Monday, February 15, 2010

பொன்சேகா விசாரணைக்கு ஒத்துழைப்பில்லை : வாய் திறக்க மறுத்துள்ளார்.

இராணுவ விசாரணையில் இருந்து வரும் இலங்கை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, விசாரணையின்போது வாய் திறக்க மறுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தடுப்புக்காவலிலுள்ள பொன்சேகா தன்னை இராணுவ நீதிமன்றில் விசாரிக்கமுடியாது என்றும் இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற தான் சாதாரண பொதுமகன் என்றும் வலியுறுத்தி வருகிறார்.

ஆனால் அவரை மூவர் அடங்கிய இராணுவ நீதிபதிகளின் முன்னால் விசாரணை செய்வதற்கு அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொன்சேகா மீதான விசாரணைகளை மேற்கொண்டு ஆதாரங்களை சேகரிக்கும் பொறுப்பை படைகளின் தளபதி தயா ரத்நாயக்கவிடம் ஒப்படைத்துள்ளார் இராணுவ தளபதி ஜகத் ஜெயசூரியா.

ஆனால், இராணுவ விசாரணைகளுக்கு தான் முகம் கொடுக்கப்போவதில்லை என்றும் தான் சாதாரண பொதுமகன் என்ற வகையில், தன்னை சிவில் நீதிமன்றத்திலேயே விசாரணை செய்யவேண்டும் என்று வலியுறுத்திவரும் பொன்சேகா, இராணுவ விசாரணைகள் தொடர்பில் இன்னமும் எந்த தகவலையும் வெளியிட மறுத்துவருகிறார்.

இதேவேளை, பொன்சேகா தொடர்பான ஆதாரங்களை சேகரித்த பின்னர், அவர் மீதான இராணுவ நீதிமன்ற விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு, முன்னாள் படைகளின் தளபதியும், விமானப்படை தளபதியுமான ரொஹான் குணதிலக்க தலைமையில், முன்னாள் இராணுவ தளபதிகளான ரொஹான் தளுவத்த மற்றும் சாத்த கோட்டேகொட ஆகியோர் அடஙகிய மூவர் அடங்கிய குழுவை நியமிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சகம் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் நபரை விசாரணை செய்வதற்கு, அவருக்கு சமமான அல்லது கூடுதலான தகுதியடைய அதிகாரிகள் கொண்ட குழுவினரையே நியமிக்கவேண்டும் என்ற சட்டத்திற்கேற்ப மேற்படி விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தடுப்புக்காவலிலுள்ள பொன்சேகா இராணுவ விசாரணைகளுக்கு எந்த பதிலும் அளிப்பதில்லை என்று விடாப்பிடியிலிருப்பதால், அவர் தொடர்ந்து இந்த நிலைப்பாட்டை கடைப்பிடித்தால், என்ன நடவடிக்கை எடுப்பது என்பதில் பாதுகாப்பு அமைச்சக மட்டத்தில் சட்டக் குழப்பநிலை காணப்படுவதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment