Tuesday, February 9, 2010

ஜெனரல் பொன்சேகாவின் கைது சட்ட ரீதியானதா? எழும் கண்டனங்களின் பார்வையில்.

நாட்டின் ஜனாதிபதியை யும் அவரது சகோதரர்களையும் கொன்று ஆட்சியை கைப்பற்ற முயன்றார், இராணுவத்தில் இருந்தபோது அரசியலில் ஈடுபட்டார், இராணுவத்தினுள் பிளவுகளை ஏற்படுத்தினார் என்ற பல குற்றச்சாட்டுக்களின் பேரில் ஜெனரல் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளதாக அரசு சார்பாக பேசவல்ல பல்வேறு அதிகாரிகள் , அரசியல்வாதிகள் நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளனர்.

ஆனால் இலங்கையின் அரசமைப்பின்கீழ் பேச்சாளர்களாக உள்ளோர் தாம் கூறிய விடயங்களை பல தடவைகளில் வாபஸ் பெற்றுள்ளமையையும் , பின்னர் தாம் கூறிய கருத்துக்கு மாறான கருத்துக்களை வெளியிடுவதையும் நோக்கும் போது, ஜெனரல் பொன்சேகா நீதிமன்றொன்றில் நிறுத்தப்பட்டு அவருக்கெதிரான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்வரை அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் அனுமானங்களாகவே இருக்கப்போகின்றது.

ஜெனரல் பொன்சேகாவின் கைதானது பல தரப்பினரை வாயடைக்க செய்துள்ளதுடன், சிலர் தமது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். குறிப்பாக அண்டைய நாடுகள் இதுவரை கைதினை கண்டுகொள்ளாதற்கான காரணம் உள்வீட்டு விவகாரங்களில் புலிகளின் ஒழிவிற்கு பின்னர் நாம் தலையிடமாட்டோம் என்ற சபதமாகவும் இருக்கலாம்.

கைது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கூறிய ஜெனரல் பொன்சேகாவின் பாரியார் அனோமா, தனது கணவன் கடத்தப்பட்டுள்ளதாக கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், 'எனது கணவர் ஒரு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியாவார். அவரை இராணுவச் சட்டத்தின்படி கைது செய்ய முடியாது. எனக்கும் இராணுவச் சட்டம் தெரியும். அவ்வாறு அவரைக் கைது செய்ய வேண்டுமெனில் போலீஸாரே கைது செய்ய வேண்டும்.

எனது கணவர் கைது செய்யப்படவில்லை கடத்தப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. நேற்றிரவு நடந்த இச்சம்பவத்திற்குப் பின் இதுவரை அவர் பற்றிய எந்தகவலும் இல்லை. அவரின் மனைவியான எனக்கு அவர் பற்றிய தகவல்களை அறிய முடியவில்லை. அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார்? யாரின் பொறுப்பிலுள்ளார் போன்ற விபரங்கள் எதுவும் தெரியவில்லை. எனவே அவர் கடத்தப்பட்டுள்ளார் என்றே கருதுகிறேன்.

எனது கணவர் இராணுவ சீருடை அணிந்திருந்த நிலையில் அரசியல் செய்யவில்லை. அரசியல் பேசவுமில்லை. அவர் ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது அவரை இராணுவச் சட்டத்தின்படி கைது செய்ய முடியாது. அப்படி செய்வதாயின் போலீஸாராலேயே கைது செய்ய முடியும்.

அத்துடன் இராணுவச் சட்டப்படி கைது செய்வதாயினும் எனது கணவருக்கு மேலுள்ள ஒரு அதிகாரியினாலேயே மிகவும் கௌரவமாகக் கைது செய்யப்பட வேண்டும். நேற்று எனது கணவர் ஒரு மிருகத்தைப் போன்று நடத்தப்பட்டார். மிகவும் கீழ்த்தரமாக நடாத்தப்பட்டார். ஒரு மேஜர் ஜெனரல் இதைச் செய்தார்.

எனது கணவர் இந்நாட்டில் இருந்த கொடிய யுத்தத்தை மிகவும் துணிவுடன் முன்னின்று முடித்து வைத்தார் அதற்கு கிடைத்துள்ள பரிசுதான் இது. அரசு தேர்தலில் வெற்றி பெற்றால் அதை இப்படியா கீழ்த்தரமான முறையில் கொண்டாடுவது? எனவே நான் இந்நாட்டின் சகல பெண்களிடமும் கேட்கின்றேன். எழுந்து முன்னுக்கு வாருங்கள். அணிதிரண்டு வாருங்கள். விடுதலைக்காகப் போராடுவோம்.

இன்று என் கணவருக்கு நடந்தது நாளை உங்கள் கணவருக்கு, தந்தைக்கு அல்லது சகோதரனுக்கு நடக்கலாம். எனது கணவர் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளான பின்னர் அதனால் ஏற்பட்ட விழைவுகளால் தினமும் மாத்திரை மருந்து பாவிப்பவர். தொடர்ந்து பாவிக்க வேண்டும். ஆனால் அதற்கான வசதிகளும் செய்து கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது ' என்று மேலும் தெரிவித்தார்.

இவ்வாறு மிகுந்த சோகத்துடன் அவர் தனது நிலைப்பாட்டை வெளியிட்டு தனது கணவன் காணாமல் போயுள்ளதாக அல்லது கடத்தப்பட்டுள்தாகவே கரு முடிந்துள்ளது என தெரிவித்துள்ள நிலையில், ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டு பாதுகாப்பாக சகல வசதிகளுடனும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் தடுத்து வைக்கபட்டுள்ள இடம் இரகசியமாகவே பேணப்படும் என இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

இக்கைதானது முற்றிலும் சட்டவிரோதமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க என பிபிசி க்கு தெரிவித்துள்ளார்.

அவர் பிபிசி யிடம் பேசுகையில் , இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்துள்ளது சட்டவிரோதமானது, ஜனநாயகத்துக்கு எதிரானது எனவும் அவரது கைது இராணுவச் சட்டங்களுக்கு எதிரானது மட்டுமல்ல நாட்டின் பொதுவான சட்டங்களுக்கும் எதிரானது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், 'சரத் பொன்சேகாவின் கைது என்பது நாட்டின் அரசியல் சாசனத்தை மீறும் ஒரு செயல். அவர் கைது செய்யப்பட்டுள்ளதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். இதுகுறித்து பலதரப்பினருடனும் நான் பேசி வருகின்றேன். அனைவரும் இதே கருத்தைக் கொண்டுள்ளனர்.

இது சில இராணுவ அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஜனநாயக விரோதச் செயல். அவர் மீது ஏதாவது குற்றசாட்டுக்கள் இருந்தால், அவை வழக்கமான நடைமுறைப்படி நீதிமன்றங்கள் முன்னால் விசாரிக்கப்பட வேண்டும்.

இராணுவச் சட்டங்களின் கீழ் இந்தச் செயல் மேற்கொள்ளப்படுகிறது என்று கூறுவதே சட்ட விரோதமானது. நடு இரவில் ஒருவரை கைது செய்வது என்பது அடிப்படை உரிமைகளை மீறும் ஒரு செயல்.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் கைது நாட்டில் மேலும் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். உலகம் முழுவதிலுமிருந்து இதற்கு கண்டனம் எழுப்பப்படும்.

ஓய்வு பெற்ற இராணுவத் தளபதியை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது முறையற்றது.
போர்க் குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணை வருமானால், சாட்சியம் அளிக்கத் தயார் என சரத் பொன்சேகா தெரிவித்தது கூட அவரது கைதுக்குக் காரணமாக இருக்கலாம்' என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிபிசியிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஜெனரல் பொன்சேகாவை இராணுவ நீதிமன்றில் விசாரிக்க முடியாது என்ற குற்றச்சாட்டு அரச தரப்பினரால் மறுதலிக்கப்பட்டிருக்கின்றது. ஓய்வு பெற்ற இராணுவ தளபதி ஒருவரை அவர் ஓய்வு பெற்று 6 மாத காலத்தினுள் இராணுவ நீதிமன்றில் விசாரிக்க இராணவச் சட்டத்தில் இடமுண்டு என அமைச்சர் ஹெகெலிய ரம்புக்வல தெரிவித்துள்ளார்.

இக்கைது இடம்பெற்றபோது உடனிருந்தவர்களில் இருவர் ஜெனரல் பொன்சேகா மிகவும் கீழ்தரமான முறையில் நடாத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை கைது செய்த இலங்கை இராணுவ போலீஸார், அவரை ஒரு நாயைப் போன்று தரதரவென இழுத்துச் சென்றதாக மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

பொன்சேகா, அவரது அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்ட போது உடனிருந்த மனோ கணேசன் எம்.பி., நடந்த சம்பவம் குறித்து கூறியதாவது: 'நாங்கள் எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான வியூகம் குறித்து பொன்சேகாவுடன் பேசிக் கொண்டிருந்த நேரம் திடீரென அலுவலகத்தை உடைத்துக் கொண்டு இராணுவத்தினர் புகுந்தனர். எவ்வித கேள்வியும் இன்றி பொன்சேகாவை தரதரவென பலவந்தமாக இழுத்துச் சென்றனர். முன்னர் 'பயங்கரவாதிகள்' என்ற பெயரில் சந்தேக நபரை இழுத்துச் செல்வதுபோல அவரைக் கொண்டு சென்றனர்.

'நாங்கள் அதை ஆட்சேபித்தோம். தடுக்க முடியவில்லை. தன்மைக் கைது செய்வதானால் சிவில் பொலீஸ் மூலம் கைது செய்யும்படி பொன்சேகா கூறியதைக் கூட அவர்கள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. சிவில் பொலீஸார் வராமல் நான் வரமாட்டேன் என்று பொன்சேகா கூறியதும், வந்திருந்த இராணுவத்தினர் பாய்ந்து கைகளிலும், கால்களிலும் அவரைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துச் சென்றனர்.

இவ்வளவும் பொன்சேகாவின் அலுவலகத்தில் முதல் மாடியில் இடம்பெற்றன. இராணுவத்தினர் இழுத்துச் செல்ல முயன்ற போது பொன்சேகா திமிறினார். இழுத்துச் சென்ற படையினரில் ஒருவர் பொன்சேகாவின் பிடரியில் கைகளால் அடித்ததையும் கூடக் கண்டேன்.

அவரைத் தரதரவென இழுத்துச் சென்றசமயம் அவர் கால்களை உதறினார். அவரது கால்கள் பட்டு ஒரு ஜன்னல் கண்ணாடி கூட உடைந்தது. நாயை இழுத்துச் செல்வது போல இழுத்துச் சென்று கீழ் தளத்தில் வைத்து கைகளில் விலங்கிட்டு அவரைக் கொண்டு சென்றனர்.

இராணுவத்தினர் நடந்துகொண்ட விதம் மிக மிகக் கேவலமானது அநாகரிகமானது. பொன்சேகாவுடன் அவரது ஊடகச் செயலாளர் சேனக டி சில்வாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொன்சேகாவின் அலுவலகத்துக்குள் அத்து மீறி இராணுவத்தினர் பாய்ந்தபோதே எம்.பிக்களான எங்களின் மெய்க்காவலர்களின் ஆயுதங்களையும் அவர்கள் பறித்து விட்டனர்.

அவரை அங்கிருந்து கொண்டு சென்ற பின்னரும் சுமார் அரைமணி நேரம் அங்கிருந்து வெளியே விடாமல் எம்மை (மனோகணேசன், ரவூஃப் ஹக்கீம், ஹந்துன் நெத்தி, சோமவன்ஸ) இராணுவத்தினர் தடுத்த வைத்திருந்தனர். பின்னரே வெளியேற அனுமதித்தனர்.

பொன்சேகாவை மிகக் கேவலப்படுத்தி இழுத்துச் சென்றதை நேரில் பார்த்ததாக முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சரத் பொன்சேகாவை பிடரியில் பிடித்து மிகக் கேவலமான முறையில் இழுத்துச் சென்றனர். நானும், மற்றவர்களும் பார்த்துக் கொண்டிருக்க, அவரை மோசமான முறையில் கைது செய்து கொண்டு சென்றனர் என தெரிவித்துள்ளார்.

