பொன்சேகாவின் கைது : இராணுவ , அரசியல் வியூகங்களா? உச்ச நீதிமன்றா? விருகோதரன்.
முன்னாள் இராணவத் தளபதியும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக களமிறங்கியிருந்த ஜெனரல் பொன்சேகா, ஜனாதிபதி மற்றும் அவரது சகோதர்களை கொன்றுவிட்டு நாட்டின் ஆட்சியை கைப்பற்ற சதி முயற்சிகளை மேற்கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இருவாரங்களை நெருங்கிக்கொண்டிருக்கின்றது. இக்கைதினை அடுத்து இராணுவப்புரட்சி, கொலைச்சதி, சட்டவிரோதக் கைது, அரசியல் பழிவாங்கல், ஜனநாயக மீறல் என்கின்ற சொற்பதங்கள் அதிகமாக பாவனையில் உள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இராணுவப் புரட்சி ஒன்றினை மேற்கொண்டு நாட்டின் தலைமையை ஜெனரல் பொன்சேகா கைப்பற்ற முனைந்திருந்தார் என்ற குற்றச்சாட்டுக்கள் தேர்தல் பிரச்சார மேடைகளில் அவரது எதிரணியினால் பேசப்பட்டுவந்தநிலையில் தேர்தலில் அவர் தோல்வியடைந்தால் அவர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டிருந்தபோதும், இராணுவச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார் என்பதை அனேகர் எதிர்பார்த்திருக்கவில்லை.
அத்துடன் அவர் கைது செய்யப்பட்டவிதம் மிகவும் விமர்சனத்திற்கு உரியதாகவுள்ளபோதும், அப்பன் வெட்டிய கிணறாகையால் அதில் உப்புத்தண்ணி என்ன நச்சுத் தண்ணி வந்தாலும் குடிப்போம் எனும் தரப்பினரால் நியாயம் கற்பிக்கப்படுவதையும் உணரமுடிகின்றது. ஜெனரல் பொன்சேகா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் உலகிலேயே பாரிய குற்றச்சாட்டுக்களாகும். தேசவிரோத குற்றச்சாட்டுக்கு உலகில் எங்குமே அதிகூடிய தண்டனைவழங்கப்படுவதும் அது குடிமக்களால் வரவேற்கப்படுவதும் மறந்து விட முடியாத ஒன்று.
ஆனால் இன்று பொன்சேகா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்க்களுக்கான ஆதாரங்களை தேடும் முயற்சியில் அரசாங்கம் தற்போதே ஈடுபட்டுள்ளதாக தெரிவிப்பதானது பலரதும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஆனால் ஜெனரல் பொன்சேகா அவ்வாறு செய்திருந்தால் அவருக்கு மரண தண்டனையோ அன்றில் பிரபாகரனுக்கு வழங்கியது போல் 200 வருட கடுழியசிறைத்தண்டனையோ வழங்கினாலும் அது ஏற்புடையதுவே. ஆனால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சிங்கப்பூர் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் ஜெனரல் பொன்சேகாவிற்கு 5 ஆண்டுகள் வரையான சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என தெரிவித்துள்ளார். எனவே பாதுகாப்பு செயலாளரின் கூற்றின் அடிப்படையில் அவர் பாரிய குற்றங்கள் எதனையும் செய்யவில்லை என்ற முடிவுக்கு வருவதா அன்றில் அவருக்கெதிரான குற்றச்சாட்டுக்களை நிருபிக்க அரசாங்கத்திடம் போதுமான ஆதாரங்கள் இல்லை எனக்கொள்வதா?
இங்கு சரத் பொன்சேகாவின் கைது சட்டத்திற்கு முரணானது எனவும், அவர் சிவில் நீதிமன்றில் விசாரிக்கப்படவேண்டும் என தடுத்துவைக்கப்பட்டுள்ள ஜெனரல் பொன்சேகாவும் அவரது ஆதரவாளர்களும் தெரிவிக்கின்றனர். இலங்கை இராணுவச் சட்டத்தின் பிரகாரம் இராணுவத்திலிருந்து ஒருவர் ஓய்வு பெற்றால், அவர் சேவையில் இருந்தகாலத்தில் ஏதாவது குற்றங்களைப் புரிந்துள்ளதாக ஓய்வு பெற்று ஆறுமாத காலத்தினுள் தெரியவந்தால் அவரை இராணுவச் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும்.
