Wednesday, March 24, 2010

1990 முதல் 2009 வரை புலிகள் ஆட்சியில்...நடந்த வன்கொடுமைகள்! -கிறேசியன்!(பாகம் -13,14)

சென்ற் நிகலஸ் றோட்டைச் சேர்ந்த ஜேக்கப் என்பவர் எனது பகுதிக்குள் இருந்தார். அவருக்கு 5 குழந்தைகள், வயது 45 முதல் ஐம்பது இருக்கும். அவரிடம் விசாரித்தேன். சொன்னார், தம்பி, எனது தெருவில் நான் நன்றாக இங்கிலிஸ் கதைப்பேன். ஐ.பி.கே.எப். வந்ததிலிருந்து எங்கள் பகுதிக்குள் வரும் போது என்னை அழைத்துத்தான் கதைப்பார்கள். காரணம் அவர்களுக்கு தமிழ் தெரியாமல் இருந்தது. ஊரில் உள்ளவர்கள்தான் எனக்கு ஆங்கிலம் தெரியும் என்று அழைத்து வந்தார்கள்.

ஊரில் இருப்பவர்களை சந்தேகத்தில் பிடித்துச் சென்றால் சம்பந்தப்பட்டவர்களுடன் சென்று உயர் அதிகாரிகளுடன் ஆங்கிலத்தில் கதைப்பேன். பின்னர் அந்த வட்டாரத்தில் யாரையாவது பிடித்தால் என்னிடம் வந்து கேட்பார்கள், ஜேக்கப் அண்ண, “ ஒருக்கா வந்து ஆமிக்காரரோட கதைச்சு எப்படியாவது என்ர பிள்ளையை எடுத்துத் தாங்கோ” என்று.
நானும் அவயன்ர காம்புக்குப் போய் பிடிபட்ட பிள்ளையைப் பற்றி நல்லவிதமாகச் சொல்லி அவர எனக்குக் குழந்தையில் இருந்து தெரியும், எந்தத் தப்பும் செய்யாது என்று பொய் சொல்லி கூட்டிக் கொண்டு வந்து விடுவேன்.

அப்படி முன்பின் பார்த்திராத பிள்ளையளை நான் கூட்டிக் கொண்டு வந்து விட்டதுக்கு இப்ப இவையள் கேக்கினம், “உன்ர பிள்ளையை உன்ர மனிசிய ஐ.பி.கே.எப். க்கு கூட்டிக் குடுத்தியா” என்று. எந்த மனச்சாட்சியை வைத்து இந்த மாதிரி கேக்கினம் என்று தெரியவில்லை!

நான் எந்த இயக்கத்துக்கும் ஆதரவு கொடுத்ததில்லை. ஊர்ச்சனம்தான் ஐ.பி.கே.எப். ஐ இழுத்து வந்து எனது வாசலில் நிறுத்தினவையள். புலியின் ஆதரவாளர்கள்தான் அவர்களுடன் கதையுங்கோ என்று சொல்லி என்னை இப்படி மாட்டிவிட்டவர்கள். இங்கிலிஸ் படிச்சபடியால் வந்த வினை!

எனது நிலையை எடுத்துச் சொல்வதற்கு, அதனை செவிமத்து கேட்பதற்கு இவர்களில் யாரும் படித்தவர்கள் இல்லை. விசாரணை அதிகாரிகள் என்று வந்தவர்கள் கொழும்புச் சிறையில் தமிழ் பெடியங்களைக் கொன்ற சிங்களக் கைதிகள் போல இருக்கிறார்கள். விறகு கட்டையால் அடிக்கிறார்கள். கொழும்பில் விறகுகட்டை, அலவாங்குகளால்தான் தமிழ் கைதிகளை அடிச்சுக் கொன்றவர்கள் என்று கேள்விப்பட்டனான்.

ஒரு புலித் தம்பி கேட்டார், நீ எத்தனை புலிகளைக் காட்டிக் குடுத்தனீ? என்று. ஊரில் இருந்த புலிகளின் ஆதரவாளர்கள் ஏனைய புலி ஆதரவாளர்களை தங்களது பகையின் மூலம் காட்டிக் கொடுத்தார்கள். நான் ஐ.பி.கே.எப். பிடம் போய், தவறாக போட்டியில் சொல்லியிருக்கினம் என்று கூறி பிடித்து வைத்திருந்த புலி ஆதரவாளர்களை எடுத்து வந்தனான்.

இவையள் என்னவென்றால் ஐ.பி.கே.எப். போட உனக்கு என்ன வேலை? என்று கேட்டு கொடுமைப் படுத்துகின்றனர். இங்க பாருங்க தம்பி எனது அலகை என்று காண்பித்தார். மல்லி என்ற கொடிய மிருகம் தனது முரட்டுக் கையால் குத்தினதால் எனது அலகு ஒரு பக்கத்துக்கு இழுத்துக் கொண்டுவிட்டது என்று கூறி தனது இடது பக்கத்து தாடையைக் காண்பித்தார்.
உண்மையில் நான் அவரைப் பார்க்கும் போது அவரது தாடை வலது பக்கம் சரிந்து பக்கவாட்டாக இழுத்துக் கொண்டு இருந்தது.

இயற்கையிலேயே அவருக்கு இப்படித்தான் கீழ்வாய்ப் பகுதி அமைந்துள்ளது போலும் என்று நினைத்திருந்தேன். மண்ட மல்லியின் வேலைதான் இதுவென்று சொன்னபோதுதான் அவரைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

2005ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அவரது வீட்டுக்குச் சென்றேன். புலி விலங்குகளிடமிருந்து விடுபட்ட பின்னர் நான் அவரைப் பார்த்ததில்லை. ஒரு நாள் அவர் பற்றி நினைவு வந்தது. பார்த்து வரலாம் என்று தோன்றியது. பார்த்தேன், அவரது வாய் முற்றாகக் கோணலாகி கதைபேச்சு எதுவுமற்றவராகி, கைகளால் ஏதோ சொல்லவந்தார். பின்னர் அழுவதற்கு ஆரம்பித்து விட்டார். அவரது மூத்தமகள் போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர். முப்பத்தைந்து வயதை தாண்டியிருந்தார். ஏனைய பிள்ளைகள் திருமணமாகிச் சென்றுவிட்டனர்.

அவர் எதையோ சொல்ல பல தடவைகள் முயற்சித்தார். அவரால் முடியவில்லை. ஆறுதல் கூறி புறப்படும் போது என்னைக் கட்டித்தழுவி அழுதார். அவசரமாக ஓர் வெள்ளைத் தாளை எடுத்து எழுதினார். “புலிகளோட கவனம், அவர்கள் மனிதர்கள் அல்ல! கொடிய சாத்தான்கள்! எங்களுக்கு நடந்த கொடுமைகள் உலகத்துக்குத் தெரியாது, அப்படி உலகத்துக்குத் தெரிந்தால் தமிழருக்குத்தான் அவமானம். நான் மறந்துவிட்டேன். நீயும் மறந்துவிடு! ஜேசு உன்னைக் காப்பாற்றுவார். கடவுளை வணங்கு! இப்படி எழுதிக் காண்பித்தார். அந்தத் தாளை என்னுடனேயே எடுத்து வந்தேன்.

எவ்வளவு பெருந்தன்மை ஜேக்கோப் அவர்களுக்கு, தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை பழிவாங்க நினைக்காமல், மறந்துவிடு என்றும், தமிழர்களுககு இதனால் அவமானம் என்றும் சிந்திக்கும் அளவுக்கு ஓர் இனப் பற்றுக் கொண்ட மனிதரை இந்தப் புலிவிலங்குகள் விலங்கிட்டுக் கொடுமைப் படுத்தியுள்ளனர்.

தங்களைத் தவிர பிற இயக்கங்களையும், பொதுமக்களையும் புலிகள் எதிரிகளாகத்தான் பார்த்தனர். காரணம் சந்தேகம். குடும்பங்களுக்குள் சந்தேகம் தோன்றினால் அந்தக் குடும்பமே அழிந்துவிடும். அதே போன்றுதான் ஓர் இனத்தவருள் சந்தேகம் தோன்றினால் அந்த இனமே அழிந்துவிடும். தமிழருக்கு இது பொருந்தும். தீராத சந்தேகம் தீவிர பகையானது! ஜாக்கோப் அவர்களால் பலர் காப்பாற்றப்பட்டனர், ஜாக்கோப்பைக் காப்பாற்ற யாருமில்லை! விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை!

