Thursday, February 11, 2010

கோத்தபாயவின் குற்றச்சாட்டை நோர்வே மற்றும் அமெரிக்கா நிராகரித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் நோர்வே மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஜனாதிபதி தேர்தலின் போது ஜெனரல் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்கியதாகவும் அவரின் தேர்தல் பிச்சாரங்களுக்காக பெருந்தொகைப் பணத்தினை வழங்கியிருந்தாகவும் தெரிவித்திருந்த கருத்தினை அந்நாடுகள் இரண்டும் உத்தியோகபூர்மாக நிராகரித்துள்ளது.

சிங்கப்பூர் ஸ்ரேய்ட ரைம்ஸ் பத்திரிகைக்கு அவர் வழங்கிய நேர்காணலில், தேச துரோக செயலில் ஈடுபட்டதற்காக ராணுவ கோர்ட் விசாரணைக்குட்பட்டுள்ள முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என அவர் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாட்டில் ராணுவ ஆட்சியை கொண்டு வர பொன்சேகா திட்டமிட்டிருந்தார் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அமெரிக்காவும், நோர்வேயும் தீவிர ஆதரவு தெரிவித்திருந்தன.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெல்ல பொன்சேகா முக்கியப் பங்காற்றினார் என்பது சுத்தப் பொய். இவர் இல்லாவிட்டால் இன்னொருவரை வைத்து நாங்கள் வென்றிருப்போம். இவரை விட திறமையான அதிகாரிகள் எங்களிடம் உள்ளனர்.

ராணுவச் சட்டத்தின்படி பொன்சேகா விசாரிக்கப்படுவார். ராணுவத்தை விட்டு விலகிய ஆறு மாதங்களுக்குள் ஒரு அதிகாரி மீது குற்றம் சாட்டபட்டால் அவரை ராணுவச் சட்டத்தின் கீழ் விசாரிக்க முடியும்.

விரைவில் ராணுவ நீதிமன்றம் விசாரணைகளை ஆரம்பிக்கும். அதற்கு முன்பு அவருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி விடுவோம். இந்த விசாரணை எவ்வளவு காலம் நடைபெறும் என்று எனக்குத் தெரியாது. அது வக்கீல்களைப் பொறுத்தது. இருப்பினும் இதை விரைவாக முடிக்க விரும்புகிறோம். ஆறு மாதங்களுக்குள் முடியலாம்.

பொன்சேகா மீதான குற்றச்சாட்டுக்கள் கடுமையானவை. எனவே அவர் ஐந்து ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.

கூட்டுப் படைத் தலைவராக இருந்தபோதே, பொன்சேகா அரசியல் தலைவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டார். அது முற்றிலும் சட்டவிரோதமாகும். இது தேச துரோக செயலும் ஆகும்.

ராணுவ ஆட்சிக்காக அவர் திட்டமிட்டு வந்தார். ஜனநாயக முறைப்படியான அரசியலை ஒதுக்கி விட்டு சர்வாதிகார ஆட்சிக்கு அவர் திட்டமிட்டு வந்தார்.

ராணுவத் தளபதியாக இருந்த கடைசிக் காலத்தில், தனக்கு ஆதரவான ராணுவ அதிகாரிகளையும், படைப் பிரிவினரையும் கொழும்புக்குக் கொண்டு வந்து வைத்தார். அவர் ராணுவப் புரட்சிக்குத் திட்டமிட்டதையே இது காட்டுகிறது.

சிங்களப் பத்திரிக்கையாளர் லசந்தா விக்கிரமதுங்கே கொலையிலும் கூட பொன்சேகாவுக்குத் தொடர்பு உள்ளது சூழ்நிலைகளைப் பார்த்தால் அது புரியும். லசந்தாஇ பொன்சேகாவை விமர்சித்தவர். என்னையோ அல்லது அதிபரையோ விமர்சித்த எந்தப் பத்திரிக்கையாளருக்கும் எதுவும் ஆகவில்லை.

லசந்தாவைக் கொல்ல யாரை பொன்சேகா பயன்படுத்தினார் என்பது குறித்து துப்பு கிடைத்துள்ளது. அது மட்டுமல்லாமல் 6 பத்திரிக்கையாளர்கள் காணாமல் போன விவகாரத்திலும் கூட பொன்சேகாவுக்குத் தொடர்பு உள்ளதாக நான் அறிகிறேன். விரைவில் உண்மை வெளி வரும்

சில மேற்கக்திய நாடுகளும் பொன்சேகாவுக்கு உடந்தையாக இருந்தன. உள்நோக்கத்துடன் அவை பொன்சேகாவுக்கு ஆதரவு கொடுத்து வந்தன. அமெரிக்கா, நோர்வே ஆகிய நாடுகள் பொன்சேகா பிரசாரத்துக்காக பெருமளவில் பணமும் கொடுத்து உதவியுள்ளன.

அரசுக்கு எதிராக எழுதுமாறு கூறி பல பத்திரிக்கையாளர்களுக்கு நோர்வே அரசு பணம் கொடுத்தற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. பல்வேறு வழிகளில் இலங்கையை நிர்மூலமாக்கவும், புலிகளுக்கு உதவவும் நார்வே முயன்று வந்தது. அதேபோலத்தான் பொன்சேகாவையும் அவர்கள் ஆதரித்தனர்.

மேற்படி குற்றச்சாட்டுகளை முற்றாக மறுதலித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் இது தொடர்பாக விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, அமெரிக்க அரசு ஜெனரல் பொன்சேகாவிற்கு நிதிஉதவி செய்திருப்பதாக தெரிவித்துள்ள கூற்றில் எவ்வித உண்மையும் இல்லை எனவும், அமெரிக்க இராஜாங்க செயலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுபோல் நாம் எந்த வேட்பாளருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை எனவும் மாறாக நீதியானதும் , நேர்மையானதுமான தேர்தல் ஒன்றையே வலியுறுத்தியிருந்தோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதேநேரம் நோர்வேயின் வெளிநாட்டு அலுவகள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நோர்வே நாட்டின் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டானது உண்மைக்கு புறப்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நோர்வே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாடொன்றின் உள்நாட்டு தேர்தல்களில் தலைபோட்டதில்லை , போடாது எனவும் நாட்டு மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட தலைவரொருவரை குறைத்து மதிப்பிடவும் அவரை ஆட்சியில் இருந்து துரத்தவும் நோர்வே எத்தனிக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையினை இலங்கைக்கான நோர்வே தூதுவர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார் என அறியமுடிகின்றது.

1 comments :

Anonymous ,  February 11, 2010 at 7:54 PM  

If the defence secretary has enough evidences,it would be easy for him to go for a prove.It gives an unpleasant feeling if the other countries unnecssarily interfering into the matters of srilanka

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com