மொரோக்கோ பள்ளிவாசலில் தூபி இடிந்து பலர் மரணம்
மொரோக்கோவின் மெக்னஸ் நகரப் பள்ளிவாசலின் தூபி இடிந்து விழுந்ததில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வெள்ளிக்கிழமையன்று தொழுகை நேரத்தில் பெர்டியின் பள்ளிவாசலில் நடந்த இந்த விபத்தில் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக மொரோக்கோ தொலைக்காட்சி தெரிவித்தது.
மெக்னஸ் நகரில் கடந்த சில நாட்களாகக் கனத்த மழை பெய்ததாகவும், அதன்பிறகே தூபி இடிந்து விழுந்ததாகவும் தொலைக்காட்சி செய்தி குறிப்பிட்டது. பள்ளிவாசலின் தூபி நான்கு நூற்றாண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது.
இடிந்து விழுந்த தூபிக்குக் கீழே ஏராளமானோர் புதைந்து கிடப்பதாகவும் கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமை மதிய நேரத் தொழுகைக்காகப் பள்ளிவாசலில் சுமார் 300 பேர் கூடியிருந்தபோது தூபி இடிந்து விழுந்ததாக கலீது ரஹ்மோனி என்பவர் ராய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
மொரோக்கோவில் கவனிப்பாரின்றி கிடக்கும் கட்டடங்கள் சில அடிக்கடி இடிந்து விழுவதுண்டு. ஆனால் தூபி இடிந்து விழுவது அரிது என்று கூறப்படுகிறது. இடிந்து விழுந்த தூபியை மறுபடியும் கட்டுமாறு மன்னர் முகம்மது VI உத்தரவிட்டிருக்கிறார். யுனெஸ்கோவின் உலக மரபுடைமைப் பட்டியலில் மெக்னஸ் நகரமும் இடம்பெறுகிறது
0 comments :
Post a Comment