Friday, February 5, 2010

பிரெஞ்சு பாராளுமன்றக் குழு பர்க்காவை தடை செய்ய வாதிடுகிறது

ஆறு மாத விவாதித்தற்கு பின்னர் ஜனவரி 26ம் திகதி பிரான்சில் பர்க்கா (இஸ்லாமியப் பெண்கள் தங்களது உடலையும் முகத்தையும் மறைத்துக் கொள்ள அணியும் மேலங்கி) அல்லது நிகப் மீது தடை ஏற்படுத்துவது பற்றி விசாரித்த ஒரு பாராளுமன்றக்குழு அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் சில இஸ்லாமியப் பெண்கள் அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் பொது அரங்குகளில் தலையில் இருந்து கால் வரை மறைக்கும் அங்கியை அணிவது சட்டவிரோதமாக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒரு பாராளுமன்ற தீர்மானம், பின்னர் ஒரு சட்டத்தை இயற்றி மருத்துவமனைகள், பள்ளிகள், பொதுப் போக்குவரத்து சேவைகள், பிற பொதுக் கட்டிடங்களில் எவரும் பர்க்கா அணிவது சட்டவிரோதம் என்று கூறப்பட வேண்டும் என்று அறிக்கை பரிந்துரைக்கிறது. "[பிரெஞ்சு] குடியரசின் மதிப்பீடுகளுக்கு பர்க்கா முரணானது" என்று அது கூறுவதுடன் இந்த தடை "வற்புறுத்தலுக்கு இலக்காகியுள்ள பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும்" என்றும் கூறுகிறது. பர்க்கா அணியும் எவருக்கும் வேலை அனுமதிகள், அரசியல் புகலிடம், வதிவிட ஆவணங்கள், பிரெஞ்சுக் குடியுரிமை ஆகியவை மறுக்கப்பட வேண்டும் என்றும் அது கூறுகிறது.

ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி கடந்த ஜூன் மாதம் வெர்சாய் மாளிகையில் பாராளுமன்றத்தின் இரு பிரிவுகளுக்கும் உரை நிகழ்த்தியபின் பாராளுமன்றக்குழு நிறுவப்பட்டது. "பிரான்ஸில் பர்க்காவிற்கு வரவேற்பு இல்லை" என்று சார்க்கோசி கூறி தடைக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்திருந்தார். பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் (PCF) ஒரு பிரதிநிதியும் வறிய லியோன் புறநகர் Venissieux ன் மேயருமான André Gerin தலைமையில் இருந்த குழுவில் பிரெஞ்சு அரசியல் ஸ்தாபனத்தின் இடதுகளும் வலதுகளும் பிரதிநிதிகளாக இருந்தனர்.

எல்லா பொது இடங்களிலும் உடனே தடை என்பதை குழு முன்வைக்கவில்லை; பிரான்சில் அரசியல், செய்தி ஊடக வட்டாரங்களில் பிரெஞ்சு அரசியலமைப்புச் சபை மற்றும் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றங்கள் அத்தகைய சட்டத்தை நிராகரிக்கும் என்று ஊகித்திருந்தன.

ஜனவரி 29 அன்று பிரெஞ்சு பிரதமர் பிரான்சுவா பியோன் அரசியலமைப்பு சபைக்கு அத்தகைய பர்க்கா எதிர்ப்புச் சட்டத்திற்கான வழிவகைகளை ஆராயுமாறு கோரினார். "ஒரு முழு மறைப்பு அங்கி மீது தடையை அனுமதிப்பதற்கான நீதித்துறை தீர்ப்புக்களை ஆராய்ந்து, அது இயன்ற அளவு பரந்த முறையில், திறமையுடன் கூட உள்ளதா என்பதை ஆராய வேண்டும்" என்று அவர் எழுதியிருந்தார்.

ஆளும் வலதுசாரிக் கட்சியான UMP யின் தேசிய சட்டமன்றத்தில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் அனைவரும் தெருக்கள், கடை மையங்கள் இன்னும் பிற பொது இடங்கள் என்று அனைத்துப் பொது இடங்களிலும் பர்க்காவை சட்டவிரோதமாக்குவதற்கு ஆதரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் தேசிய சட்டமன்றத்தில் UMP பெரும்பான்மையின் அவைத் தலைவரான François Copé, தான் ஒரு சட்டத்திற்கு முயலப்போவதாகவும் அது தெருக்களில் அத்தகைய அங்கி அணிவதைச் சட்டவிரோதமாக்கும் என்றும் அறிவித்திருந்தார். மீறுபவர்களுக்கு 750 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும் என்பது அதில் இருக்கும் என்று கூறியிருந்தார்.

ஒரு முழுத் தடையானது அரசியல் அமைப்பிற்கு விரோதமாக இருக்கும் என்ற கருத்தை Copé உதறித்தள்ளினார். வலதுசாரி நாளேடு La Figaro விற்கு ஜனவரி 29 அன்று கொடுத்த பேட்டியில் அவர் கூறியது: "ஒரு சில பொது இடங்களில் பர்க்கா மீது தடை என்பதுதாக செயல்படுத்துவதில் கணிசமான பிரச்சினைகளைக் கொடுக்கும் என எனக்குத் தோன்றுகிறது. அஞ்சல் நிலையத்திலும் மருத்துவமனையிலும் பர்க்கா சட்டவிரோதம், ஆனால் அண்டைப்பகுதியில் இருக்கும் பேக்கரியில் அப்படி இல்லை என்றால் அதை எப்படி விளக்க முடியும்? இதில் என்ன ஆபத்து உள்ளது என்பதை விளக்கும் தீர்மானம் பற்றி நாம் அனைவரும் உடன்பாடு காணவேண்டும், அதுவும் கூடப் போதாது."

பர்க்கா மீது எத்தகைய மற்றும் அனைத்துவிதத் தடைகளும் ஜனநாயக விரோதமாகவும் பிற்போக்குத்தனமாகவும் இருக்கும். அவை அரசியலமைப்பு முறையான மதச்சார்பற்ற தன்மையை மிதிப்பது போல் ஆகும். அதன்படி அரசாங்கம் மதங்களுக்கு எதிரான ஆதரவையோ எதிர்ப்பையோ காட்டக்கூடாது. இஸ்லாமிய பெண்கள் அணியும் மறைப்புக்களை சட்டவிரோதமாக்குவது ஒரு ஆபத்தான முன்னோடியை ஏற்படுத்தும். இதையட்டி அரசாங்கம் சட்டபூர்வமாக அனைத்துக் குடிமக்களையும் தங்கள் மத அல்லது சமூக நம்பிக்கைகளை மாற்றிக் கொள்ள செய்ய இயலும்.

இச்சட்டம் மக்களில் ஒரு சிறுபான்மையைத்தான் இலக்கு கொள்கிறது என்றாலும்--பிரான்சின் 5 மில்லியன் முஸ்லிம்களில் 2,000க்கும் குறைவு என்ற முறையில்--இது முழுத் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள்மீது ஒரு தாக்குதல் ஆகும். அரசாங்க நலன்களுக்கு எதிரானவை எனக் கருதப்படும் எவ்வித அரசியல் அல்லது மதம் என்ற கருத்துக்கள் அல்லது நடவடிக்கையின் மீது இலக்கு கொள்ளுவதற்கும் இது அஸ்திவாரங்களை அமைக்கும்.

இந்த தடை இனவெறி கொண்டது. நீண்ட காலமாக வேண்டுமென்றே முஸ்லிம் எதிர்ப்பு உணர்வுகளை தூண்டும் முயற்சிகளை அதிகப்படுத்தும் வகையில், பிரான்சில் மக்களை எதிர்கொண்டிருக்கும் சமூகப் பெருளாதாரப் பிரச்சினைகள் இலாப முறையினால் இல்லாமல் முஸ்லிம்களால் தோற்றுவிக்கப்படுகிறது என்ற கருத்தை வளர்க்கத்தான் உதவும். 2003-04ல் சார்க்கோசிக்கு முன்பு ஜனாதிபதியாக இருந்த ஜாக் சிராக் முஸ்லிம் பெண்கள் பள்ளிகளில் தலை மறைப்பு(பர்தா) அணிவதை தடுக்கும் சட்டத்தை இயற்றினார். அதற்கு முதலாளித்துவ "இடதுகளின்"பரந்த ஆதரவும் இருந்தது. அதன் இலக்கு வலதுசாரி சூழ்நிலையை ஏற்படுத்துதல் என்று இருந்தது. குறிப்பாக ஆசிரியர்களிடையே 2003 ஓய்வூதியக் குறைப்புக்களுக்கு எதிராக பரந்த முறையில் வேலைநிறுத்தங்கள் நடந்த பின்னராகும்.