சரத் பொன்சேகா கடந்த 2009 ஆண்டு யூலை மாதம் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதாகவும் அவர் 2009 நவம்பர் முதல் அவர் பாதுகாப்பு படைகளின் சிரேஸ்ட அதிகாரியகவே கடமையாற்றியதாகவும் பொன்சேகா தரப்பினரின் வாதமாகவுள்ளது. ஆனால் பாதுகாப்பு படைகளின் சிரேஸ்ட அதிகாரி மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை சிவில் நீதிமன்று விசாரிக்குமா? அன்றில் இராணுவ நீதிமன்றில் எடுத்துக்கொள்ள முடியுமா? என்பது தொடர்பான சட்டச்சிக்கல் தோன்றியுள்ளது. ஜெனரல் பொன்சேகாவை தடுத்துவைத்துள்ளமை சட்டவிரோதமானது என அவரின் மனைவி தொடுத்துள்ள அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு எதிர்வரும் 23 ம் திகதி விசாரணைக்குவரும்போது இவ்விடயமே பிரதான விடயமாக வாதிடப்படும்.
பாதுகாப்பு படைகளின் பிரதானி நியமனத்திற்கான சுற்றுநிருபத்தில், அப்பதவிக்காக முப்படைகளிலிருந்து ஒருவரை நியமிக்கலாம் எனவும் , அவர் ஓய்வு பெற்றவராக இருக்க முடியாது எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே ஜெனரல் பொன்சேகா இராணுவத் தளபதி பதவியிலிருந்து விலத்தப்பட்டிருந்தாலும் அவர் தொடர்ந்தும் இராணுவத்திற்கு உட்பட்டவர் என்பதுவே இராணுவ தரப்புவாதமாக அமையவுள்ளது. மேற்படி இராணுவத்தரப்பு வாதத்திற்கு சாதகமான பதில் உச்ச நீதிமன்றிடமிருந்து கிடைத்தால் ஜெனரல் பொன்சேகாவை விசாரிப்பதற்காக முன்னாள் இராணுவத் தளபதிகளான ஜெனரல் றொஹான் தலுவத்த, ஜெனரல் சாந்த கொட்டாகொட உட்பட மூவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு அவரை இராணுவ நீதிமன்றில் விசாரிக்க முடியுமென்று தீர்ப்பு வழங்கப்பட்டாலும், மேற்படி குழுவினர் அவரை விசாரிக்க முடியுமா என்பதுவே அடுத்து கிளம்பவுள்ள கேள்வியாகும். காரணம் ஜெனரல் பொன்சேகா இலங்கை இராணுவ வரலாற்றில் 4 நட்சத்திர ஜெனரலாக சேவையில் இருந்தவர். அதன் அடிப்படையில் அவரை ஃபீல்ட் மாஸல்கள் அல்லது அவரிலும் பதவி முதிர்சி பெற்ற ஜெனரல்கள் விசாரிக்க முடியும். இலங்கை வரலாற்றில் ஃபீல்ட் மாஸல்கள் கிடையாது, சில ஜெனரல்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் ஓய்வு பெற்றபின்னர் ஜெனரல்களாக பதவி உயர்த்தப்பட்டவர்களே. எனவே இது விடயத்திலும் உச்ச நீதிமன்றே தீர்ப்புக்கூறவேண்டிவரும்.
