட ரேர்ண் வரேக்க தெரிஞ்சுகொள்றதுதான் நல்லது என்று வெறுப்புடன் கூறினர்.

நாவல் மரத்தடியில் நடப்பவற்றை இதனுள் இருந்து பார்க்க முடியாது! விசாரணைக்கென்று வெளியில் கொண்டு போனால்தான் நாவலடி இரகசியத்தை நேரில் காணலாம். மதிய உணவுவரை நாவலடியிலிருந்து அபயக்குரல் கேட்டுக்கொண்டே இருந்தது. மதியத்துக்கு மேல் அந்தச் சகோதரர்களை அடிக்கும் சத்தமும், ஆடு, கோழி போன்றவற்றின் கழுத்தைத் திருகும் போது ஏற்படும் ஒலி போன்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது. என்னைப் பொறுத்தவரை இவர்களது சித்திரவதை பழைய கதைதான், ஆனால் இப்போது கேட்கும் இந்த அவல ஒலியானது வித்தியாசமாக இருந்தது!

எங்களது அறை மற்றும் ஹோலினது கதவுகளைப் பூட்டிவிட்டு புலி விலங்குகள் வெளியில் தான் நிற்பார்கள். பகலில் முன்பகுதியில் பல புலிகள் நிற்பார்கள். இரவு வேளையில் பின்பகுதியிலும் காவலுக்கு நிற்பார்கள். எங்களைக் கொண்டு வந்த இரு நாட்களாக உள்ளே இருந்தவர்கள் யாரையும் புலி விலங்குகள் அடிக்கவில்லை. மூன்றாம் நாள் காலையில் பத்துப்பேர் கொண்ட குழுவொன்று உள்ளே வந்தது. பலரது கைகளில் ஒஸ்லோன் பைப்புகள் இருந்தன. சிலரது கைகளில் மண்வெட்டி பிடி போன்ற மரக்கட்டைகள் இருந்தன.

ஒவ்வொரு அறையாகத் திறந்து அடிப்பதற்கு ஆரம்பித்தனர். ஒஸ்லோன் பைப்பினுள் மணல் நிரப்பியிருந்தனர். மணல் வெளியே கொட்டிவிடாமல் இருக்க சீமெந்து போட்டு அடைத்திருந்தனர். எனது முறை வந்ததும் புண்ணியவான் திசை அதே ஒஸ்லோன் பைப்புடன் வந்தார். தூசணவார்த்தைகளால் சகட்டு மேனிக்குப் பேசினார். பின்னர் அடிக்க ஆரம்பித்தார். அடிக்கும் போது நாம் அனைவரும் எழுந்து நின்று எங்கள் கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு நிற்க வேண்டும். இந்த முறையானது இந்த முகாமுக்கான சட்டமாம். வலிதாங்க முடியாமல் கைகளை எடுத்தால் புலிவிலங்குகளுக்குக் கோபம் வந்துவிடும். பின்னர் அவர்களைக் கீழே தள்ளிவிழுத்தி விட்டு இரண்டு மூன்று பேர் சேர்ந்து தாக்குவார்கள். இந்த விபரங்களை முதலில் யாரும் என்னிடத்தில் கூறவில்லை. ஏனையோர் எழுந்து பின் பக்கமாகக் கைகளைக் கட்டிக் கொண்டு நின்று அடிகளை வாங்கிக் கொண்டு நின்றனர். அவர்களைப் பார்த்து நானும் அதுமாதிரி நின்று அடிவாங்கினேன். அடிக்கும் போது கைகளை எடுக்கக் கூடாது என்ற விபரம் தெரியாததால், நான் கைகளை எடுத்துவிட்டேன்!

திசைக்கு வந்தது கோபம், டே பாபு! வாடா இங்க! இவன் கையை எடுத்து எனக்கு அடிக்க வந்துட்டான்டா என்று பெரிதாக ஒரு பொய்யைச் சொன்னார். பாபுவும் மேலும மூன்று பேரும் பாய்ந்து வந்தனர். கண்மூடித்தனமாக அடிக்கத் தொடங்கினார்கள். காலில் விலங்கு இந்தபடியால் கால்களை எடுத்து பலன்ஸ் செய்ய முடியாமல் கீழே விழுந்தேன். பாம்பை அடிப்பது போன்று நான்கு பேரும் சேர்ந்து கட்டைகளாலும் பைப்புகளாலும் அடித்தனர். எதற்காக அடிக்கிறீர்கள் என்று யாரிடத்திலும் கேட்க முடியாது அங்கே! என்னை அடித்த அத்தனை பேரும் தூசண வார்த்தையைத்தான் பயன்படுத்தினர்,