கைது தொடர்பாக சர்வதேச சமூகம் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களிடமிருந்து கண்டனங்கள் வெளிவந்தவண்ணமுள்ளன.

சர்வதேச மன்னிப்பு சபை

இலங்கையில் அரசியல் எதிர்கட்சியை உடைப்பதற்கான முதல்படியே சரத் பொன்சேகாவின் கைது நடவடிக்கையாகும் என சர்வதேச மன்னிப்பு சபை குற்றம் சுமத்தியுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற சரத் பொன்சேகா நேற்றிரவு கைது செய்யப்பட்டமையைக் கண்டித்துள்ள லண்டனை மையமாகக் கொண்ட சர்வதேச மன்னிப்பு சபை, தேர்தலுக்கு பின்னர் அரசியல் எதிர்க்கட்சியை உடைக்கும் அரசாங்கத்தின் செயலையே இது பிரதிபலிக்கிறது எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச மன்னிப்பு சபையின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் சேம் சாராபி இது தொடர்பில் கருத்துரைக்கையில், சரத் பொன்சேகாவின் கைது தேர்தலுக்கு பின்னரான அடக்குமுறை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல் வெற்றியின் பின்னர், தமிழீழ விடுதலைப்புலிகளை வெற்றிக்கொண்ட பின்னரும் நாட்டின் மனித உரிமைகளை சிறந்தமுறையில் பேணவேண்டும் எனவும் பொன்சேகா மீது போர்க்குற்றங்கள் இருக்குமாயின் அதனை நியாயமான முறையில் விசாரணை செய்யவேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.

ஐநா செயலாளர் பான் கீ மூன்


இலங்கையில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமையை அடுத்து அங்குள்ள அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் வன்முறைகளைக் கையாளக்கூடாது என ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டமை தொடர்பாக, செய்தியாளர்கள் பான் கீ மூனின் பேச்சாளரிடம் வினவியபோது, இந்த சம்பவத்தின் பின்னர் அமைதியைக் கடைப்பிடிப்பது நாட்டின் சமாதானத்திற்கும் இணக்கப்பாட்டுக்கும் முக்கியமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தேர்தல் காலங்களில் மட்டுமன்றி ஏனைய காலங்களிலும் மக்கள் கோபமூட்டும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்கா


முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் கைது, இலங்கையில் யுத்த மீட்சிக்குப் பின்னர் பாரிய பிளவுகளுக்கு வழியை ஏற்படுத்திவிடும் என அமெரிக்கா அச்சம் வெளியிட்டுள்ளது.

சரத் பொன்சேகாவின் கைது தொடர்பாக கருத்துரைத்துள்ள, அமெரிக்க ராஜாங்க திணைக்கள பேச்சாளர் பிலிப் கிரௌலி,

'அமெரிக்கா இலங்கை நிலைமையை அவதானித்து வருகிறது. அத்துடன் இலங்கையின் சட்டங்களுக்கு உட்பட்ட நடவடிக்கைகளையும் உன்னிப்பாக அவதானிக்கிறது.

இலங்கை அரசாங்கம், சமூகத்தில் ஏற்படும் அமைதியின்மையைப் போக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். சரத் பொன்சேகாவின் கைது நடவடிக்கை, இலங்கையின் சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

இலங்கை அரசாங்கம், ஜனநாயக விழுமியங்களுக்கு இடம்கொடுக்க வேண்டும். பொதுத் தேர்தல் நடைபெறப் போகும் இச்சந்தர்ப்பத்தில், இந்த கைது நடவடிக்கை தேவையற்ற செயல்' என்றார்.

