Monday, February 1, 2010

ஈபிடிபி யின் காடைத்தனம். சோசலிச சமத்துவக் கட்சி கண்டனம்.

கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்று முடிந்த தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு யாழ் தீவுப்பகுதியில் அதிக வாக்குகள் கிடைக்காததையடுத்து அப்பகுதியில் நிலைகொண்டுள்ள ஈபிடிபியினர் அங்குள்ள மக்களை தாக்கி துன்புறத்தியுள்ளதாக சோசலிச சமத்துவக் கட்சியின் உத்தியோக பூர்வ இணையத்தளம் கண்டித்துள்ளது.

அவ்விணையத்தில், மிகவும் கொடுரமான தாக்குதலை மேற்கொண்ட ஈபிடிபி யினர் சிறுவர், பெண்கள், வயோதிபர் என எவ்வித பாராபட்சமும் இன்றி கண்மூடித்தனமாக தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 28ம் திகதி பிற்பகல் 5 மணியளவில் ஹைஎஸ் வானொன்றில் ஆயுதங்கள் , பொல்லுகள் தடிகள் சகிதம் அம்பிகைநகர், செட்டிபுலம், வேலணை நாலாம் வட்டாரம், துறையூர், புளியங்கூடல் ஆகிய தீவுப்பகுதியில் உள்ள வறிய கிராமங்களுக்கு சென்ற ஈபிடிபி யினர் அம்மக்கள் வாக்களிக்க தவறியதாக அவர்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர். அத்தருணத்தில் தாம் வாக்களிக்கச் சென்றதாக தமது கைவிரலில் இருந்த மை அடையாளங்களை மக்கள் காட்டியுள்ளனர். அவ்வாறு மை அடையாளங்களை காட்டிய மக்களுக்கு நீங்கள் பொன்சேகாவிற்கும் , கத்திரிகோல் சின்னத்திற்குமே வாக்களித்துள்ளனர் என அவர்கள் மீது தாக்கியுள்ளனர் என அவ்விணையம் மேலும் தெரிவிக்கின்றது.

அக்கிராமங்களில் தாக்கப்பட்டுள்ள நபர்களுக்கு தாக்குதல்தாரிகள் ஈபிடிபி யினர் எனவும் அவர்களது பெயர் விபரங்கள் தெரிந்திருந்தும் , பொலிஸ் நிலையத்திற்கோ அன்றில் வைத்தியசாலைக்கோ சென்றால் தாம் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாவோம் என்ற பயத்தில் அவர்கள் உள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment