Thursday, March 11, 2010

ஜெனரல் பொன்சேகாவிற்கான இராணுவ நீதிமன்ற விசாரணைகள் 16ம் 17ம் திகதிகளில்.

முன்னால் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகா மீதான இராணுவ நீதிமன்றின் விசாரணைகள் எதிர்வரும் 16ம் 17ம் திகதிகளில் இடம்பெறும் என இராணுவப் பேச்சாளர் அறிவித்துள்ளார். இராணுவத்தில் இருக்கும்போது அரசியலில் ஈடுபட்டதாக 4 குற்றச்சாட்டுக்களும் , இராணுவத்திற்கான ஆயுதக்கொள்வனவில் மோசடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக 4 குற்றச்சாட்டுக்களும் ஜெனரல் மீது சுமத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள இராணுவப் பேச்சாளர், ஜெனரல் பொன்சேகாவிற்கு எதிரான குற்றப்பத்திரிகையின் பிரதியொன்று அவரிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு கடற்படைத் தலைமையகத்தில் இடம்பெறவுள்ள நீதிமன்ற விசாரணைகளுக்காக நீதிபதிகளாக மேஜர் ஜெனரல்கள் விஜேதுங்க, டி.ஆர்.ஏ.எஸ். ஜெயதிலக மற்றும் ரியர் அட்மிரல் டபிள்யூ. டபிள்யூ. ஜே. எஸ். பெர்ணாண்டோ ஆகியோர் இராணுவத் தளபதி ஜகத் டயசினால் ஜனாதிபதியின் அறிவுறையின் பேரில் நியமிக்கபட்டுள்ளனர்.

அதே நேரம் மேற்படி இராணுவ நீதிமன்ற விசாரணையை எதிர்த்து ஜெனரல் தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணி உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அம்முன்னணியில் பங்கு கட்சியான ஜேவிபியின் முக்கியஸ்தர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இராணுவச் சட்டத்திட்டங்களின் பிரகாரம் ஜெனரல் பொன்சேகாவின் விசாரணைக்கான இராணுவ நீதிமன்றில் ஜெனரலிலும் பார்க்க பதவி உயர்ந்தவர்களே நீதிபதிகளாக இருக்க முடியும் என அவர்கள் நீதிமன்று செல்லவுள்ளனர்.

அத்துடன் ஜெனரல் பொன்சேகா மீதான குற்றச்சாட்டுக்களை முறியடிப்பதற்காக முன்னாள் பிரத நீதியரசர் சரத் என் சில்வா தலைமையில் சட்ட வல்லுனர்கள் குழுவொன்று செயற்பட்டு வருவதாகவும் அனுர குமார திஸாநாயக்க மேலும் கூறியுள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com