சரத் பொன்சேகா, அமெரிக்க 'கிரீன் கார்ட்' வதிவிட அனுமதியைக் கொண்டுள்ள நிலையில் இந்த கருத்தை அமெரிக்கா வெளியிட்டிருப்பது இலங்கையின் அரசியல் மட்டத்தில் விமர்சனங்களைக் கொண்டுவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இக்கைதினூடாக இலங்கையில் அரசியல் நிலவரங்களில் பாரிய தளம்பல் ஒன்று ஏற்பட வாய்புள்ளது. எதிர்காலத்தில் ஆர்பாட்டங்கள் சத்தியாக்கிரகங்கள் என ஆரம்பிக்கப்பட வாய்புக்கள் உண்டு. இந்நிலைமைகளை அரசாங்கம் நிச்சயமாக இராணுவ , பொலிஸ் பலம் கொண்டு அடக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படும்போது நிலைமைகள் மிகவும் மோசமடைய மேலும் வாய்ப்புக்கள் உண்டு என்பதுடன் மேலும் பல அரசியல்வாதிகளும் கைது செய்யப்படமாட்டார்கள் என உறுதியாக கூறிவிட முடியாத நிலை தோன்றியுள்ளது.

இவ்வாறு நாடு பாரிய சிக்கல்களை எதிர்நோக்கி நிர்கின்றதருணத்தில் ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என புலிகளும் புலிகளின் ஊது குழல்களும் கொக்கரிப்பதை அவதானிக்க முடிகின்றது. ஏதோ யுத்தக் குற்றம் தொடர்பாக சரத் பொன்சேகா சாட்சி சொல்ல முனைந்ததாகவும் , அதனை தடுப்பதற்காகவே அரசாங்கம் அவரை கைது செய்ததாகவும் புலிகள் தமிழ் மக்களுக்கு மீண்டும் உசுப்பேற்றி யுத்த மாயைக்குள் தள்ள முயற்சிப்பதையும் காண முடிகின்றது. இக்கைதானது முற்றிலும் தென்னிலங்கை அரசியலுடன் சம்பந்தப்பட்டது என்பதையும் புலிகள் கூறும் சர்வதேச நீதிமன்று எல்லாம் வெறும் கனவுக்கோட்டை என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். சர்வதேசமே புலிகளை பயங்கரவாதிகளாக அறிவித்தபின்னர், சர்வதேச நீதிமன்று புலிகளுக்கு நீதி சொல்லப்போகின்றது என்பதெல்லாம் வெறும் பகல்கனவு.

அவ்வாறு உண்மையில் சர்வதேச நீதிமன்று செல்லவேண்டுமாக இருந்தால் பிரபாகரனின் தாய், மற்றும் இடைத்தங்கல் முகாம்களிலிருந்து தமிழ் மக்களின் கோடிக்கணக்கான பணத்தினை செலவளித்து வெளநாடுகளுக்கு வந்துள்ள புலிகளின் முக்கியஸ்தர்கள் , அவர்களின் மனைவி , மக்களை சாட்சியங்களாக கொண்டு சென்று வழக்கினை தொடரமுடியும். காரணம் இவர்கள் நடைபெற்று முடிந்துள்ள யுத்தத்தின் நேரடிச் சாட்சிகளாவர். இவர்களை பத்திரமாக வைத்துக்கொண்டு பொன்சேகாவின் சாட்சியை எதிர்பார்பது நியாயமற்றது. அத்துடன் அவரது சாட்சி அரசியல் குரோதம் காரணமாக சோடிக்கப்பட்டது என நிராகரிக்கப்படவும் வாய்ப்புண்டு.

எது எவ்வாறாயினும் விசாரணை ஒன்று நடாத்தப்படவேண்டும் அப்போதுதான் புலிகளின் தலைவர் கோமணத்துடன் சரணாகதியடைந்த பின்னர் கொலை செய்யப்பட்டாரா அல்ல நேருக்கு நேர் நின்று நெஞ்சில் துப்பாக்கிச் சூடுவாங்கினாரா என்பது புலனாகும்.

1 comments :

Anonymous ,  February 9, 2010 at 6:57 PM  

As a best Ex-military commander they would have given him the due respect.
because his name has a big value in the hitory of Srilanka.but the funny part of the arrest is some guys are taking this matter as a propaganda for their media and surviving.Opportunists always cry for own their benefit.We're really sorry for the poor wife and children.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com