Tuesday, February 2, 2010

அபிவிருத்தியும் சமாதானமும் நாட்டின் அவசிய தேவைகள்.

தேர்தல்களில் வெற்றியும் தோல்வியும் சகஜம். தோல்வி அடைபவர்கள் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு அமைதியாகத் தங்கள் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பது தான் நியாயமானது. ஆனால் இலங்கையின் தேர்தல் வரலாறு இவ்வாறாக இல்லை.
தோல்வி அடைந்தவர்கள் தங்கள் தோல்வியை நியாயப்படுத்துவதற்காக நொண்டிச் சாட்டுகள் கூறுவது வழமையாகிவிட்டது. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலிலும் இதே கதைதான்.

தோல்வியை நியாயப்படுத்துவதற்காக எதிரணித் தலை வர்கள் பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார்கள். தேர்தல் நியாயமாக நடைபெற்றது என முன்னர் கூறிய எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்ஹ இப்போது முறைகேடுகள் இடம்பெற்றதாகக் குத்துக்கரணம் அடிக்கின்றார்.

ஏனைய எதிரணித் தலைவர்களும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார்கள். ஆனால் இக்குற்றச்சாட்டுகள் எல்லாம் ஒரே மாதிரியானவையாக இல்லை. அரச ஊடகங்கள் பக்கச் சார்பாகவும் தேர்தல் விதிகளை மீறியும் நடந்து கொண்டன என்பது சிலரது குற்றச்சாட்டு. கணனியைப் பயன்படுத்தித் தேர்தல் முடிவுகள் மாற்றப்பட்டுள்ளன என்பது இன்னொரு சாராரின் குற்றச்சாட்டு.

வாக்குகள் எண்ணும் நிலையங்களில் முறை கேடுகள் இடம்பெற்றதாக வேறு சிலர் கூறுகின்றனர். தோல்வியை நியாயப்படுத்த ஏதாவதொரு காரணம் கூறியாக வேண்டும் என்பதால் ஒவ்வொருவரும் மனம்போன போக்கில் கூறுகின்றார்கள் என்பது தான் உண்மை.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதினெட்டு லட்சத்துக்கு மேற்பட்ட பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். இவ்வளவு கூடுதலான பெரும்பான்மை முறைகேடுகளால் கிடைத்தது என் பதைச் சிறு பிள்ளைகள் கூட நம்பப்போவதில்லை. மக்களின் மனோநிலை எவ்வாறாக உள்ள தென்பதைச் சரியாக ‘நாடி பிடிக்க’ முடியாததால் வெற்றியை எதிர்பார்த்த எதிரணியினர் தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் நொண்டிக் காரணங்களைக் கூறுகின்றார்கள்.

பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து நாட்டை மீட்டெடு ப்பதற்கு மூன்று வருடங்களுக்கு மேற்பட்ட காலம் செலவாகியது. மூன்று தசாப்தங்களாகக் கோரதாண்டவம் ஆடிய பயங்கரவாதத்தினால் நாட்டின் அபிவிருத்தியும் சமாதானமும் பெருமளவில் தடைப்பட்டன.

பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அரசியல் தலைமை வழங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் மற்றைய முக்கிய பணிகளான அபிவிருத்தியையும் சமாதானத்தையும் ஒப்படைக்கும் மனோநிலையிலேயே மக்கள் இருந்தனர்.

அதற்கேற்றவாறு அவர்கள் தங்கள் வாக்குகளை அளித்தனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது பதவிக் காலத்தில் அப்பணியைப் பூர்த்தி செய்வார் என்ற நம்பிக்கை மக்களுக்கு உண்டு.

நாட்டுக்கு இன்று தேவைப்படுவது அபிவிருத்தியும் சமாதானமும். ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலில் இவை முன்னுரிமை பெறுகின்றன. இவ்விரு பணிக ளையும் நிறைவேற்றுவதில் மக்கள் என்றும் ஜனாதிபதியின் பக்கம் நிற்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

No comments:

Post a Comment