தேசிய முன்னணி என்னும் நவ பாசிச அமைப்பின் Jean-Marie Le Pen பர்க்காவின் மீதான தடையை நடைமுறையிருக்கும் சட்டத்தின் மூலம் அமுலாக்குவதற்கான வேண்டுகோளுக்கு ஆதரவு கொடுத்தார். உண்மையில் பர்க்காவின் மீது தடை என்பது இப்பொழுது முழு அரசியல் வகையினரும் இதற்கு ஆதரவைக் கொடுத்துள்ளனர். இது எந்த அளவிற்கு பிரெஞ்சு முதலாளித்துவ அரசியல் வலதிற்கு ஆழமாக மாறியுள்ளது என்பதின் அடையாளம் ஆகும்.

ஆளும் வர்க்கங்கள் இந்தப் பிற்போக்குத்தன சட்டத்தை அதன் அரசியலமைப்பிற்கு ஏற்பட்டிருக்கும் தன்மை பற்றிய ஐயங்கள் வந்தபோதிலும், இயற்ற வேண்டும் என்ற கருத்து சர்வாதிகார ஆட்சியை நோக்கிச் செல்லுவதைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 2005ல் வறிய புறநகர்ப் பகுதிகளில் இளைஞர்களின் கலகங்களை எதிர்கொள்ளுகையில் அரசாங்கம் நெருக்கடி நிலைமையை அறிவித்தது--ஆரம்பத்தில் இது Le Pen ஆல் ஆலோசனை கூறப்பட்டது--இது மூன்று மாதங்களுக்கு அடிப்படையான சட்டரீதியான உரிமைகளை பெறுவது நிறுத்திவைக்கப்பட வேண்டும் என்பதாகும். PS மற்றும் PCF இரண்டும் இதற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தன.

சட்டத்தின் அரசியலமைப்பு நெறி அற்றதை பின்புலவழி, பாசாங்குத்தனத்தினால் ஒப்புக் கொண்டபின், அரசியல் ஸ்தாபனமானது முழு தடையா அல்லது அரசாங்கம் நடத்தும் பொது இடங்களிலா என்பது பற்றிய விவாதத்தில் குவிப்பு காட்டுகிறது. இத்தகைய வேறுபாடு பொருளற்றது. ஏனெனில் கல்வி, மருத்துவசதி மற்றய அடிப்படை போக்குவரத்து சேவை வாய்ப்பு எவருக்கேனும் மறுக்கப்படும் என்றால், நடைமுறையில் அது பொது வாழ்வில் தடை என்பது போல்தான் இருக்கும். இப்படிக் குறிப்பது ஒரு போலி சட்டக் கேடயத்தை ஒரு சட்டத்திற்கு, அதுவும் அரசியலமைப்பின் முதல் விதியை மீறுவதற்கு கொடுக்கிறது. அதாவது, "பிரான்ஸ் ஒரு பிரிக்கப்பட முடியாத குடியரசு, மத சார்பற்றது, ஜனநாயகமானது, சமூக உரிமைகள் கொண்டது. அனைத்துக் குடிமக்களுக்கும் வருதலின் ஆரம்ப இடம், இனம், மதம் ஆகிய வேறுபாடுகள் இல்லாமல் சட்டத்தின் முன் சம உரிமை உண்டு."

இது இயற்றப்பட்டுவிட்டால், இச்சட்டம் பிரான்சை ஜிம் கிரோ சகாப்தத்தில் அமெரிக்காவின் தெற்கு குடியேற்றங்களின் நவீன தோற்றம் போல் செய்துவிடும். அப்பொழுது அங்கு ஆபிரிக்க அமெரிக்கர்கள் அரசாங்கத்தால் துன்புறுத்தப்பட்டு பல பொது இடங்களுக்கும் பணிகளுக்கும் செல்ல முடியாமல் இருந்தது.

பர்க்காவின்மீது தடைக்கு "இடது" ஸ்தாபனமானது அதாவது PS, PCF ன் Gerin க்கு வெளிப்படையான ஆதரவான சில பிரிவுகள் உட்பட பரந்த ஆதரவு உள்ளது. Gerin உடைய பாராளுமன்றக் குழுவில் PS ம் பங்கு பெற்றது. ஆனால் அறிக்கை வெளியிடுவதற்கு முன்னதாக PS அந்த அமைப்பில் இருந்து, "தேசிய அடையாள விவாதம் மற்றும் Jean-François Copé முயற்சி ஆகியவற்றால் மாசுபடுத்தப்பட்டுவிட்டது" என்றுகூறி வெளியேறிவிட்டது.

PS எவ்வளவு சங்கடப்பட்டாலும், அதுவும் இந்த நவ பாசிச முயற்சியில் பங்கு கொண்டுள்ளது; இருந்தபோதிலும் அது கொள்கை அளவில் பர்க்காவிற்கு தடை என்பதற்கு ஆதரவை தெரிவிக்கிறது. ஜனவரி 31 அன்று, PS ன் முதன்மைச் செயலாளர் Martine Aubry, பிய்யோனை இந்த பர்க்கா தடையை எப்படி இயற்றலாம் என்று அரசியலமைப்புக் குழுவை கேட்டதற்கு பகிரங்கமாக பாராட்டியுள்ளார். விவாதத்தில் சற்று "அறிவார்ந்த தன்மையை" தான் கொண்டுவருவதாக Aubry கூறினார். பல முக்கிய PS உறுப்பினர்கள், குறிப்பாக Manuel Vallas என்னும் பிரதிநிதி உட்பட முழு தடையை விரும்புகின்றனர்.

பர்க்கா அணியும் பெண்கள் மீதான தாக்குதல் ஐரோப்பா முழுவதும் முற்றிலும் நேர்மையற்ற அடக்குமுறைக்கு எதிராக பெண்களை "பாதுகாத்தல்" என்ற மறைப்பில் நடைபெறுகிறது. ஜனவரி 30 ம் திகதியன்று இத்தாலியின் சமவாய்ப்புக்கள் மந்திரி விணீக்ஷீணீ Mara Carfagna, பெர்லுஸ்கோனி அரசாங்கம் பர்க்கா மீது தடைவிதிக்க முயலும் என்று அறிவித்தார். அதே தினம் டேனிஷ் அரசாங்கம் பர்க்கா முறை "முற்றிலும் நாட்டின் மதிப்புக்களுக்கு எதிரானது" என்று அறிவித்தார். அத்தகைய அங்கிகள் பள்ளிகள், பணிமனைகளில் தடைக்கு உட்படுத்த விதிகள் வேண்டும் என்று கூறினார்.

பர்க்கா தடைப் பிரச்சாரம், முஸ்லிம்கள் மற்றும் குடியேறுபவர்களுக்கு எதிரான ஐரோப்பா முழுவதும் உள்ள ஆத்திரமூட்டல் தன்மை, அடக்குமுறை நடவடிக்கைகளைப் போல், ஐரோப்பிய ஆளும் உயரடுக்கு தொழிலாள வர்க்கத்தை பிரிக்கும் நோக்கத்தைக் கொண்ட நனவுடன் கூடிய கொள்கை ஆகும்.

1 comment:

  1. இஸ்லாமிய பெண்கள் முகத்தை மறைக்க வேண்டுமென்று எந்த இஸ்லாம் சொன்னதோ தெரியவில்லை உலகத்தில் உள்ள சில இஸ்லாமிய பெண்கள் இப்படி நடந்து கொள்வதனால் இஸ்லாத்தை பற்றி தெரியாத சமூகத்திடம் இருந்து இஸ்லாம் பெண்களை அடிமையாக நடத்துகின்றது என்கிற தோற்றப்பாட்டை உண்டுபண்ணுகிறார்கள்.
    சவுதி அராபிய போன்ற சில நாடுகளில் அது கடைப்பிடிக்கபடுகிறது அது அவர்களது நாட்டு சட்டமே தவிரே இஸ்லாமிய சட்டமொன்றும் கிடையாது இதை புரிந்துகொண்டு இஸ்லாமிய பெண்கள் நடந்து கொள்வது நல்லது.

    ReplyDelete