Friday, February 5, 2010

நளினி விடுதலை வழக்கு: சுப்ரமணிய சுவாமிக்கு நீதிமன்றம் கடும் கண்டனம்

இராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாகவுள்ள நளினி விடுதலை வழக்கில், நீதிமன்றத்திற்கு வெளியே வழக்கு குறித்து பேட்டி அளித்த சுப்ரமணிய சுவாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

19 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரி நளினி தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எலுப்பி தர்மராவ், பால் வசந்தகுமார் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் தானே நீதிமன்றத்தில் நேர் நின்று வாதிடப்போவதாக நளினி கூறியிருந்தார். நளினியை விடுவிக்கக் கூடாது என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்துள்ளார். சுப்ரமணிய சுவாமி சார்பில் வழக்கறிஞர் ராஜகோபால் ஆஜரானார்.

நீதிமன்றம் வந்து தனக்காக வாதிட நளினியை அனுமதிக்கக் கூடாது என்று ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் சுப்ரமணிய சுவாமி அளித்த பேட்டிக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இன்று காலை வந்த தி இந்து நாளிதழை நீங்கள் பார்த்தீர்களா? என்று சுப்ரமணிய சுவாமியின் வழக்கறிஞரைப் பார்த்து கேட்ட நீதிபதிகள், நீதிமன்றம் வர நளினியை அனுமதிக்கக் கூடாது என்று சொல்வதற்கு சுப்ரமணிய சுவாமி யார்? என்று நீதிபதி தர்மராவ் கேள்வி எழுப்பினார்.

நளினி விடுதலை தொடர்பாக வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. இதில் தன்னையும் சேர்த்துக் கொண்டுள்ள சுப்ரமணிய சுவாமி, அது குறித்து நீதிமன்றத்திற்கு வெளியே ஊடகங்களுக்கு எவ்வாறு பேட்டியளிக்கலாம் என்றும் நீதிபதிகள் வினவினர். இப்படிப்பட்ட செயல்பாடுகள் நீதிமன்ற அவமதிப்பு ஆகும் என்று உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்ட நீதிபதிகள், சுப்ரமணியம் சுவாமிக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

சுப்ரமணிய சுவாமி சார்பாக வாதிட்ட வழக்கறிஞ்சர் ராஜகோபால், அவர் சார்பாக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக நீதிபதிகளுக்குத் தெரிவித்தார். அதன் பிறகு விசாரணைத் தொடர்ந்தது.

அறிக்கை இன்னும் வரவில்லை!

நளினியை விடுதலை செய்வது தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான ஆலோசனைக் குழு அனுப்பிய அறிக்கை இன்னும் அரசிற்கு வந்து சேரவில்லை என்று அரசு வழக்கறிஞ்சர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

ஆலோசனைக் குழு அறிக்கை கடந்த 2ஆம் தேதியே அரசுக்கு அனுப்பிவிட்டதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கு விசாரணை புத‌ன்‌கிழமை‌க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment