Wednesday, February 3, 2010

சீன எச்சரிக்கை யு.எஸ். நிராகரித்துள்ளது - தலாய் லாமாவை ஒபாமா சந்திப்பார்.

திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமாவை சந்திக்கக் கூடாது என்று சீனா எச்சரித்துள்ளதை அமெரிக்கா நிராகரித்துள்ளது. மாறாக, திட்டமிட்டபடி தலாய் லாமாவை வெள்ளை மாளிகையில், அதிபர் பாரக் ஒபாமா சந்திப்பார் என வெள்ளை மாளிகை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

ஏற்கனவே தைவானுக்கு ஆயுதங்கள் அளித்ததால் அமெரிக்கா மீது கடும் கோபத்துடன் உள்ளது சீனா. இந்த நிலையில் அமெரிக்கா வந்துள்ள தலாய் லாமாவை, அதிபர் ஒபாமா சந்திப்பார் என்று கூறப்பட்டதால் அது மேலும் கோபமடைந்தது.

தலாய் லாமாவை ஒபாமா சந்திக்கக் கூடாது. மீறி சந்தித்தால், தைவானுக்கு ஆயுதங்கள் அளிக்கும் அமெரிக்க நிறுவனங்கள் மீது சீனாவில் கடும் தடைகள் விதிக்கப்படும் என்று சீனா எச்சரித்திருந்தது.

ஆனால் இதை வெள்ளை மாளிகை நிராகரித்துள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் பில் பர்டன் கூறுகையில், கடந்த ஆண்டு சீனாவுக்கு அதிபர் ஒபாமா சென்றிருந்தபோது தலாய் லாமாவை நான் சந்திப்பேன். அவரை சந்திப்பதில் ஆர்வமாக இருக்கிறேன் என்று சீனத் தலைவர்களிடம் தெளிவாக கூறியிருந்தார்.

அமெரிக்கா, சீனா இடையிலான உறவு முதிர்த்தி உடையதாக அமைய வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். பல்வேறு விஷயங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதிலும் ஆர்வமாக உள்ளோம் என்றார் பர்டன்.

தலாய் லாமாவை சந்திக்கக் கூடாது என்று உலக நாடுகளின் தலைவர்களை தொடர்ந்து சீனா மிரட்டி வருகிறது. குறிப்பாக கடந்த 2008ம் ஆண்டு திபெத்திய பகுதிகளில் மூண்ட பெரும வன்முறை, போராட்டங்களுக்குப் பின்னர் உலக நாடுகளின் தலைவர்கள் தலாய் லாமாவை சந்திக்க கூடாது என்பதை தீவிரமாக வலியுறுத்தி வருகிறது.

இதற்கு முன்பு அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் தலாய் லாமாவை சந்தித்தபோது அவருக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இருப்பினும் கண்டனத்தோடு நிறுத்திக் கொண்டு விட்டது.

ஆனால் ஒபாமா, தலாய் லாமாவை சந்தித்தால் அமெரிக்க நிறுவனங்கள் மீது தடை விதிப்போம் என எச்சரித்துள்ளதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் 6.4 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்குவது தொடர்பாக தைவானுடன் அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொண்டது. இது சீனாவை கடும் எரிச்சலில் ஆழ்த்தியுள்ளது. தைவானை தனது நாட்டின் ஒரு பகுதியாக அது கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

சீனாவிலிருந்து சட்டவிரோதமாக பிரிந்து சென்ற ஒரு மாகாணத்திற்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்குவதா என்று அது காட்டமாக கேட்டுள்ளது.

இந்த நிலையில்தான் தலாய் லாமாவின் அமெரிக்க பயணத்தால் சீனா மேலும் எரிச்சலாகியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com