அடுத்த ஜெனரல் இராணுத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தாலும் அவரது கைது இலங்கை இராணுவச் சட்டதிட்டங்களை மீறியதாகவே அமைந்துள்ளது. உயர் அதிகாரி ஒருவரை கைது செய்யும்போது அவரது பதிவியிலும் உயர்ந்த ஒருவராலேயே கைது செய்யமுடியும் என்பது இராணுவச் சட்டம். இவ்விடத்தில் அவருக்கு உயரிய மட்டத்தில் எவரும் இல்லாதபோது கைது செய்வதற்கு முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி ஒருவரை நியமிக்கமுடியும். ஆனால் ஜனாதிபதி ஜெனரல் பொன்சேகா கைது செய்யப்படும்வரை தனக்கு தெரியாது என தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்களிலிருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் ஜெனரல் பொன்சேகாவிற்கு எதிரான குற்றப்பத்திரிகைகள் சிவில் மற்றும் இராணுவ நீதிமன்றுகளில் தாக்கல் செய்யப்படுவதற்கு ஏற்பாடாகியுள்ளது. பிரதானமாக ஜெனரல் பொன்சேகாவிற்கு எதிராக சுமத்தப்படவுள்ள குற்றச்சாட்டுக்களில் அவரது மருமகனின் ஆயுத விநியோக கம்பனியில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட கம்பனியினால் மோசடி செய்யப்பட்டுள்ளதாக என்பது நிருபிக்கப்படாவிட்டாலும், இராணுவத்தின் ரெண்டர் போர்ட் தலைவராக இராணுவத் தளபதி இருக்கும் போது அவருடைய உறவுகள் எவரும் எவ்விதத்திலும் கொடுக்கல் வாங்கல்களில் பங்கு கொள்ளக்கூடாது என்பது நியதி. எனவே ஜெனரல் பொன்சேகா இராணுவத்தின் ரெண்டர் போர்ட் தலைவராக தனது குடும்ப அங்கத்தவர்ளுக்கு ரெண்டர்களை வழங்கி அதிகாரத் துஸ்பிரயோகம் செய்துள்ளார் என்ற விடயம் நிரூபிக்கப்படலாம். காரணம் ஹய் கோப் கம்பனிக்கும் தனது மருமகனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என ஜெனரல் பொன்சேகா தெரிவித்து வந்தாலும் அக்கம்பனி அவரது மருமகனுடையதே என நிருபிக்கப்படக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுவதாக தெரியவருகின்றது.
இவ்வாறான நிலையில் அரசியல் தலையீடுகள் அதிகரித்து வருவதுடன் ஜெனரல் பொன்சேகாவின் விடுதலை வேண்டி பல சாத்தீக போராட்டங்கள் வட கிழக்கு தவிர நாடுதழுவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது. ஆனால் ஜெனரல் பொன்சேகாவிற்கு ஆதரவாக குரல் கொடுக்க முன்வந்திருந்த நான்கு சபைகளையும் சேர்ந்த மகா சங்க தேரர்கள் தமது முயற்சியை கைவிட்டுள்ளனர். இதன் பின்னணி நிச்சயமாக ஜெனரல் பொன்சேகா மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் சில நிருபிக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் தேரர்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஜெனரல் பொன்சேகா சார்பாக அவரது மனைவி அனோமா பொன்சேகாவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீழல் வழக்கு எதிர்வரும் 23ம் திகதி விசாரணக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. உச்ச நீதிமன்றில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் முதலாவது பிரதிவாதியாக இராணுவத் தளபதி லெப் ஜெனரல் ஜகத் ஜெயசூரியா, இரண்டாவது பிரதிவாதியாக கொழும்பு பிரதேச பாதுப்பு பொறுப்பதிகாரியான மேஜர் ஜெனரல் சுமித் மானவடு, மூன்றாவது பிரதிவாதியாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, நான்காவது பிரதிவாதியாக பிரிகேடியர் விஜேசிறி, ஐந்தாவது பிரதிவாதியாக சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
ஜெனரல் பொன்சேகாவிற்கான குற்றப்பத்திரிகைகள் எப்போது தாக்கல் செய்யப்படும் என அரச தரப்பில் இருந்து எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை. சிங்கப்பூர் பத்திரிகைக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வழங்கிய பேட்டியில் அது ஆறு மாதங்கள் வரைச்செல்லலாம் என ஊகம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 23ம் திகதி விசாரணைக்கு வரும் மனித உரிமை மீறல் வழக்கின்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்வரை அவரை தற்காலிகமாக பிணையில் விடுவிப்பது தொடர்பாக ஆராயப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைமைகளும் உச்ச நீதிமன்றும் மோதிக்கொள்ளுமா என்பதை 23 ம் திகதி அறிந்து கொள்ளலாம்.
0 comments :
Post a Comment