தொடரும்….

பாகம் -14

புலிகள் பிடித்துவைத்திருந்த தமிழ் இளைஞர்களில் ஏறக்குறைய மூவாயிரத்துக்கும் அதிகமானவர்களை கொலை செய்தார்கள். பிடித்து வராமல் அந்த அந்த ஊர்களில் வைத்தே மூவாயிரத்துக்கும் அதிகமான இளைஞர்களைக் கொன்றார்கள். மேலும் இயக்க ஆதரவாளர்கள், ஐ.பி.கே.எப். இருந்த போது அவர்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் என்று பொதுமக்களில் ஏறக்குறைய மூவாயிரம் பேர் வரை கொலை செய்தார்கள். ஐ.பி.கே.எப். வெளியேறிய 1990ஆம் ஆண்டில் தமிழ் இளைஞர்கள் மொத்தமாக ஒன்பததினாயிரம் பேர் வரை புலி விலங்குகளால் கொல்லப்பட்டார்கள்.

தமிழர்களைக் கொலை செய்வது புலிகளுக்கு பிறப்பரிமையாக்கப்பட்டது. 2009;ல் தமிழர்களை கூண்டோடு அழிப்பது சிங்கள இனத்துக்குப் பிறப்புரிமையாக்கப்பட்டது. எனது ஊரில் நடந்த ஓர் நிகழ்வைச் சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன். 1982ஆம் ஆண்டு நடந்தது.
எனது ஊரில் ஆசீர்வாமும் அந்தோனிப்பிள்ளையும் உறவினர்கள். ஓத்த வயதுடைய இவர்களது குழந்தைகள் ஆறாவது ஏழாவது வகுப்புகளில் படித்து வந்தனர். இந்த இரு மானவர்களுக்கிடையில் ஒரு நாள் கைகலப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் வீடு வந்து சேர்ந்தது. ஆசீர்வாதமும் அந்தோனிப்பிள்ளையும் நேருக்கு நேர் சண்டையிட்டுக்கொண்டனர். இரண்டு பேருக்குமேi முகங்களில் காயம். இரண்டு பேருமே சவால் விட்டுக்கொண்டனர். உன்னை ஒரு கை பார்க்காமல் விடமாட்டேன். இதுதான் இவரது சவாலும்! ஆசீர்வாதம் தனது தரப்பில் பத்துப் பேரைத் திரட்டினார். இதைக் கேள்விப்பட்ட அந்தோனிப்பிள்ளை பதிலாக அவரும் பத்துப்பேரைத் திரட்டினார். அவரும் விருந்து வைத்தார். இவரும் விருந்து வைத்தார் அடியாட்களுக்கு. இரண்டு நாட்கள் விருந்துக்குப் பின்னர் ஞாயிறு மாலை அந்தோனிப்பிள்ளையின் வீடு நோட்டமிடப்பட்டது. அந்தோனிப்பிள்ளை அலேர்ட் ஆனார். அவரது அடியாட்களும் வந்து சேர்ந்தனர். தடிகள் கத்திகளுடன் மோதிக்கொண்டனர். யாரும் இறந்துவிட வில்லை. ஆனால் பயங்கரக் காயம்.

இரண்டு பகுதியினரும் ஆளுக்கொரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆசீர்வாதத்தின் மனைவியிடமிருந்த தாலிக்கொடி காப்புச் சங்கிலி எல்லாம் அடவு கடைக்கும், விற்பனைக்கும் சென்றன. அதேபோல் அந்தோனிப்பிள்ளையின் நகைகளும் விற்பனைக்குச் சென்றன. இது மானப்பிரச்சினை, கழட்டடி தாலியை என்றுதான் நகைகள் கழற்றப்பட்டன. முதலில் பத்துப் பத்துப் பேருடன் ஆரம்பமான இந்தப் பகை இப்போது ஒவ்வொருப் பகுதியிலும், ஐம்பது பேராகிவிட்டது. மருத்துவ மனைக்குச் சென்றவர்கள் வழக்குகளைச் சந்தித்தனர். இரண்டு பகுதியினரும் சட்டத்தரனிகளை ஏற்பாடு செய்தனர். ஊரில் இரண்டு வசதியானவர்கள் சண்டையிட்டால், இரண்டு சட்டத்தரணிகள் பணக்காரர் ஆவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே! இவர்கள் மருத்துவரையும் பணக்காரர்களாக்கிக் கொண்டிருந்தனர்.

