1990 முதல் 2009 வரை புலிகள் ஆட்சியில்……நடந்த வன்கொடுமைகள்! - கிறேசியன்! (பாகம் -19)
நான் எனது சைக்கிளை எடுக்கச் சென்றேன். வேண்டாம் எங்களுடைய சைக்கிளில் வாருங்கள் என்றனர். இவர்கள் சொன்ன அந்தச் செய்தியில் உண்மை இருக்க வாய்ப்பில்லை என்று தெரிந்து கொண்டேன் இந்த சைக்கிள் விடயத்தில். வரமுடியாது என்று கூறினால் சுட்டுக் கொன்றுவிட்டு போவார்கள். கழுகுகள் ஆட்சியில் கோழிக்குஞ்சு நியாயம் கேட்க முடியுமா?
ஒரு சைக்கிளின் முன்புற பாறில் அமர்ந்தேன். புலி விலங்கு சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தார். சைக்கிள் நல்லூர் சங்கிலியன் வீதிக்குச் சென்றது. அங்கே ஓர் பெரிய வீடு யாரோ வசதியானவர்கள் வாழ்ந்துள்ளனர் என்பது தெரிந்தது. இந்த விலங்குகள் அந்த வீட்டை அபகரித்துள்ளனர் என்பதும் தெரிந்தது. ஒரு வாங்கில் அமரும்படி கூறினர். சிறிது நேரத்தில் உயரம் குறைந்த, மெலிந்த பாதியளவு வளைந்த நபர் ஒருவர் வந்தார். என்னைப் பார்த்துவிட்டு என்னுடன் வந்திருந்த புலியிடம் கேட்டார் “இவர்தான ஆள்” என்று! அவர்களும் “ஓம்” என்றனர்.
இப்படி விசாரித்த நபரின் பெயர் சூட் என்று பின்னர் தெரிந்துகொண்டேன். இவர்தான் புலனாய்வுக் குழுவின் இந்த முகாமுக்கு பொறுப்பானவர் என்றும் அறிந்தேன்! பிற்பகல் இரண்டுமணியளவில் அந்த வீட்டில் உள்ளே அழைத்தனர். அங்கே நான்குக்கும் மேற்பட்ட அறைகள் இருந்தன. என்னை ஒரு அறையினுள் செல்லும்படி கூறினர். நான் உள்ளே சென்றதும் அறைக்கதவை மூடித் தாளிட்டனர்.
இப்போது எனக்குத் தோன்றியது, ஒரு உயிரைக் காப்பாற்றலாம் என்று அழைத்து வந்து எனது உயிருக்கு ஏதோ அத்திவாரம் போடுகின்றனர் என்று! முன்னர் நான்பட்டு வந்த சித்திரவதைகளை மறந்திருந்தேன். அந்த அனுபவம் நிழல் போல் வந்து போயின.
இந்த அறைக்கு அருகிலிருக்கும் அறைகளிலும் வேறு சிலர் பூட்டப்பட்டிருப்பதை உணர்ந்தேன். அட இந்தக் கொலைகார புலிவிலங்குகள் இன்னுமா திருந்தவில்லை, வதைப்பது கொலை செய்வது போன்றவை இவர்களது பொழுதுபோக்கா அல்லது சுவைமிக்க கடமையா என்பது விளங்காமல் இருந்தது. இரவு ஏழு மணியளவில் பார்சல் ஒன்றைக் கொடுத்தனர். புட்டும் மீன்குழம்பும் இருந்தது. உண்டுவிட்டு மீண்டும் அறையில் முடங்கினேன்.
இரவு 11மணியளவில் கதவைத் தட்டினார்கள். வெளியே வரும்படி அழைத்தனர். ஒரு ஹையஸ் வாகனத்தில் ஏறும்படி கூறினர். ஏறினேன். அந்த வீட்டின் ஏனைய அறைகளிலிருந்து மேலும் எட்டுப்பேரை ஏற்றினர். கறுப்புத் துணியால் கண்களைக் கட்டினர். மீண்டும் துணுக்காய்தான் என்று நினைத்துக்கொண்டேன். வாகனம் புறப்பட்டது, இருபது நிமிட ஓட்டத்தில் நிறுத்தப்பட்டது அந்த வாகனம். இறங்கும்படி கூறினர், கண்கள் கட்டப்பட்டிருந்ததால் தட்டுத் தடுமாறி இறங்கினோம். ஒருவர் கையைப் பிடித்து அழைத்துச் சென்றார்.
ஒரு வீட்டினுள் செல்வது தெரிந்தது. கீழே படுத்திருப்பவர்கள் மீது கால்கள் பட்டன. எனவே அங்கேயும் யாரோ பிடித்துவரப்பட்டு இரவு உறங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதை உணர்ந்தேன். மீண்டும் ஒரு அறையில் விட்டு கண்கட்டை அவிழ்த்தனர். கும் என்ற இருட்டு படுத்துக்கொள் காலையில் வருகிறோம் என்று சென்றனர் விலங்குகள். முதல் இரவு ஆரம்பமானது. வெறும் தரையில் படுத்தேன். சேட்டைக் கழற்றவில்லை. அதனால் குளிரைத் தாங்கக் கூடியதாக இருந்தது.
காலையில் பற்பொடி கொடுத்தனர். ஆச்சரியமாக இருந்தது. ஓ! நல்ல பழக்கங்கள் பழகிவிட்டனர் போலும் என்று நினைத்துக் கொண்டு, காலை கடன் முடிந்து மீண்டும் அறைக்கு வந்தேன். இந்த வீடு நாற்சார் வீடாக இருந்தது. எட்டு அறைகளுக்கு மேல் இருந்தன. பிடித்து வைக்கப்பட்டிருந்தவர்களின் எண்ணிக்கை என்பது முதல் நூறு பேர் வரை இருக்கலாம். அனைத்து அறைகளிலும் சகோதரர்கள் இருந்தனர். நேருக்கு நேர் அனைவரையும் பார்க்க முடியவில்லை. எனது அறையில் பதினான்கு பேர்வரை இருந்தனர்.
இந்த வீடு கோப்பாய்க்கும் இருபாலைக்கும் இடையில் உள்ள பகுதியில் அமைந்திருக்கிறதென்பதை என்னால் உணரமுடிந்தது. இந்த முகாமுக்கு அப்புரோஸ் என்பவர் பொறுப்பாக இருந்தார். இவர் துணுக்காயில் விசாரணைப்பிரிவில் இருந்தவர். காலை உணவாக புட்டு கொடுத்தனர். உண்டு முடித்ததும் அழைத்தனர் வெளியே!
அம்புரோஸ் ஓர் கதிரையில் இருந்தார். என்னை அழைத்து வழக்கம் போல் அவர் முன்நிலையில் நிலத்தில் அமரச் சொன்னார். ஆரம்பித்தார் வழக்கமான கேள்விகளை, அப்பா, அம்மா பெயர் சகோதரர்கள் விலாசம் என்று அனைத்தையும் பதிவு செய்த பின்னர் கேட்டார், நீ ஈ.என்.டி.எல்.எப்.ல் மீண்டும் சேர்ந்து இயங்குகிறாய்? நான் இல்லை என்று சொன்னேன், ஈ.பி.ஆர்.எல்.எப் ராஜாவுடன் உனக்கு என்ன தொடர்பு? அவர் எனது ஊரைச் சேர்ந்தவர். அடிக்கடி அவரைப் பார்ப்பேன். இயக்க ரீதியாக அவர் எதுவும் என்னுடன் கதைப்பதில்லை நானும் அவருடன் எந்த இயக்கங்களைப்பற்றியும் கதைப்பதில்லை என்று கூறினேன்.
ஈ.பி.ஆர்.எல்.எப் தோமஸ்சுடன் உனக்கு என்ன தொடர்பு? அவரும் எனது ஊரைச் சேர்ந்தவர்தான் அவர் பல வருடங்களுக்கு முன்னரே இயக்கத்தை விட்டு விலகி விட்டார். அவரது தொழில் குடும்பம் என்று இருக்கிறார், அவருடன் இயக்கங்கள் பற்றி நான் எதுவும் கதைத்தது கிடையாது, அவரும் கதைத்தது கிடையாது என்றேன்.
நீ கழுத்தில் தங்கச் சங்கிலி போட்டிருக்கிறாய். உனக்கு அது எங்கால? எனது உறவினரான முதலாளி வாங்கிக் கொடுத்தது என்று சொன்னதும் வலது கையால் பலமாக ஓங்கி என் இடது கன்னத்தில் அறைந்துவிட்டு அவரது காலால் உதைத்தார் அம்புரோஸ். முன்னர் மண்டை மல்லி உதைத்தது போன்றே அம்புரோசும் உதைத்தார். யாரடா முதலாளி? வின்சென்ட், குத்தகைக்காரர் என்றேன். உனக்கு சைக்கிள் எங்கால? அதுவும் வின்சென்ட் அவர்கள்தான் வாங்கிக் கொடுத்தது.
மீண்டும் காலால் இரண்டு தடவைகள் உதைத்தார். வேறு கேள்விகள் அவரிடத்தில் இல்லை! ஆயுதங்களை எங்கே புதைத்து வைத்திருக்கிறாய்? என்றார், அப்படி எந்த ஆயுதமும் இல்லை என்று கூறினேன். உடனே அருகில் நின்ற ஒருவரிடம் இவனுக்கு காலில் விலங்கு மாட்டுங்கள் என்றார். ஒருவர் வந்து எனது சேட்டைக் கழற்றச் சொன்னார். அடுத்தவர் ஓர் சாக்கு மூடையிலிருந்து சங்கிலி ஒன்றை எடுத்து வந்தார். துணுக்காயில் போட்ட அதே சங்கிலி அளவுதான் இருந்தது இதுவும். இரண்டு தலைப்புகளையும் எடுத்து இரண்டு கால்களையும் சுற்றி இரண்டு முனைகளுக்கும் இரண்டு இஞ்சி அளவிலான பூட்டுக்களைப் போட்டுப் பூட்டினர். ஆவை சைனா பூட்டுக்கள். மேலும் கீழுமாகப் பிடித்து அழுத்தினால் பூட்டிக்கொள்ளும்.
பூட்டிய பின் எழுந்து அறைக்குள் போகும்படி கூறினர். நானும் அவ்விதம் எழுந்து நடந்தேன். ஒரு காலுக்கும் மறு காலுக்கும் இடையில் எடுத்து வைக்கக் கூடிய தூரம் அரை அடிதான். அவ்விதமே நடந்து அறையை அடைந்தேன். என்னுடன் ஹையஸ் வாகனத்தில் வந்திருந்த சகோதரர்களையும் அழைத்துக கேள்விகள் கேட்டு, அடித்து உதைத்துவிட்டு காலில் சங்கிலி மாட்டி அனுப்பி வைத்தனர் அறைகளுக்கு.
ஏனைய அறையிலிருந்தவர்களையும் வெளியே அழைத்து வந்து அடித்தனர். பின்னர் அறையில் போட்டுப் பூட்டினர். தினமும் ஒரு குழு வருவதும், இருக்கும் சகோதரர்களை அடித்துத் துவைத்துவிட்டுச் செல்வதும் இங்கு வழக்கமாக நடைபெறும் நிகழ்வுகள்தானாம். தமிழ் இனத்தின் மீது பற்றுக்கொண்ட விலங்குகள் அந்த மக்களைக் குதறிக் கடிக்கத்தானே செய்வர்!
என்னை அடித்துக் கால்விலங்குப் போட்டப் பின்னர் எதுவும் விசாரிக்கவில்லை. ஒரு கிழமையாக அங்கு நடப்பவற்றை அவதானித்துக் கொண்டிருந்தேன். காலை மாலை இரண்டு வேளை இயற்கை உபாதைகளைக் கழிக்க கழிவுக் கூடம் செல்லலாம். மூன்று வேளை உணவுக்காகவும் அறைகளைத் திறப்பார்கள். பார்சலில்தான் உணவு வழங்கப்படும். துணுக்காய் உணவை விட இந்த உணவு எவ்வளவோ நல்லது.
தினமும் யாரையாவது அழைத்துவருவார்கள், அதே போன்று இங்கிருக்கும் பழைய சகோதரர்களை வாகனத்தில் ஏற்றி வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்வர். கண்களைக் கட்டித்தான் அனைவரையும் அழைத்து வருவர், அழைத்துச் செல்வர். இங்கிருந்து அப்படி அழைத்துச் செல்லப்படுபவர்கள் இருபாலை நகரை அண்டிய இடத்தில் இருக்கும் ஓர் வதை முகாமுக்கும், சிலரை சாவகச்சேரியில் இருக்கும் வதைமுகாமுக்கும் அனுப்புவர். இருபாலையில் இருக்கும் முகாமுக்கு பொறுப்பாளராக இருந்தவர் கௌதமன் என்றும் சாவகச்சேரி வதைமுகாமுக்குப் பொறுப்பாக இருந்தவர் காந்தி, இந்தச் சாவகச்சேரி முகாமை இறச்சிக் கடை என்றுதான் புலி விலங்குகள் கதைத்துக் கொள்வர்.
ஏனெனில் அந்த வதை முகாமுக்குக் கொண்டு செல்லப்படுபவர்கள் கொடும் வதைக்கு உள்ளாகி கொல்லப்படுவார்கள். கசாப்புக் கடை என்பதை நாகரீகமாக இறச்சிக்கடை என்று வர்னிக்கின்றனர் விலங்குகள். அதிலும் இந்த இறச்சிக்கடையின் பொறுப்பாளரது பெயர் காந்தி1!
புத்து நாட்களாக அலறல் சத்தமும், முனகலுமாக சகோதரர்கள் தங்கள் வலியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.
ஒரு மாலைப் பொழுதில் ஒரு குழு வந்தது.
தொடரும்…
0 comments :
Post a Comment