Tuesday, February 2, 2010

ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்: தலைவராக இந்தியர் நியமனம்

இந்தியாவைச் சேர்ந்த சலீல் ஷெட்டி சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பான ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். வருகிற ஜூன் மாதம் தனது பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார் ஷெட்டி. தற்போதைய தலைவரான ஐரீன் கான், எட்டு ஆண்டு பணிக்குப் பின்னர் டிசம்பர் 31ம் தேதியுடன் பதவியிலிருந்து விலகினார்.

கடந்த 1961ம் ஆண்டு லண்டனில் தொடங்கப்பட்டது ஆம்னஸ்டி இன்டர்நேஷனல். இதில் 150 நாடுகளைச் சேர்ந்த 20.2 லட்சம் பேர் உறுப்பினர்களாகவும், ஆதரவாளர்களாகவும் உள்ளனர்.

உலகளாவிய மனித உரிமைகள் கண்காணிப்பகமாக ஆம்னஸ்டி செயல்பட்டு வருகிறது. அரசு சாரா மற்றும் அரசு தொடர்பான துறைகளில் பல காலம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஷெட்டி.

ஷெட்டி நியமனம் குறித்து ஆம்னஸ்டியின் செயல் கமிட்டி தலைவர் பீட்டர் பேக் கூறுகையில், சலீல் ஷெட்டியின் வரவு எங்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது என்றார்.

தனது நியமனம் குறித்து ஷெட்டி கூறுகையில், இது மிகப் பெரிய, அரிய வாய்ப்பு. இதை ஏற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். முன்பை விட இப்போது மனித உரிமைகளைக் காப்பதில் மிகுந்த கவனத்துடனும், தீவிரமாகவும் செயல்பட வேண்டியுள்ளது என்றார்.

ஆம்னஸ்டி அமைப்பின் தலைவர் பொறுப்புக்கு வரும் முதல் இந்தியர் ஷெட்டி. இவர் ஏற்கனவே ஐ.நா. மில்லனியம் திட்டத்தின் தலைவராக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. (டிஎன்எஸ்)

No comments:

Post a Comment