ஒருபக்கம் மருத்துவச் செலவுகளைச் சந்திக்க வேண்டும். சட்டத்தரணிகளுடன் தற்காப்பு நடவடிக்கைகளையும் வழக்கில் உள்ள ஓட்டை உடசல்களையும் கண்டறிந்து வழக்கில் வெற்றி பெற வேண்டும். இதே திட்டத்தில்தான் அந்தோனிப்பிள்ளையும் செயற்பட்டு வருகிறார். ஒரு கிழமை போனது. மருத்துவமனையிலிருந்து அனைவரும் வீடு திரும்பினர். இந்த இரண்டு பகுதியினரையும் தூண்டி விடுவதற்கென்று பலபேர் இரவு பகலாக பணியாற்றிக்கொண்டிருந்தனர். உடனுக்குடன் இருபகுதியினரது திட்டங்களும் இருவரையும் சென்றடையும்இ ஊர் வாசகசாலையில் இதற்கென்றே ஆட்கள் கூடுவர். சண்டையில் யாரது பக்கம் நியாயம் இருக்கிறது என்பதுபற்றி விலாவாரியாகக் கதைப்பார்கள். பொதுவான விவாதம் ஒருபக்கம் இருக்க, ஆசீர்வாதத்தை தூண்டி விடுவதற்கும் அவர்கள்தான் நியாயம் அதிகமாக இருககிறது என்று கூறி அவரை உசுப்பேற்றி விடுவதற்கும் ஊரில் வெட்டிப்பேச்சு வல்லவர்கள் இருந்தனர்.

இறுதியில் ஊர் இரண்டு பட்டது. அடுத்த மோதலுக்குத் தயாரானார்கள் இருபகுதியினரும். இந்த நேரத்தில் வெளிநாடு சென்றிருந்த பாதிரியார் ஊர் திரும்பினார். ஆலயத்தில் இருந்தவர்களிடத்து விபரங்கள் கேட்டறிந்தார். ஊருக்குள் சென்று ஏனையோரை விசாரித்தார். இறுதியாக இரு பகுதியினரையும் ஆலயத்துக்கு வரும்படி அழைத்தார். இருவரும் தங்கள் குழுவினருடன் ஆலயத்துக்கு வந்து சேர்ந்தனர். குழுவினரை வெளியே இருக்கச் சொன்ன பாதர். ஆசீர்வாதத்தையும், அந்தோனிப்பிள்ளையையும் தனியாக உள்ளே அழைத்தார்.

அவர் முன் இருந்த நாற்காலியில் இருவரையும் அமரும்படி கூறினார். பாதரின் ஆணையில் உபதேசியார் மட்டும் நின்று கொண்டிருந்தார். பாதர் சொன்னார்: ஒரு வீரன் எப்போதும் தன் குற்றத்தை ஒப்புக் கொள்வான். கோழை ஒருபோதும் குற்றத்தை ஒப்புக்கொள்ள மாட்டான். தண்டனை கிடைத்துவிடுமோ மரியாதை குறைந்து விடுமோ என்ற அச்சத்தில் கோழை பொய்சொல்ல ஆரம்பிப்பான். உங்கள் இருவரிடத்திலும் வீரம் இருக்கிறது என்பதை நான் நன்கு அறிவேன்.

எனவே நாங்கள் மூவரும் ஐந்து நிமிடங்கள் அமைதியாக இருப்போம் என்று கூறி உபதேசியாரிடம் ஐந்து நிமிடத்தில் எங்களுக்கு நினைவூட்டவும் என்று சொல்லி பாதர் மௌனமானார். ஆசீர்வாதமும் அந்தோனிப்பிள்ளையும் அவர் போன்றே மௌனமானார்கள்.
ஐந்து நிமிடங்களில் உபதேசியார் நினைவூட்டினார். பாதர் ஆசீர்வாதத்தைப்பார்த்து, நீங்கள் சொல்லுங்கள். யார் மீது தப்பு? ஆசீர்வாதம் சொன்னார்: பாதர் என்மீதுதான் தப்பு! என்னை மன்னித்துவிடுங்கள்! அந்தோனிப்பிள்ளையைப் பார்த்து அந்தோனிப்பிள்ளை சொல்லுங்கள் யார் மீது தப்பு? பாதர் என்மீதுதான் தப்பு என்றார் அந்தோனிப்பிள்ளை. பாதர் சொன்னார்: நீங்கள் இருவருமே வீரர்கள். உங்கள் ஊரில் நான் பங்குத்தந்தையாக இருக்கப் பெருமைப்படுகிறேன்.

நீங்கள் இருவரும் சண்டையிடுவதால் சிலருக்கு சில நன்மைகள் கிட்டலாம். ஆனால் இழப்பு எங்கள் சமூகத்துக்குத்தான். சிறுபிள்ளைகளது பிரச்சனைகளை அவர்களுடனேயே தீர்த்துக் கொள்ளவேண்டும். நாம் பெரியவர்கள் மோதல் போடுவது மிருக சிந்தனைக்கு ஒப்பானது. பகுத்து அறிந்துகொள்ள அறிவு இருக்கும் போது ஆயுதங்களுக்கு என்ன வேலை இருக்கிறது. இங்கு எதைப்பற்றியும் நாங்கள் ஆராய வேண்டியதில்லை. நடந்தவையை மறந்து நீங்கள் சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழவேண்டும். நீங்கள் ஒருவருக்கொருவர் சமாதானம் சொல்லிக்கொள்ளுங்கள். இருவரும் சமாதானம் சொல்லிக்கொண்டனர். இருவரும் கைகோர்த்தபடி பாதரின் பின்னால் சென்றனர். வெளியே நின்ற குழுவினரிடத்து பாதர் சொன்னார்.

அன்பார்ந்த சகோதரர்களே! ஆசீர்வாதம் அவர்களுக்கும் அந்தோனிப்பிள்ளை அவர்களுக்கும் இருந்து வந்த பகை உணர்வு மறைந்துவிட்டது. அவர்கள் ஒற்றுமையாக வாழ சம்மதம் தெரிவித்துள்ளனர். அவர்களிடையில் இனிமேல் சண்டை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டியது உங்ளின் கடமையாகும். இவ்வளவு பெரிதாகிவிட்ட சண்டையை ஒரு நொடிப்பொழுதில் மறப்பதற்கு முன் வந்த ஆசீர்வாதத்தையும் அந்தோனிப்பிள்ளையையும் நினைத்து நான் பெருமைப்படுகிறேன்! எங்கள் ஊரில் இனிமேல் சண்டைகள் வரக்கூடாது. அப்படி வந்தால் அதனை முளையிலேயே நாங்கள் தீர்த்துக்கொள்ள வேண்டும். இந்த நல்லதோர் நிகழ்வை நாம் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். இன்று இரவு நானே உங்கள் எல்லோருக்கும் விருந்து வைக்கிறேன். அதில் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் என்று கூறி முடித்தார்.

ஆசீர்வாதம், உடனே பாதர் இந்த விருந்துக்கு நான் ஆடு ஒன்று தருகிறேன். பதிலுக்கு பாதர் நானும் ஓர் ஆடு தருகிறேன் என்று கூறி இருவரும் ஆடுகளைக் கொடுத்து அன்று இரவு விருந்து சிறப்பாக நடந்து ஊர் பெரும் அமைதி திரும்பியது.

இரண்டு மாணவர்களது சண்டை எங்கள் ஊரை இரண்டு பட வைத்தது. இரண்டு பிரிவாக ஊர் திரண்டு மோதுவதற்கு இருந்த தருணத்தில் பங்குத் தந்தை வந்தார். எங்கள் இனத்தைப்பற்றி நாம் சிந்தித்துப்பார்த்தால் இச்சம்பவம் எங்கள் இயக்கங்களுக்கு மிகவும் கச்சிதமாகப் பொருந்தும்!

இயக்கங்கள் மோதும் போது அதனைத் தடுப்பதற்கு யாரும் இருக்கவில்லை. எங்கள் இளைஞர்களும் ஆசீர்வாதம் அந்தோனிப்பிள்ளை ஆகியோர் பங்குத் தந்தைக்கு மரியாதை கொடுத்தது போன்று யாருக்கும் மரியாதை கொடுத்ததில்லை. எங்கள் பங்குத் தந்தையால் ஊர் இரண்டுபட்டு நடக்க இருந்த மோதல் தவிர்க்கப்பட்டது. சமாதானம் ஏற்பட்டது.

இந்தப் பங்குத் தந்தைப் போன்று எங்கள் தமிழ் இனத்துக்கு ஓர் தலைமை இருந்திருந்தால் இயக்கங்களை அழைத்து அமரவைத்து வீரர் என்றால் தவறை ஒத்துக்கொள்வர் என்று விளக்கம் கூறியிருந்தால் இந்த இயக்க அழிப்பு நடவடிக்கையே நின்று போயிருக்கும். 1986ல் எலி வளை என்றாலும் தனி வளை வேண்டும் என்பார்கள். எங்கள் இனத்துக்கு என்று ஓர் தலைமை நிரந்தரமாக வேண்டும். அதை ஏற்படுத்த வேண்டியது இன்று எஞ்சியிருக்கும் தமிழ் மக்களது கடமையாகும். முன்பு புலிகள் எங்கள் இனத்தை வேட்டையாடியது போன்று இனி வருங்காலங்களில் சிங்கள இனத்தவர் எங்கள் இனத்தை வேட்டையாடாமல் இருக்க தகுதியுடையவர்களை இணைத்து தலைமை ஒன்றினை உருவாக்க வேண்டும்.

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 6,7

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 8


1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 9

1990 முதல் 2009 வரை புலிகள்ஆட்சியில்.. நடந்த வன்கொடுமைகள்! கிறேசியன்! (பாகம் -10)

1990 முதல் 2009 வரை புலிகள் ஆட்சியில்……நடந்த வன்கொடுமைகள்!- கிறேசியன்! (பாகம் -11)

1990 முதல் 2009 வரை புலிகள் ஆட்சியில்……நடந்த வன்கொடுமைகள்! - கிறேசியன்! (பாகம் -12)

இது தொடர் கட்டுரைகள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. T111

தொடரும்...

1 comment:

  1. சகோதரன் கிறேசியன் அவர்களுக்கு நன்றி எங்கே உங்களது கட்டுரைகள் ஒரு ENDLF தனமாக அல்லது ஒரு புலித்தனமாக இருக்குமோ என எதிர் பார்த்தேன் ஆனால் 13 வது கட்டுரை வாசித்த பின் மனதில் மிகவும் மகிழ்ச்சி தொடர்ந்து எழுதுங்கள் அனைவரையும் சிந்திக்கக்கூடியதாக. நீங்கள் பழைய விடயங்களை கிண்டுவதூடு மாத்திரம் நிற்க்க வேண்டாம். புலிகள் உட்பட ஏனைய அமைப்புகளும் மனித உரிமைகளை மதிக்கவில்லை. இவர்கள் அனைவரும் எமது சமூகத்தில் இருந்து வந்தவர்கள் தானே! எமது சமூகத்தில் இருக்கும் பல்வேறு குறைபாடுகளை நாம் களைவதன் மூலம் தான் நாம் இவற்றுக்கு தீர்வு காணலாம். உதாரணமாக குடும்பங்களில் கூட பெற்றோர் பிள்ளைகளுக்கிடையில் போட்டி மனப் பன்மையை வளர்த்து விடுவார்கள் பின் இவர்கள் வளர்ந்து குடும்பமாக வந்ததன் பின்னும் தொடரும் அல்லது அயலவர்களுடன் தொடரும். இதுவே இயக்கங் களுக்கிடையில் குரோதம் வளர்வதற்க்கும் காரணமாகும். நீங்கள் சொல்லவதை போன்று இவர்களை ஆற்றுகை படுத்த எம்மிடையே நல்ல தலைவர்களும் இல்லை அல்லது எல்லோரும் மதிக்கத்தக்க மதத்தளைவர்களோ இல்லாமல் போனது எமது பெரிய குறை பாடு ஆகும். இங்கே எனது கட்டுரை ஒன்றையும் உங்களுக்கு அனுப்புகின்றேன் இது பதிவு தமிழ்வின் களுக்கிடையில் நடடக்கும் நாய் சண்டைக்கு எதிராக எழுதியது.

    ReplyDelete