படித்தவர்கள் போல் தோற்றமளிக்கும் விலங்குகளும் தூசண வார்த்தைகளைத்தான் பயன்படுத்துகின்றனர். ஒரு சகோதரனைத் தாக்குவதற்கு முன்பு தங்களைத் தயார்படுத்திக் கொள்கின்றனர். ஓர் ஆவேசத் தன்மையை ஏற்படுத்துவதற்கு இந்தத் தூசண வாத்ததைகளைப் பேசி தங்களைத் தயார் படுத்திக் கொள்கின்றனர் என்று தான் நான் நினைக்கிறேன். நாங்கள் அவர்களைப் பார்த்து எதையும் பேசப்போவதில்லை!

இரண்டுமனிதருக்கிடையில் கைகலப்பு வருவதாயின் இருவரும் வார்த்தைகளைத் தடிப்பாகப் பேச வேண்டும். தடித்த வார்த்தைகள் முற்றிய பின்னர்தான் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வார்கள். ஆனால் இங்கு ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசுவதற்கோ, தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்தித் திட்டுவதற்கோ வாய்ப்புகள் எதுவும் இல்லை! எனவே எங்களைத் தாக்குவதற்கு அவர்கள் தங்களைத் தயார்படுத்தும் வழிகளில் இந்தத் தூசண வார்த்தைகள் முக்கிய பங்கு பெறுகிறது என்று எண்ணத் தோன்றியது. ஆதலால் இந்தக் கோழைகள் பிறரைத் தாக்குவதற்கு தமக்குத் தாமே பயன்படுத்தும் ஊக்கக் குளிசைதான் இந்தத் தூசண வார்த்தைகள் என்று கண்டு கொள்ளலாம். மிருகத் தனமாகத் தாக்குவதற்காக தங்களைத் தாங்களே மிருகமாக மாற்றிக்கொள்வர்.

மேல்சட்டை இல்லாத எனது உடலில் அவர்கள் அடித்த அடிகள் தடித்து வீங்கி உழவு செய்த வயல்நிலம் போல் தோற்றமளித்தது தடிவிபார்க்கையில். இவர்கள் அடிக்கும் போது ஐயோ அம்மா என்று கத்தினால் அதிகமாக அடிப்பார்களா. அல்லது கத்திச் சத்தம் போட்டாமல் இருந்தால் அதிகமாக அடிப்பார்களா என்று தெரியாமல் இருந்தது. நான் இரண்டையும் செய்து பார்த்தேன். அந்த விலங்குகள் எதனையும் கண்டுகொள்வதாக இல்லை. கத்தினால் டே கத்திரியாடா என்று அடிக்கிறார்கள், கத்தாமல் வலியை அடக்கிக்கொண்டு மௌனமாகக் கிடந்தால் டே இவனுக்கு நோவே இல்லையாடா என்று மேற்கொண்டும் பாய்ந்து பாய்ந்து அடிக்கின்றனர்.

ஒரு வழியாக அவர்கள் களைப்புற்று வெளியேறினார்கள். என்னைப் போலவே அன்று அனைவருக்கும் இந்த விருந்தை வைத்தார்கள் புலி விலங்குகள். வழக்கமாக ஏதாவது கேள்வியைக் கேட்டுத்தான் அடிப்பார்கள். அடிக்கவேண்டும் என்பதற்காகக் கேட்கப்படும் கேள்விகள் தான் அவையும். ஆயினும் இங்கு நடப்பவை வெறும் கெட்டவார்த்தை அபிசேகமும், அடி உதைகளுமாகும். துணுக்காயில் புலி விலங்குகளுக்கும் இங்கு வரும் புலி விலங்குகளுக்கும் சிறிதளவு வித்தியாசம் தென்பட்டது. அவர்கள் கேட்டுக் கேட்டு அடிப்பார்கள் இவர்கள் கேட்காமல் அடிப்பார்கள்.

இரண்டு நாட்கள் தொடர்ந்து காலையில் வந்து அனைவருக்கும் அடித்தார்கள். மூன்றாவது நாள் புதிதாகச் சில சகோதரர்களைக் கொண்டு வந்தார்கள்.

தொடரும்…

1 comments :

Anonymous ,  March 29, 2010 at 12:16 PM  

Please write this my dear EPDP member

http://www.thenee.com/html/290310-3.html

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com